by adminDev

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து ஆராய்வு தோட்டத் தொழிலாளர்களுக்கான தற்போதைய நாளாந்த சம்பள முறையிலிருந்து மாதாந்த சம்பளக் கொடுப்பனவுக்கு மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளம் கடினமான வேலைப் பளு உள்ளிட்ட நிலைமைகளால் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். இந்நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவர்களின் சம்பளம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப காணப்படவில்லை.

அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் நாங்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறோம் தற்போது தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமே வழங்கப்படுகின்றது.

ஆகவே அவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். தற்போது அது குறித்தும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

நாட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாது நீடித்து வருகின்ற நிலையில் கடந்த காலங்களில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டபோதும் பெரும்பாலான பெருந்தோட்ட கம்பனிகள் அதிகரித்த செலவுகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தி அக்கோரிக்கைகளை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்