உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வெளிநாட்டவர் தகுதி நீக்கம் – சமீபத்திய தகவல்கள்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 16) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும்போது டோக்கன் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 7 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். களத்தில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் அவர் வழங்குகிறார். இந்நிகழ்வின்போது, உதயநிதியின் மகன் இன்பநிதி உடனிருந்தார்.
வெளிநாட்டை சேர்ந்தவர் தகுதிநீக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் இன்று காலை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்றார்.
அவரது வயது மூப்பை காரணம் காட்டி, அவரை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்குவதற்கு தகுதி நீக்கம் செய்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அவருக்கு வயது 54. இது வரை கான் உட்பட 13 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலை 10.00 மணி நிலவரப்படி,
பரிசோதனைக்கு வந்த மொத்த காளைகள் – 201
பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டவை – 200
பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காளைகள் – 0
முதல் சுற்று முடிவு
முதல் சுற்று முடிவில்,
களம் கண்ட காளைகள்: 110
பிடிபட்ட காளைகள்: 14
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவர்கள்: 4
சூர்யா (Y 3) – 3 காளைகள்
தினேஷ் (Y 50) – 2 காளைகள்
கண்ணன் (Y 24) – 2 காளைகள்
கௌதம் (Y 28) – 2 காளைகள்
மூன்றாம் சுற்று முடிவின் நிலவரம்
தகுதியான மாடுபிடி வீரர்கள்: 314
தகுதி நீக்கம்: 33
போலி டோக்கன்கள்: 13
வயது மூப்பு: 01
மொத்தம்: 347
போலி டோக்கன் பெற்ற 13 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசுகள் விவரம்
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுவதுடன் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
அலங்காநல்லூர் போட்டியை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கப்பட்டு அவர்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு