நரேந்திர மோடி,  டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தனது நண்பர் என்று அழைத்தாலும், இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகப் பலமுறை பேசியுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு தேசியளவிலும் உலக அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தன. ஒவ்வோர் ஆண்டின் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் அவற்றின் அடையாளத்தை விட்டுச் செல்கின்றன.

அதாவது 2024இல் என்ன நடந்ததோ அதன் தாக்கம் 2025லும் தெரியும்.

கடந்த ஆண்டு உலகின் பல நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அரசுகள் அல்லது தேர்வு செய்யப்பட்ட தலைவர்களின் நடவடிக்கைகளின் தாக்கம் 2025இல் தெளிவாகத் தெரியும்.

இந்தத் தேர்தல் முடிவுகளும், புதிய அரசுகளின் முடிவுகளும் அந்நாட்டின் அரசியலை மட்டும் பாதிக்காமல், அவற்றின் தாக்கம் உலக அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

அதன் அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீண்டும் வருவதால் உலகளாவிய தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்தியாவைப் பொருத்தவரை, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் வளர்ச்சிகள் என்னவாக இருக்கும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2025ஆம் ஆண்டு இந்தியாவில் என்ன மாற்றம் வரும்?

இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகிறது, இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 2024இல் நடைபெற்ற தேர்தல்கள், வரவிருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் சில சிக்கல்களையும் நிகழ்வுகளையும் முன்வைத்துள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. இப்போது அவை வரவிருக்கும் தேர்தல்களில் தங்கள் நிலையை வலுப்படுத்தக்கூடிய அதே ஃபார்முலாவில் செயல்பட விரும்புகின்றன.

பெண்களின் பங்கேற்பு 2024 தேர்தலில் அதிகரித்துள்ளது. இதுவொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தல்களில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று அரசியலில் செல்வாக்கு செலுத்தினர்.

இதற்கு ஒரு பெரிய உதாரணம் மகாராஷ்டிரா தேர்தல் களம்தான். அங்கு பெண்கள் `கேம் சேஞ்சர்களாக’ உருவெடுத்து அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கினர்.

மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரி 2025ஆம் ஆண்டின் சூழலை முன்வைத்து சில முக்கியமான விஷயங்களை தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையிலான உறவு மறுசீரமைக்கப்படும்.

“பாஜகவுடன் ஆர்எஸ்எஸ் அவ்வளவு திருப்திகரமாக இல்லை, ஆனால் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் வலுப்படுத்தும் விஷயங்களை செய்ய அவர்கள் விரும்பவில்லை” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, 2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில், தலித் சமூகத்தில் ஒரு புதிய ஆற்றலும், பெண் வாக்காளர்கள் மத்தியில் வித்தியாசமான பார்வையும் காணப்படுகிறது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி ஒருமுறை மட்டுமே சென்ற நாடுகளும் உலகில் உள்ளன, அதில் பாகிஸ்தானும் ஒன்று.

தலித் சமூகம் இப்போது குரல் எழுப்புவதையும், அதன் தாக்கம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகக் காணப்படலாம் என்பதையும் இது குறிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிக வேகமாக வளரும். இது நம் வாழ்வில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். நம்மால் இன்னும் அதற்குத் தயாராகவோ அல்லது அதன் தாக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ ​​முடியவில்லை” என்றார்.

இந்தியா வரும் காலங்களில் சில முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தூதரக நிபுணர் ஸ்வஸ்தி ராவ் கூறினார்.

“கோவிட் காலத்தில் இருந்து பராமரிக்கப்பட்டு வரும் நமது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நமது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறினார்.

ஸ்வஸ்தி ராவ் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் பேசினார். “பாதுகாப்பு வரைபடம் மிக வேகமாக மாறுகிறது. இந்தியா விமான எஞ்சின்களை பற்றி யோசித்து, எந்த எஞ்சினை உருவாக்குவது என்று முடிவு செய்து கொண்டிருந்தபோது, ​​சீனா ஜெனரேஷன்-6 போர் விமானத்தை வெளியிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே சீனாதான் 5வது தலைமுறை விமானத்தை உருவாக்கும் நிலையில் இருந்தது” என்றார்.

அதோடு, “முப்பது ஆண்டுகளில் எடுக்க வேண்டிய முடிவுகளை, குறைந்த நேரத்தில் எடுக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறினார்.

அரசியல் ஆய்வாளர் ஜெய் மிரிக் கருத்துப்படி, 2025இல் பாஜக தலைவர் யார் என்பது குறித்த முக்கியமான கேள்வியான எழும். “மகாராஷ்டிரா தேர்தல் நிகழ்வுகள் நமது அரசியலின் பரிமாணத்தையே மாற்றிவிட்டன” என்கிறார் ஜெய் மிருக்.

இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, `இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்டுவரப் போகிறது’

ரஷ்யா – யுக்ரேன், இஸ்ரேல் – ஹமாஸ் போர், அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம், சீனாவின் அணை, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவது, மத்திய கிழக்கு நாடுகள் கொந்தளிப்பில் மூழ்கியிருப்பது ஆகியவை 2025ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பல சவால்களைக் கொண்டுவரப் போகிறது, அதைத் தீர்ப்பது எளிதானது அல்ல.

மூத்த பத்திரிக்கையாளர் ஷிவ்காந்த், இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தார்.

ஷிவ்காந்த் கருத்துப்படி, உலகமயமாக்கலில் இருந்து பாதுகாப்புவாதத்தை நோக்கி உலகம் நகர்வது மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று. மேலும் இந்தச் செயல்முறை டொனால்ட் டிரம்ப் தலைமையில் இருக்கும்.

“ராணுவ சக்திக்குப் பதிலாக பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கி உலகம் படிப்படியாக நகர்கிறது. டிரம்பின் அமெரிக்கா ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதை விட்டுவிடப் போவதில்லை, ஆனால் அதை ஒரு மிரட்டலாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறது.

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் இந்தியாவின் வர்த்தகக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் இன்னமும் பாதுகாப்புவாதத்தில் முழுமையாக வளர்ச்சியடையவில்லை” என்றார்.

சீனாவின் வளர்ந்து வரும் சக்தி

இரண்டாவது பெரிய சவால் சீனாவின் வளர்ந்து வரும் சக்தி.

“சீனா உடனான வர்த்தகத்தை எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பதில் இந்தியாவுக்கு சிக்கல் உள்ளது” என்கிறார் ஷிவ்காந்த்.

“எல்லைப் பிரச்னையில் கடந்த ஆண்டு சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனாவுடன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் இந்தியா மிகவும் கவனமாக முன்னேற வேண்டும். ஏனெனில் சீனாவை முழுமையாக நம்புவது கடினமான ஒன்று.”

பிரம்மபுத்திரா மீது அணை கட்டும் சீனா

இந்த ஆண்டு டொனால்ட் டிரம்பின் இலக்காக இந்தியா இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

“இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல பிரச்னைகளை உருவாக்கும் பிரம்மபுத்திரா நதியில், திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டப் போகிறது. இது மற்றொரு முக்கியமான சவால்.

இது மற்றொரு தீவிரமான பிரச்னையாக இருக்கும். நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால் இந்தியாவிற்கு இது பிரச்னையாக இருக்கும்” என்கிறார் ஷிவ்காந்த்.

பாகிஸ்தானின் காஷ்மீர் பிரச்னை

“ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இந்த ஆண்டு தற்காலிக உறுப்பினராக உள்ளது. மேலும் அது காஷ்மீர் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பும்.

இது இந்தியாவுக்கு நீண்ட மற்றும் தொடர்ச்சியான சவாலாக இருக்கும். ஏனெனில் சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதில் பாகிஸ்தான் எந்த முயற்சியையும் விட்டுவிடாது” என்றார் ஷிவ்காந்த்.

தெற்காசியாவில் தலைமைத்துவ சவால்

ஷிவ்காந்த் இதுபற்றி முன்வைத்த கருத்து, “தெற்காசியாவில் தற்போது வலுவான தலைமை இல்லை, தெற்காசியாவை வழிநடத்தும் நிலையில் இந்தியா உள்ளது,” என்பதுதான்.

“ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமநிலையைப் பேண வேண்டும். சீனாவை இந்தியா முந்த வேண்டும் என்றால், அது தெற்காசியா நாடுகளை வழிநடத்த வேண்டும். இருப்பினும், இந்தப் பணி இந்தியாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் தெற்காசியாவில் பல நாடுகளுக்கு இடையே பல்வேறு நலன்களும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன” என்றார்.

டிரம்ப் ஆட்சியால் என்ன மாற்றம் வரும்?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, அவரது வெளியுறவுக் கொள்கை என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. தெற்காசியாவை டிரம்ப் எவ்வாறு கையாள்கிறார் என்பதும் இந்தியாவுக்கு முக்கியமானது.

டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தெற்காசியாவை எவ்வாறு பாதிக்கும்? அதை இந்தியா எவ்வாறு எடுத்துக் கொள்ளும்?

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தனது நண்பர் என்று அழைத்தாலும், இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகவும் பலமுறை பேசியிருக்கிறார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஷிவ்காந்த், டொனால்ட் டிரம்பின் வருகைக்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்துப் பேசியபோது, “டிரம்பின் வருகையால் ஐரோப்பாவின் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கப் போகிறது” என்றார்.

மேலும், “ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தில் எந்த சலுகை விகிதங்களும் செயல்படுத்தப்பட வாய்ப்பில்லை. டிரம்பின் வர்த்தகக் கொள்கை ஐரோப்பாவுக்கு கடினமாக இருக்கலாம்.”

