இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேதத்தை மதிப்பிடுவதற்கும் தளத்தைப் பாதுகாப்பதற்கும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுகள் மற்றும் கூடுதல் காவல் படைகள் அப்பகுதிகளில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் முக்கிய பகுதியை குறிவைத்து, ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.
எனினும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த ஏவுகணை தாக்குதல் பாதியில் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 நவம்பர் முதல், ஹவுதி படைகள் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.