சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவுக்கு 2025ஆம் ஆண்டில் சவாலாக ஐந்து விஷயங்கள் இருக்கப் போகின்றன.
  • எழுதியவர், டாம் ஹார்பர்
  • பதவி, பேராசிரியர், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்

கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது.

ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது.

இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.

அத்தகைய சூழ்நிலையில், 2025ஆம் ஆண்டில் சீனா முன்னுள்ள 5 முக்கிய சவால்கள் என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

சீனா, ஷி ஜின்பிங்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. அமெரிக்காவுடன் மீண்டும் போட்டி

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனாவின் பிரச்னைகள் அதிகரிக்கலாம்

சீனாவின் முக்கியக் கவலையாக 2025இல் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் சாத்தியமான அமெரிக்காவின் ஆக்ரோஷமான அணுகுமுறை உள்ளது.

சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 60 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் ஏற்கெனவே மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கிய வர்த்தகப் போர் இம்முறையும் தொடரும் என்பதற்கான அறிகுறி இது.

அமெரிக்காவுடனான மோதல் சீனாவுக்கு ஒரு முக்கியமான சவாலாக இருக்கும். இருப்பினும், சீனா இதற்குத் தயாராக இல்லை என்று பொருள் அல்ல. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து சீனா பல பாடங்களைக் கற்றுக்கொண்டது.

சீன நிறுவனங்கள் மற்ற பகுதிகளுக்கு விரிவடையும் அதேவேளையில், அமெரிக்க சந்தை மற்றும் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியிருப்பதன் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

சீனாவும் அமெரிக்காவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தவறவில்லை. இதற்குச் சான்றாக, சமீபத்தில் சீனா அரிய உலோகங்களின் ஏற்றுமதியை, பேட்டரி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் உலோகங்களின் ஏற்றுமதியைத் தடை செய்ததைக் குறிப்பிடலாம்.

மறுபுறம், 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் வர்த்தகப் போரைச் சமாளிக்க சீனா இப்போது சிறந்த நிலையில் உள்ளது என்பதும் உண்மை.

2. உலகளாவிய தொழில்நுட்பப் போர்

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொழில்நுட்பத் துறையில் தன்னை மேலும் வலுப்படுத்த சீனா முயல்கிறது

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரி சிக்கல்கள் கவனத்தை ஈர்க்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அடுத்த மோதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படலாம். ஏனெனில் அமெரிக்காவின் வணிக ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக சீனா மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க சீனா முயல்வதால், சீனாவுக்கு தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணியாக மாறி வருகிறது.

மறுபுறம், இந்தத் துறையில் சீனாவை சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்வதே அமெரிக்காவின் முன்னுரிமையாக உள்ளது. செமிகண்டக்டர் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் அமெரிக்கா இதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் தொழில்நுட்பத் துறை தொடர்பான திட்டங்கள் ‘பெய்ஜிங் விளைவு’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் கீழ், டிஜிட்டல் உள் கட்டமைப்புக்கான தரநிலைகளை அமைக்க சீனா முயன்று வருகிறது.

இந்த அணுகுமுறை GDPR (பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை) மூலம் தரவு மேலாண்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முயற்சிகளைப் போன்றது.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் சீனா தொழில்நுட்ப உலகில் தலைமையிடத்தைப் பெற முடியும்.

3. ஐரோப்பிய யூனியன் விதிக்கும் வரி

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது

ஐரோப்பாவுடனான சீனாவின் வர்த்தக மோதலும் சிக்கலானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வரி விதித்துள்ளனர். உதாரணமாக, சீனா பிரான்சுக்கு இறக்குமதி வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீன மின்னணு வாகனங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

மறுபுறம், மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை இப்போது சீனா அணுகத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் நேட்டோவின் பங்கை ஆசியாவில் அதிகரிப்பதற்கான விவாதங்கள் தொடங்கிய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் போர் சீனாவுக்கு தலைவலியாக மாறக்கூடும்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான டிரம்பின் விரோதமான அணுகுமுறை சீனாவிற்கு சாதகமாக செயல்படலாம்.

4. ரஷ்யாவுடன் கூட்டணி

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனா மற்றும் ரஷ்யா இடையேயான கூட்டணி சமீப காலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

தற்போதைய சூழலில், சீனாவிற்கு முக்கியமான நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இதற்குக் காரணம் அங்குள்ள சந்தையும் இயற்கை வளமும் தான். அதேசமயம் பொருளாதார ஆதரவை வழங்குவதில் ரஷ்யாவிற்கு முக்கியமான நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

இருப்பினும், இந்த ஆதரவு ஐரோப்பிய நாடுகளுடனான சீனாவின் உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் கூட்டாளியாக சீனா இருப்பதாக சில நாடுகள் நம்புகின்றன.

இதேபோல், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் ஆகியவை அமெரிக்காவின் கவனத்தை சீனாவில் இருந்து திசை திருப்ப உதவியாக இருக்கும்.

யுக்ரேன் போருக்கான அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இது வெற்றி பெற்றால், அமெரிக்கா மீண்டும் சீனா மீது கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படலாம்.

யுக்ரேன் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவும் மேம்படும். இது சீனாவுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையாது.

5. மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இது சீனாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறலாம்

சீனாவின் மற்றொரு கவலை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை ஆகும். சீனாவிற்கு வளங்கள் மற்றும் சந்தை அடிப்படையில் இந்த பிராந்தியமும் முக்கியமானது.

சமீபத்தில், விமான கண்காட்சியின் போது, மத்திய கிழக்கின் முக்கிய நாடுகள் சீன ஆயுதங்களுக்கான நுகர்வோராக தென்பட்டன.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் சீனாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இரான், சீனாவுக்கு முக்கிய எண்ணெய் வழங்குநராக இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே ஆயுத மோதல் தொடங்கினால், சீனாவுக்கான எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படலாம். இது சீனாவிற்கு பொருளாதாரச் சிக்கலை உருவாக்கும்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்குவது அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.

அதிபர் பஷர் அல் அசத்தை ஆட்சியில் இருந்து அகற்றிய போராளிகளில் சீன உய்குர் இஸ்லாமியர்களும் அடங்குவர்.

இவர்கள் டிஐபி அதாவது துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியின் அங்கத்தினர்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சுதந்திர நாடு வேண்டி நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் விகார் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

சில டிஐபி உறுப்பினர்கள் சிரியாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை சீனாவில் பயன்படுத்த முடியும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில், ஷி ஜின்பிங்கின் ராணுவம் லட்சக்கணக்கான உய்குர்களை தடுத்து வைத்துள்ளது. உய்குர் மீதான சீனாவின் இந்த உத்தி சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

இவை அனைத்தும் 2025ஆம் ஆண்டில் சீனா பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

தவிர, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் என்னென்ன தடைகளை விதித்துள்ளன என்பதையும் சீனா கண்காணித்து வருகிறது.

தைவானுடனான சீனாவின் மோதல் அதிகரித்தால், சீனாவுக்கு எதிராக இதேபோன்ற தடைகள் விதிக்கப்படலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2025ஆம் ஆண்டில் என்ன நடந்தாலும் அது சீனாவுக்கு முக்கியமானதாக அமையும். புதிய நட்பு நாடுகள் தேவையா அல்லது புதிய சந்தையை உருவாக்க வேண்டுமா இல்லையா என்பதை சீனா தீர்மானிக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு