இந்திய அதானி நிறுவனத்தின் மின் உற்பத்தி நிறுவனத்தின் காற்றாலைகளை மூடிவிட முற்பட்டுள்ள இலங்கை அரசு மறுபுறம் சீன மின் உற்பத்தி நிலையங்களிற்கு செங்கம்பள வரவேற்பை வழங்கமுற்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
சுமார் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ், ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கின் பூநகரி மற்றும் மன்னார் மாவட்டங்களில் அதானி நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளை தடுக்கப்போவதாக தெரிவித்தே அனுர அரசு தேர்தலில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.