சமூகவலைத்தளங்கள் உள்ளடங்கலாக நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழுவினால் காலாந்தர மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.
அதன்படி இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 6 ஆம் திகதி காலாந்தர மீளாய்வை முன்னெடுத்துவரும் ஐக்கிய நாடுகள் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை பெண்களுக்கு எதிரான சகல விதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அப்பிரகடனத்தின்படி நிகழ்நிலை முறைமையிலான (ஒன்லைன்) மீறல்கள் உள்ளடங்கலாக சகல விதமான வன்முறைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாப்பதுடன், சமத்துவம் மற்றும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு.
இவ்வாறானதொரு பின்னணியில் பெரும்பாலும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அவர்களது துறை சார்ந்தோராலும், பொதுமக்களாலும் வாய்மொழிமூல மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சமூகவலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அத்துமீறல்கள், அவதூறுகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாம் பரந்துபட்ட ரீதியில் கவனம்செலுத்தியிருக்கிறோம்.
பெண்களை, அதிலும் குறிப்பாக பொதுவெளியிலுள்ள (அரசியல் போன்ற பொதுத்துறைகளில்) பெண்களை இலக்குவைக்கும் இந்தப்போக்கு அவர்களது பாதுகாப்பு, கௌவரம், தனியுரிமை மற்றும் சமத்துவத்துக்கான உரிமை என்பவற்றைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
எந்தவொரு நபரினதும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கு அரசு மதிப்பளிக்கவேண்டியது அவசியம் என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இருப்பினும் ஏனையோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் எனும் நோக்கத்துக்காக அரசு இச்சுதந்திரத்தை சட்டரீதியாக மட்டுப்படுத்தமுடியும்.
நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மீறல்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட தரவுகளைப் பகிர்தல் என்பன பெண்களுக்குப் பாதுகாப்பற்றதொரு இலத்திரனியல் சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளால் மனித உரிமைகள் மீறப்படுவதுடன் மாத்திரமன்றி, பாலின சமத்துவமின்மை மேலோங்குகின்றது. அத்தோடு பொதுத்துறைகள் மற்றும் ஏனைய தொழிற்துறைகளில் பெண்களின் துடிப்பான வகிபாகம் வீழ்ச்சியடைகின்றது.
அண்மையில் நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் கௌஷல்யா ஆரியரத்ன ஆகிய இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்நிலை தளங்களில் மிகமோசமான மீறல்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் போலித்தகவல்கள் பகிரப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்நிகழ்நிலை மீறல்களில் அநேகமானவை இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்.
அதுமாத்திரமன்றி பெண்களுக்கு எதிரான சகல விதமான வன்முறைகளையும் முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான பிரகடனத்தின் கோட்பாடுகள் மற்றும் இலக்குகளில் அநேகமானவை இலங்கையின் உள்நாட்டுச்சட்டமான 2024 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பெண்களை வலுவூட்டல் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பெண்களுக்கு அவசியமான கட்டமைப்புசார் ஆதரவை வழங்குவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் நிகழ்நிலை தளங்களில் நிகழ்த்தப்படும் மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்குமாறு சட்ட அமுலாக்கத்தரப்பினரிடம் வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செய்யப்படும் பதிவுகளை அகற்றுவதற்கும், அதுகுறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரியகாலப்பகுதியில் விசாரணைகளைப் பூர்த்திசெய்வதற்குமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு சமூகவலைத்தளங்களின் உரித்தாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்தோடு சிவில் சமூக அமைப்புக்கள் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் என்பன தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மேலும் பெண்களை வலுவூட்டல் சட்டத்தை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும், பெண்கள் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கும் அவசியமான போதிய நிதியை இலங்கை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.