இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

by smngrx01

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் போர் நீடித்த நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்து, நூற்றுக்கணக்கானோரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.

தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய கைதிகளையும் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கினால்தான் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீடிக்கும் போரினால் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்