அதானி குழுமத்தை அசைத்துப் பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவது ஏன்?
- எழுதியவர், செரில்லன் மொல்லன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன?
அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டது.
இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன், நிறுவனத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை மூடப் போவதாக புதன்கிழமையன்று அறிவித்தார்.
முன்னதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய பணக்காரர் கெளதம் அதானியின் குழுமத்தைப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டது.
அந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் தலைப்புச் செய்தியாக மாறியது. இதன் விளைவாக, அரசியல் விவாதங்களும், அதானி நிறுவனத்திற்குக் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளும் ஏற்பட்டன.
ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் அதை மூடுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் என்பது என்ன?
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், உண்மையில் ஒரு ஷார்ட் செல்லர் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பதுதான் ஷார்ட் செல்லிங் எனப்படும்.
பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதைக் குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள்.
முதலீட்டுத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கம் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன?
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது.
சுருக்கமாகச் சொல்வதெனில் அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது” என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.
இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியது ஹிண்டன்பர்க் அறிக்கை.
அதானி நிறுவனங்களுக்கு “கணிசமான கடன்” இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் யாவை?
கடந்த 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சில புகழ்பெற்ற வணிகங்களில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்பலப்படுத்தியதன் மூலம் பிரபலமானது.
அது மட்டுமின்றி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்கள் சந்தை மதிப்பில் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்க வழிவகுத்தன.
“எங்களது பணியின் மூலம் கோடீஸ்வரர்கள் மற்றும் தன்னலக்குழுக்கள் உள்பட கிட்டத்தட்ட 100 நபர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சில பேரரசுகளை நாங்கள் அசைத்துள்ளோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவது குறித்து தனது முடிவை அறிவித்த அறிக்கையில் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், மின்சார டிரக் தயாரிப்பாளரான நிகோலா கார்ப், அதன் தொழில்நுட்பங்கள் குறித்து முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்துவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது.
அதன் பிறகு, 2022ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ட்ரெவர் மில்டன், முதலீட்டாளர்களிடம் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டு மோசடி செய்ததாகக் கண்டறியப்பட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக, “பங்கு கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாக” குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதானியும் அவரது நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை “தீங்கிழைக்கும்” நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகவும் “இந்தியா மீதான தாக்குதல்” என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கைகைக்கு பதில் கூறியது.
அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அதானி குழுமம், அதன் சந்தை மதிப்பில் சுமார் 108 பில்லியன் டாலரை இழந்தது.
கடந்த ஆண்டு, அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.
ஆனால் மாதபி பூரி புச் மற்றும் அதானி நிறுவனம், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் தீவிர அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தது.
அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக ஆட்சி தவறிவிட்டதாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி, பிரதமர் மோதிக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுகிறார். இந்த அரசியல் தொடர்புகளால் அவர் பயனடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர், ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
மறுபுறம், ஆண்டர்சன் வெளியிட்டுள்ள அவரது அறிக்கையில், எதிர்காலத்தில் ஹிண்டன்பர்க்கின் ஆராய்ச்சி முறை குறித்து பொதுவெளியில் அறிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆறு மாதங்களில், அவர்களது ஆராய்ச்சி மாதிரி மற்றும் விசாரணை முறைகள் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தகவல்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று ஆண்டர்சன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிண்டன்பர்க் பகுப்பாய்வு நிறுவனம் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள், தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில், மோசடி அல்லது நிதி சார்ந்த பிற தவறுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் நம்பும் நிறுவனங்களின் பங்குகளுக்கு எதிராக முதலீடு செய்கின்றனர்.
அவர்களுடைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இத்தகைய நிறுவனங்களை ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளைக் கடன் வாங்கி, அதை உடனடியாக விற்று, பின்னர் அதன் மதிப்பு குறையும்போது மீண்டும் வாங்குவதன் மூலம் லாபம் பெறுகின்றன.
ஷார்ட்-செல்லிங் என்பது ஒரு பங்கைக் கடனாகப் பெற்று, அதை உடனடியாக விற்று, பின்னர் அதன் மதிப்பு குறையும் போது ஏற்படும் வித்தியாசத்தில் லாபம் பெறுவதற்காக அதை மீண்டும் வாங்குவதை உள்ளடக்கிய ஒரு பங்குச்சந்தை முறை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.