அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை ! on Wednesday, January 15, 2025
அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் பல அரச நிறுவனங்களும், நீதிபதிகளும் இந்த வீடுகளுக்கான கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்களுக்கான இல்லங்கள் மற்றும் ஜனாதிபதி இல்லங்ககள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது அவற்றை மதிப்பிடுவதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீட்டிற்குப் பிறகு குறித்த இல்லங்கள் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.
குறித்த இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு 9 இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஜனாதிபதி இல்லங்கள் கொழும்பு , கண்டி, நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டி, பெந்தொட்டை மற்றும் மஹியங்கனை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இதேவேளை சில அமைச்சர் இல்லங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிதிப் பிரச்சினை இருப்பதனால் இவற்றை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.