முதல் வெற்றியைப் பதிவு செய்தார் இஸ்ரோவின் தலைவர் நாராயணன்!

by smngrx01

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராகப்  பொறுப்பேற்றுள்ள நாராயணன் தனது  முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்காக இஸ்ரோ சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ)  ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) எனப் பெயரிடப்பட்ட 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட குறித்த செயற்கைக் கொள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி அவற்றை ஒன்றுடன் ஒன்று  இணைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டுவந்தது.

இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ரொக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த 30-ஆம்  திகதி விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீற்றர் தூரத்தில் இருந்து 15 மீற்றராகக் குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக   இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா,அமெரிக்கா, சீனாவைத்  தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வெற்றி விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்