“இந்தச் சூழ்நிலையில், இந்தியா முக்கிய தேர்வாக உருவாகலாம். ஆனால் டிரம்ப் விரும்பும் வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவால் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இந்தியாவுக்கு சில சலுகைகள் தேவை, அதை ஐரோப்பா இப்போது கொடுக்கத் தயாராக இல்லை. எனவே, இந்த ஆண்டு ஐரோப்பாவின் நிலைமை மிகவும் சிக்கலானதாக இருக்கும்” என்கிறார் ஷிவ்காந்த்.

சிரியா குறித்தும் ஷிவ்காந்த் பேசினார். “சிரியா முன்பிருந்த அதே பாதையில் செல்ல முடியும். ஒரு புதிய அரசாங்கம் அங்கு வந்தாலும், இந்தப் புதிய அரசின் தன்மை மற்றும் திசை குறித்து மக்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை” என்றார்.

அவரது கூற்றுப்படி, இந்த ஆண்டு மத்திய கிழக்கில் அமைதி நிலவக்கூடும். “ஆனால் அது தவிர, ஐரோப்பாவின் நிலைமை இன்னும் சிக்கலானதாகவே இருக்கும்.”

டெல்லி மற்றும் பிகாரில் நடைபெற உள்ள தேர்தல்

டெல்லி தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறலாம் என்பதால், மூன்று பெரிய கட்சிகளும் இதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிகாரிலும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இந்த முறை தேர்தல் சற்று வித்யாசமாக இருக்கலாம். இம்முறை பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சியான ஜான்சுராஜும் இந்தத் தேர்தலில் பங்கேற்கப் போகிறது என்பது மிகப்பெரிய விஷயம்.

இவ்வாறான நிலையில் ஜான்சுராஜ் கட்சியால் எந்தக் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிகார் அரசியலில் பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கைப் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் அவரது உத்தியும் பொதுமக்களுடனான தொடர்பும் எப்போதும் தேர்தலில் தீர்க்கமான பங்கை வகிக்கிறது.

டெல்லி தேர்தல்

டெல்லி தேர்தல் குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி, “2025ஆம் ஆண்டு பிராந்திய கட்சிகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இம்முறை டெல்லியில் சிறப்பான போட்டி காணப்படுகிறது. பாஜகவின் நிலை வலுவாகத் தெரிகிறது, ஆனால் காங்கிரஸ் இன்னும் 8-9 சதவீதம் அதிகமாகப் பெற்றால், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும், காங்கிரஸ் தற்போதைய நிலையில் இருந்தால், கேஜ்ரிவாலுக்கு வெற்றி எளிதாகிவிடும்” என்றார்.

“நீங்கள் டெல்லி மக்களிடம் பேசினால், அவர்கள் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவாளராகக் கருதுகிறார்கள், இது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கலாம்” என்றார்.

அரசியல் ஆய்வாளர் ஜெய் மிருக், டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். “டெல்லியின் வரலாற்றைப் பார்க்கும்போது, 2014 முதல் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையே எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதைக் காட்டுகிறது.”

“முன்னதாக, காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்கள் மட்டுமே புதிய கட்சிகளை உருவாக்க முடியும். ஆனால் 2007-08க்குப் பிறகு, பிப்ரவரி 2015இல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சி நிறுவப்பட்ட சில ஆண்டுகளில் அது டெல்லி அரசியலுக்கு புதிய திசையை அளித்துள்ளது” என்றார் அவர்.

பிகார் தேர்தல்

இந்த ஆண்டு டொனால்ட் டிரம்பின் இலக்காக இந்தியா இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிகார் தேர்தல் குறித்து நீரஜா செளத்ரி கூறுகையில், “நிதீஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்தால் வெற்றி நிச்சயம், ஆர்ஜேடியுடன் சென்றாலும் வெற்றி பெறுவார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் தற்போது பிரசாந்த் கிஷோர் ஒரு புதிய அங்கமாக வெளிப்பட்டது.”

“மேலும், பிகாரில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் ஆர்ஜேடி கட்சிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்திவிட்டார். இப்போது அவரது பங்கு முக்கியமானதாக இருக்கலாம், அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கலாம்” என்றார்.

ஜெய் மிருக் பிகார் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில், “பிரசாந்த் கிஷோரின் வாக்குகளைப் பார்த்தால், சில இடங்களில் நல்ல முடிவுகள் வந்துள்ளன. அவர் ஒரு கட்சியில் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்துள்ளார். அதில் கிடைத்த முடிவுகளை மோசமான முடிவுகள் என்று சொல்ல முடியாது” என்றார்.

இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்க முடியுமா?

மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டது என்றார். ஆனால் மற்ற மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதன் செயல்பாடு சிறப்பாக இல்லை என்கிறார்.

“காங்கிரஸின் அமைப்பு இன்னும் பலவீனமாக உள்ளது, இது ஓர் அடிப்படை உண்மை. எனவே, இந்திய கூட்டணி தற்போதைக்கு ஒற்றுமையாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் அது வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருக்கிறது” என்றும் கூறினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு