பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: ப்ரீதம் சிவாச் இந்திய பெண் பயிற்சியாளர்கள் குறித்துக் கூறியது என்ன?

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியல் டெல்லியில் இன்று (ஜனவரி 16) அறிவிக்கப்பட்டது.

கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான மனு பாக்கர், அவனி லெகாரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த (2024) ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீராங்கனைகளின் முக்கியப் பங்களிப்புகளைச் சிறப்பிற்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள வீராங்கனைகள் வாக்களிக்கும் செயல்முறைக்குச் செல்ல வேண்டும். இந்திய நேரப்படி ஜனவரி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணி வரை மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிப்ரவரி 17ஆம் தேதி திங்கள் கிழமையன்று புதுடெல்லியில் நடைபெறும் சிறப்பு விழாவில் இந்த விருதின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

மேலும், பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையின் ஐந்தாவது பதிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில், துரோணாச்சார்யர் விருது பெற்ற பயிற்சியாளர் ப்ரீதம் சிவாச் மற்றும் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மா ஆகியோரிடமும் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. அவற்றை இங்கு பார்ப்போம்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் என்ன?

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

கிரித்தி ஷர்மா, வெப்துனியா: “கணவரின் வெற்றிக்குப் பின்னால் மனைவி இருக்கிறார், அதேபோன்று மனைவியின் வெற்றிக்குப் பின்னாலும் கணவர் இருக்கிறார். ராணுவத்தில் சேவை செய்யும் உங்கள் கணவரும் உங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். ஒன்றாகப் பயிற்சி செய்வதன் செயல்முறை என்ன? இந்தச் செயல்முறை எப்படி, எப்போது தொடங்கியது?”

பாராதடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மா: நாங்கள் 2017இல் திருமணம் செய்துகொண்டபோது, ​​நான் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை அவர் (கணவர்) என்னிடம் கேட்டார்.

எனது டி-ஷர்ட்டில் இந்தியா என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று நான் கூறினேன். நான் மிகவும் சாதாரணமாகத்தான் அதைச் சொன்னேன். ஆனால், அவரோ ‘இதற்காக நீ கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்’ என்று பதிலளித்தார்.

ஆண்கள் இவ்வளவு மும்முரமாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைச் சுற்றி யாரும் அப்படி இருந்ததில்லை. எங்களுக்கு திருமணம் முடிந்த மறுநாள் ஜிம்முக்கு செல்லத் தயாராகுங்கள் என்று என் கணவர் கூறினார்.

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

எனது கைகளில் மருதாணி இருந்தது, டிராக் சூட் அணிந்திருந்தேன். திரும்பி வந்ததும், மணப்பெண்ணைப் பார்க்க வந்தவர்கள், ‘மணமகள் எங்கே?’ என்றார்கள். ‘நான் தான்’ என்றேன். அங்கிருந்து போராட்டம் தொடங்கியது.

மக்கள் என் மாமியாரை விமர்சிக்கத் தொடங்கினர், நான் அணிந்திருந்த ஆடைகள் குறித்துக் கேள்வி எழுப்பினர். யார் மகள், மருமகள் யார் என்று தெரியவில்லை, முக்காடு போட மறுப்பதால், உங்கள் மருமகள் தனிச்சிறப்பு வாய்ந்தவரா என்றெல்லாம் கேட்டார்கள்.

ஆனால் எனது கணவர், “என் மனைவி தனித்தன்மை வாய்ந்தவள். அவள் ஒலிம்பிக்கிற்கு சென்று ஷார்ட்ஸ் அணிந்து ஓடும்போது, ​​நீங்கள் பார்க்க மாட்டீர்களா?” என்றார். அதற்கு நான் சிரிக்க ஆரம்பித்தேன். அவர். “ஏன் சிரிக்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார்.

“நீங்கள் ஒலிம்பிக் பற்றி பேசுகிறீர்கள், அதைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போதே எனக்கு வியர்க்கிறது, அதனால் தான் சிரிக்கிறேன்” என்று கூறினேன். என் கணவரோ, “உன்னால் முடியாது என்று நினைக்கிறாய். ஆனால் நீ சாதிக்க நான் உதவி செய்வேன்” என்று உத்வேகம் அளித்தார்.

அந்த நேரத்தில் நான் அவ்வளவு வலுவாக இல்லை, ஆனால் அவர் (என் கணவர்) அதைச் செய்யத் தயாராக இருந்தார். திருமணமான இரண்டு மூன்று ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்தது. தொழில்முறை விளையாட்டு அதிக செலவுகளை உள்ளடக்கியதால், என் கணவர் வைத்திருந்த நிலத்தை விற்று எனக்கு உதவினார்.

பயிற்சியாளர் ப்ரீதம் சிவாச் தனது விளையாட்டுப் பயணம் பற்றிக் கூறியது என்ன?

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

பட மூலாதாரம், ANI

நோரேஷ் ப்ரீதம், விளையாட்டு பத்திரிகையாளர்: “பிரிதம், நீங்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியபோது உங்கள் மகனின் வயது 7 மாதங்கள். இப்போது அவரும் விளையாடுகிறாரா அல்லது அவரை இருக்கச் சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் விளையாடுகிறீர்களா?

பிரிதம் சிவாச்: என் இரண்டு குழந்தைகளும் ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடுகிறார்கள். அதோடு, நான் பயிற்சி அளிக்கும் சோனிபட்டில், 11 குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

அவர் (சிம்ரன்) சொன்னது போல், எங்களுக்கும் இதேபோன்ற கதை உள்ளது. சிம்ரன் இன்றைய காலத்தைச் சேர்ந்தவர், என் கதை 20-25 ஆண்டுகளுக்கு முந்தையது. அதில் நிறைய சிரமங்கள் இருந்தன. இவை அனைத்தும் நடக்கும், ஆனால் நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

சமூகத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படித்தான் நான் ஒரு அணியை உருவாக்க நினைத்தேன். இப்போதைய வீராங்கனைகள் என்னைப் போல் அதிகம் போராட வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். எனக்கும் ஆர்வம் இருந்தது. எனக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது, துரோணாச்சார்யர் விருதும் கிடைத்தது.

இத்தனை ஆண்டுகள் விளையாடிய பிறகு நான் சமூகத்திற்குத் திருப்பித் தரவேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் 20 ஆண்டுகளாகப் பயிற்சியாளராக இருக்கிறேன். ஹாக்கியில் துரோணாச்சாரியார் விருது பெற்ற ஒரே பெண் நான்தான்.

விளையாட்டில் பெண் பயிற்சியாளர்கள் பற்றாக்குறை இருப்பது ஏன்?

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

விளையாட்டு செய்தியாளர் சாரதா உக்ரா: “ப்ரீதம், நீங்கள் மட்டுமே பெண் துரோணாச்சாரியார் விருதை வென்றுள்ளதாகக் கூறினீர்கள். விளையாட்டில் பெண் பயிற்சியாளர்களின் தேவை எவ்வளவு இருக்கிறது, அவர்களுக்கு ஏன் பற்றாக்குறை உள்ளது? பெண் பயிற்சியாளர்கள் தொடர்பான நிலைமை மாறிவிட்டதா?”

ப்ரீதம் சிவாச்: இதுவொரு நல்ல கேள்வி. ஆண்கள் தவறாக உணரக்கூடாது. ஆனால், நமது சமூகத்திலும் இந்தியாவிலும், ஆண்களே இங்கு ஆதிக்கம் செலுத்துவதை நான் பார்க்கிறேன்.

பெண்கள் நீண்ட தூரம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எனது பகுதியில் நான் விளையாடுவதைப் பார்த்த, எனது முழு வாழ்க்கையையும் பார்த்த நிறைய பத்திரிகையாளர்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

நான் என் வாழ்க்கையை விளையாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். முதல் 20 ஆண்டுகள் விளையாட்டிலும், அடுத்த 20 ஆண்டுகள் பயிற்சியிலும் கழித்தேன்.

இன்று, துரோணாச்சாரியார் விருதைப் பெற்ற பிறகும், ஒரு பெண் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியும் சூழல் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 'இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவதில்லை'

அவர்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு நம்பிக்கை வளரவில்லை. ஒரு வெளிநாட்டுப் பெண்ணை அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால், இந்திய பெண் பயிற்சியாளர்களை நம்புவது இல்லை.

இதுவொரு பெரிய உண்மை. நாங்கள் இப்படித்தான் நினைக்கிறோம். குறிப்பாகப் பயிற்சியில் என்பதை இங்குள்ள வீரர்களால் சொல்ல முடியும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அடிமட்டத்தில் இருந்து வீராங்கனைகளை உருவாக்கி, இந்தியாவுக்காக அவர்களைத் தயார் செய்யும்போது, பெண் பயிற்சியாளர்களால் மேல் மட்டத்தில் வேலை செய்ய முடியாதா?

அப்படியானால், நம்பிக்கை வரவேண்டும். இந்த விருதுகள் கொடுக்கப்பட்டபோது, என் பெயரை இரண்டு ஆண்டுகளுக்கு அனுப்பினேன். அப்போது ஒரு பெண்ணுக்கு துரோணாச்சாரியார் விருது கிடைக்குமா என்று கேட்டார்கள். பிறகு என் மனதில் “ஏன் ஒரு பெண்ணுக்கு அது கிடைக்கக்கூடாது?” என்ற கேள்வி வந்தது.

நான் சவாலை ஏற்றுக்கொண்டேன். அனைத்துப் பெண்களும் உழைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பல பெண்கள் நம்மை முன்னேற விடமாட்டார்கள் என்று நினைத்துப் பின்வாங்கிறார்கள். நமக்காக நாமே முன்வந்து போராடாவிட்டால், நம்மால் எதையும் அடைய முடியாது.

நான் நிறைய போராடியுள்ளேன். அனைவரும் போராட வேண்டும். பெண்கள் முன்வர வேண்டும், பயிற்சி எடுக்க வேண்டும். அனைத்துக்கும் பெண்கள் வர வேண்டும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு