ஹிடெகோ ஹகமாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார்.
  • எழுதியவர், ஷைமா கலீல்
  • பதவி, டோக்யோ செய்தியாளர், ஹமாமட்சுவில் இருந்து

கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ​​மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை.

“அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்” என்று அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது பிபிசியிடம் தெரிவித்தார்.

“இவாவோ புரிந்து கொண்டாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை” என்றார் அவரது சகோதரி ஹிடெகோ ஹகமாடா.

கடந்த 1968ஆம் ஆண்டில் நான்கு கொலைகளுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது முதல் ஹிடெகோ தனது சகோதரனின் மறு விசாரணைக்காகப் போராடி வந்தார்.

செப்டம்பர் 2024இல், தனது 88 வயதில், அவர் இறுதியாக விடுவிக்கப்பட்டார். இது ஜப்பானில் மிக நீண்ட காலம் நீடித்த சட்டப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஹகமாடாவின் வழக்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஜப்பானின் நீதி அமைப்பு முறையின் அடிப்படையில் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜப்பானில் மரண தண்டனை கைதிகளுக்கு அவர்களின் தண்டனை குறித்து சில மணிநேரங்களுக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இது தங்களின் கடைசி நாளாக அமையுமா என்பதை அறிய முடியாமல், கைதிகள் பல வருடங்களைக் கழிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மனித உரிமை வல்லுநர்கள் இத்தகைய நடத்தை, கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்று நீண்டகாலமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது கைதிகளிடம் தீவிர மனநோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

தான் செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனைக்காக காத்திருந்து, தனிமைச் சிறையில் வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த ஹகமாடாவுக்கு இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 2014இல் மறு விசாரணை வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து, அவர் ஹிடெகோவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவரையும் அவரது சகோதரியையும் கவனித்துக்கொள்ளும் ஒரு தன்னார்வக் குழுவுடன் அவர் வெளியில் சென்றிருந்தார். அவர் அந்நியர்களைக் கண்டால் பதற்றப்படுகிறார் எனவும் பல ஆண்டுகளாக அவர் ‘தனது சொந்த உலகில்’ இருக்கிறார் எனவும் ஹிடெகோ விளக்கினார்.

“இதிலிருந்து அவர் மீள முடியாமல்கூட போகலாம்,” என்று ஹிடெகோ கூறுகிறார்.

“40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறிய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் நடக்கும். அவரை ஒரு விலங்கைப் போல் அவர்கள் வாழ வைத்தார்கள்” என்றும் ஹிடெகோ குறிப்பிட்டார்.

மரண தண்டனையில் கழிந்த வாழ்க்கை

செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனைக்காக காத்திருந்து, தனிமைச் சிறையில் வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த ஹகமாடாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

படக்குறிப்பு, இவாவோ ஹகமாடா 2014இல் மறுவிசாரணை வழங்கப்பட்டது முதல் அவரது சகோதரி ஹிடெகோவுடன் வாழ்ந்து வருகிறார்.

முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான இவாவோ ஹகமாடா ஜப்பானின் பாரம்பரிய சுவையூட்டியான மிசோ (ஜப்பானிய சோயாபீன் பேஸ்ட்) தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது முதலாளி, முதலாளியின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு இளம் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்கு பேரும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஹகமாடா, அந்தக் குடும்பத்தைக் கொலை செய்ததாகவும், ஷிசுவோகாவில் உள்ள அவர்களது வீட்டை எரித்து 200,000 யென் (199 பவுண்டு; 556 டாலர்) பணத்தைத் திருடியதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

கடந்த 1966இல், காவல்துறையினர் தனது சகோதரனை கைது செய்ய வந்த நாள் குறித்துக் கூறும்போது, “என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று ஹிடெகோ கூறுகிறார்.

அந்தக் குடும்பத்தின் வீடு மற்றும் அவர்களது இரண்டு மூத்த சகோதரிகளின் வீடுகளும் சோதிக்கப்பட்டன. பின்னர் ஹகமாடா கைது செய்யப்பட்டார்.

அவர் முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார், ஆனால் பின்னர் அவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை நீடித்த உடல்ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து, கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்ததாக விவரித்தார்.

கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொலைகள் மற்றும் தீ வைத்த குற்றத்தில், ஹகமாடா தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டபோதுதான், ஹகமாடாவின் சகோதரியான ஹிடெகோ, ஹகமாடாவின் நடத்தையில் ஒரு மாற்றத்தைக் கவனித்தார். ஹிடெகாவுக்கு ஒரு சிறைச்சாலை சந்திப்பு குறிப்பாக நினைவில் நிற்கிறது.

“அவர் என்னிடம் ‘நேற்று ஒரு மரண தண்டனை இருந்தது – அது அடுத்த அறையில் உள்ள ஒருவருக்கு நிகழ்ந்தது’ என்று கூறினார்” என ஹிடெகோ நினைவுகூர்கிறார்.

“அவர் என்னை கவனமாக இருக்கச் சொன்னார். அன்றிலிருந்து, அவர் மனதளவில் முற்றிலும் மாறி, மிகவும் அமைதியாகிவிட்டார்” என்றும் ஹிடெகோ குறிப்பிடுகிறார்.

இவாவோ ஹகமாடா

படக்குறிப்பு, கடந்த 1968ஆம் ஆண்டில் நான்கு கொலைகள் மற்றும் தீ வைத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு, இவாவோ ஹகமாடா (இடது) ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்தார்

ஜப்பானின் மரண தண்டனைக் கைதிகள் வரிசையில், பாதிக்கப்பட்ட ஒரே நபர் ஹகமாடா மட்டும் அல்ல. அங்கு கைதிகள் ஒவ்வொரு நாள் காலையிலும் இது தங்கள் கடைசி நாளாக அமையுமா என்று தெரியாமலே கண் விழிக்கின்றனர்.

“காலை 08:00 முதல் 08:30 மணி வரை மிகவும் முக்கியமான நேரம். ஏனெனில் பொதுவாக கைதிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்படும் நேரம் அது,” என்று 34 வருடங்கள் மரண தண்டனை சிறைவாசத்தை அனுபவித்த மெண்டா ஸாகே, தனது அனுபவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“அவர்கள் சிறையில் உள்ள உங்கள் அறைக்கு முன் வந்து நிற்கப் போகிறார்களா என்று உங்களுக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் மிகவும் மோசமான பதற்றத்தை உணரத் தொடங்குவீர்கள். இந்த உணர்வு எவ்வளவு மோசமானது என்பதை வார்த்தைகளில் விவரிப்பது சாத்தியமற்றது” என்றும் மெண்டா ஸாகே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதன் முதன்மை ஆசிரியர் ஜேம்ஸ் வெல்ஷ், மரண தண்டனை நிபந்தனைகள் குறித்து, “மரண தண்டனையின் தினசரி அச்சுறுத்தல் கொடூரமானது, மனிதாபிமானமற்றது, இழிவானது” என்று குறிப்பிட்டார். கைதிகள் “குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளை” சந்திக்க வாய்ப்பிருப்பதாக, அந்த அறிக்கை முடிவுகள் தெரிவித்தன.

ஆண்டுகள் செல்லச் செல்ல தனது சொந்த சகோதரனின் மனநலம் மோசமடைந்ததை ஹிடெகோவால் பார்க்க முடிந்தது.

“ஒருமுறை ஹகமாடா என்னிடம், ‘நான் யார் தெரியுமா? என்று கேட்டார். நானோ, ‘எனக்குத் தெரியும், நீங்கள்தான் இவாவோ ஹகமாடா என்றேன். அதற்கு அவர், ‘இல்லை, நீங்கள் அது வேறொரு நபர்’ என்று கூறிவிட்டுத் தனது அறைக்குத் திரும்பிவிட்டார்” என ஹிடெகோ தெரிவித்தார்.

ஹகமாடாவின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் வழக்கறிஞராகவும் ஹிடெகோ செயலாற்றினார். ஆனால் 2014ஆம் ஆண்டு வரை அவரது வழக்கில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஹிடெகோ

படக்குறிப்பு, ‘தனது சகோதரனை’ பாதுகாக்க வேண்டிய அவசியத்தை 91 வயதான ஹிடெகோ, எப்போதும் உணர்ந்து இருந்ததாகக் கூறுகிறார்.

ஹகமாடாவுக்கு எதிராக இருந்த முக்கியமான ஆதாரங்களில் ஒன்று அவரது பணியிடத்தில் உள்ள மிசோ தொட்டியில் சிவப்பு நிறக் கறை படிந்த ஆடைகள்.

இந்தக் கொலைகள் நடந்து ஓராண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவை மீட்கப்பட்டன. அவை ஹகமாடாவுக்கு சொந்தமானவை என்று வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக ஹகமாடாவின் வழக்கறிஞர் குழு ஆடைகளில் இருந்து மீட்கப்பட்ட மரபணுக் கூறுகள் அவரது ஆடையுடன் பொருந்தவில்லை என்று வாதிட்டது. மேலும் அவருக்கு எதிராக அந்த ஆதாரங்கள் வேண்டுமென்றே புனையப்பட்டவை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த 2014ஆம் ஆண்டில், அவரைச் சிறையில் இருந்து விடுவிக்கவும், மறுவிசாரணை வழங்கவும் நீதிபதியைச் சம்மதிக்க வைத்தனர்.

நீண்டகால நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ஹகமாடா வழக்கின் மறுவிசாரணை, கடந்த அக்டோபர் மாதம்தான் தொடங்கியது. இறுதியில் விசாரணை நடந்தபோது, ஹிடெகோ நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது சகோதரனின் உயிருக்காக மன்றாடினார்.

ஹகமாடாவின் வயது மற்றும் ஆடைகளில் இருந்த கறையின் நிலை ஆகியவை வழக்கின் தீர்ப்பில் முக்கியப் பங்கு வகித்தன.

ஆடைகள் மீட்கப்பட்டபோது கறைகள் சிவப்பு நிறமாக இருந்ததாக ஹகமாடாவுக்கு எதிரான வழக்கறிஞர் தரப்பு கூறியது. ஆனால் நீண்ட நேரம் மிசோவில் மூழ்கி இருந்தால் ரத்தம் கருப்பு நிறத்திற்கு மாறியிருக்கும், சிவப்பு நிறத்திலேயே இருக்காது என்று ஹகமாடா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

தலைமை நீதிபதி கோஷி குனியை நம்ப வைக்க இந்த வாதம் போதுமானதாக இருந்தது. “விசாரணை அதிகாரிகள் ஆடையில் ரத்தக் கறைகளைச் சேர்த்து, சம்பவம் நடந்த பிறகு அவற்றை மிசோ தொட்டியில் மறைத்துவிட்டதாக” நீதிபதி அறிவித்தார்.

மேலும் நீதிபதி கோஷி குனி, விசாரணைப் பதிவு உள்பட பிற ஆதாரங்கள் புனையப்பட்டதைக் கண்டறிந்து, ஹகமாடா குற்றமற்றவர் என்று அறிவித்தார். இதைக் கேட்டதும் ஹிடெகோ முதலில் அழுதுவிட்டார்.

“பிரதிவாதி குற்றவாளி இல்லை என்று நீதிபதி கூறியபோது, ​​நான் மகிழ்ச்சியடைந்தேன்; கண்ணீர் சிந்தினேன்,” என்று ஹிடெகோ கூறுகிறார்.

“நான் அழக்கூடியவள் இல்லை. ஆனால் அன்று சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாமல் அழுதேன்” என்றும் ஹிடெகோ தெரிவித்தார்.

பிணைக் கைதிக்கான நீதி

ஜப்பான்: தம்பியை மரண தண்டனையில் இருந்து காக்க 56 ஆண்டுகள் போராடிய பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷிஸுவோகா காவல்துறையின் தலைவரான தகாயோஷி சுடா, ஹகமாடா மற்றும் அவரது சகோதரி ஹிடெகோ முன்பாகத் தலை வணங்கி மன்னிப்பு கோரினார்.

ஹகமாடாவுக்கு எதிரான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்ற நீதிமன்றத்தின் முடிவு, கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகிறது. ஜப்பானில் 99% தண்டனை விகிதம் உள்ளது. அதோடு “பிணைக் கைதிகளுக்கான நீதி” என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு உள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜப்பான் இயக்குநர் கனே டோய் கூறும்போது, “இந்த அமைப்பு கைது செய்யப்பட்ட நபர்களின் சில அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படுவதற்கான உரிமை, விரைவான மற்றும் நியாயமான ஜாமீன் விசாரணைக்கான உரிமை, விசாரணைகளின் போது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றையும் இந்த அமைப்பு பறிக்கிறது” என்று தெரிவிக்கிறார்.

“இந்தத் தவறான நடைமுறைகள், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் குடும்பங்கள் பிளவுபடுவதற்கும், தவறான தீர்ப்புகளை வழங்கவும் காரணமாக இருந்துள்ளது” என்று 2023இல் கானே டோய் குறிப்பிட்டார்.

மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான டேவிட் டி ஜான்சன், கடந்த 30 ஆண்டுகளாக ஹகமாடாவின் வழக்கைப் பின்பற்றி வருகிறார். மேலும் ஜப்பானில் குற்றவியல் நீதியை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதற்கு, “முக்கியமான ஆதாரங்கள் சுமார் 2010ஆம் ஆண்டு வரை பிரதிவாதி தரப்புக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பது ஒரு முக்கியக் காரணம்” என்று பேராசிரியர் டேவிட் கூறினார்.

இந்தத் தவறான நடைமுறை “மிகவும் மோசமானது, மன்னிக்க முடியாதது” என்று மிஸ்டர் ஜான்சன் பிபிசியிடம் கூறினார். “நீதிபதிகள் வழக்கைத் தொடர்ந்து தள்ளி வைத்தனர். ஏனெனில் அவர்கள் விசாரணை கோரிக்கைகளுக்கு மீண்டும் பதிலளிக்கும்போது வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அதைச் செய்ய சட்டம் அவர்களை அனுமதிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஹிடெகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹிடெகோ தனது சகோதரரின் மறு விசாரணைக்காக பல ஆண்டுகளாக பிரசாரம் செய்தார்

அவரது சகோதரர் அளித்த கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் வற்புறுத்தல் ஆகியவை அநீதியின் மையமாக இருப்பதாக ஹிடெகோ கூறுகிறார்.

ஆனால் தவறான குற்றச்சாட்டுகள் ஒருவரின் தவறால் மட்டுமே ஏற்படுவதில்லை. மாறாக, காவல்துறையில் இருந்து வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒன்றிணைந்த தோல்விகளால் அவை ஏற்படுவதாக ஜான்சன் குற்றம் சாட்டுகிறார்.

“நீதிபதிகளே இறுதியில் தீர்ப்பு சொல்லும் உரிமையுடையவர்கள்,” என்று அவர் மேலும் கூறினார். “ஒரு தவறான தண்டனை வழங்கப்படும்போது, அது இறுதியில் அவர்களின் அறிவிப்பால்தான் ஏற்படுகிறது. தவறான தீர்ப்புகளை உருவாக்குவது மற்றும் அவற்றைப் பாதுகாப்பது போன்ற நீதிபதியின் பொறுப்புகள், பெரும்பாலான நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றன மற்றும் கவனிக்கப்படுவதில்லை” என்றும் ஜான்சன் தெரிவித்தார்.

அந்தப் பின்னணியில், ஹகமாடாவின் விடுதலை ஒரு முக்கியத் திருப்பமாக இருந்தது. இது நீண்டகாலம் கழித்துக் கிடைத்துள்ள நீதியின் அரிதான தருணம்.

ஹகமாடா குற்றமற்றவர் என்று அறிவித்த பிறகு, அவரது மறுவிசாரணைக்கு தலைமை தாங்கிய நீதிபதி, நீதியை அடைவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்காக ஹிடெகோவிடம் மன்னிப்பு கேட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஷிஸுவோகா காவல்துறையின் தலைவரான தகாயோஷி சுடா, அவரது வீட்டிற்குச் சென்று ஹகமாடா மற்றும் அவரது சகோதரி ஹிடெகோவின் முன்பாகத் தலை வணங்கினார்.

“கடந்த 58 ஆண்டுகளாக நாங்கள் விவரிக்க முடியாத கவலையையும் சுமையையும் உங்களுக்கு ஏற்படுத்தினோம். நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்,” என்று சுடா கூறி அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

காவல்துறை உயரதிகாரிக்கு ஹிடெகோ எதிர்பாராத பதில் அளித்தார்.

“நடந்தது அனைத்தும் எங்கள் விதி என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இப்போது எதைப் பற்றியும் புகார் செய்ய மாட்டோம்” ,” என்று ஹிடெகோ தெரிவித்தார்.

இளஞ்சிவப்பு நிறக் கதவு

ஜப்பான்: தம்பியை மரண தண்டனையில் இருந்து காக்க 56 ஆண்டுகள் போராடிய பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பிறகு, செப்டம்பர் 26இல் ஜப்பானிய நீதிமன்றம் சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தது

ஏறக்குறைய 60 ஆண்டுக்கால கவலை மற்றும் மனவேதனைக்குப் பிறகு, சிறிது வெளிச்சத்தை அனுமதிக்க வேண்டுமென்ற ஹிடெகோ, தனது வீட்டை ஒளிமிக்கதாக மாற்றியுள்ளார். அறைகள் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன. அவற்றில் குடும்ப நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ​​ஹிடேகோ மற்றும் இவாவோவின் படங்கள் நிறைந்துள்ளன.

கறுப்பு-வெள்ளை குடும்பப் புகைப்படங்கள் மூலம், குழந்தையாக இருந்த தனது “அழகான” சிறிய சகோதரனின் நினைவுகளைப் பகிர்ந்து சிரிக்கிறார் ​​ஹிடெகோ.

ஆறு சகோதரர்களிலேயே இளையவரான அவர், எப்போதும் ஹிடெகோவின் பக்கத்தில் நிற்பது போலத் தெரிகிறது.

“நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். எனது தம்பியைக் கவனிக்க வேண்டும் என்பதைத்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் இப்போதும் தொடர்கிறது,” என்று ​​ஹிடெகோ விளக்கினார்.

ஹகமாடாவின் தங்கள் அறைக்குள் நுழைந்து, அவர்களின் பூனையை அறிமுகப்படுத்துகிறார். அது அவர் வழக்கமாக அமரும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. பின்னர் ஹகமாடா ஓர் இளம் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்தபோது எடுத்த படங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் ஒரு சாம்பியனாக விரும்பினார். அந்த நேரத்தில்தான் அச்சம்பவம் நடந்தது” என்றும் ஹிடெகோ கூறுகிறார். 88 வயதான ஹகமாடா, செப்டம்பர் 2024இல் விடுவிக்கப்பட்டார்.

ஹகமாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 88 வயதான ஹகமாடா, செப்டம்பர் 2024இல் விடுவிக்கப்பட்டார்

ஹகமாடா 2014இல் விடுதலையான பிறகு, அவர்களது வீடு முடிந்தவரை பிரகாசமாக இருக்க வேண்டும் என்று ஹிடெகோ விரும்பியதாகக் கூறினார். அதனால் அந்த வீட்டின் முன்கதவுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசினார்.

“அவர் ஒரு பிரகாசமான அறையில் இருந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தால், அவர் இயல்பாகவே குணமடைவார் என்று நான் நம்பினேன்” என்று ஹிடெகோ குறிப்பிடுகிறார்.

ஹிடெகோவின் வீட்டிற்குச் செல்லும்போது ஒருவர் கவனிக்கும் முதல் விஷயம், நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளமாக உள்ள பிரகாசமான இந்த இளஞ்சிவப்பு நிறக் கதவு.

இந்த மாற்றங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹகமாடா பல மணிநேரம் முன்னும் பின்னுமாக நடந்து செல்கிறார். மூன்று ஒற்றை டாடாமி பாய்களின் அளவுள்ள சிறையில் பல ஆண்டுகளாகச் செய்ததைப் போலவே தற்போதும் செய்கிறார்.

ஆனால் நீதி தவறாமல் கிடைத்திருந்தால் அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி ஹிடெகோ யோசிக்க மறுக்கிறார்.

தனது சகோதரனின் துன்பத்திற்கு யாரைக் குறை கூறுகிறார் என்று கேட்டதற்கு, “யாரும் இல்லை” என்று ஹிடெகோ பதில் கூறினார். “நடந்ததைப் பற்றி புகார் செய்வதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை” என்றும் ஹிடெகோ தெரிவித்தார்.

இப்போது ஹிடெகோவின் முன்னுரிமை அவருடைய சகோதரரை வசதியாக வைத்திருப்பதுதான். ஹிடெகோ அவருக்கு முகச்சவரம் செய்து, ஹகமாடாவின் தலையில் மசாஜ் செய்கிறார். தினமும் காலையில் அவருக்கு காலை உணவாக ஆப்பிள் மற்றும் ஆப்ரிகாட் பழங்களை அளிக்கிறார்.

தனது 91 ஆண்டுகளின் பெரும்பகுதியைத் தனது சகோதரரின் விடுதலைக்கான போராட்டத்தில் கழித்த ஹிடெகோ, இது அவர்களின் தலைவிதி என்று கூறுகிறார்.

மேலும் ஹிடெகோ பேசியபோது, “நான் எவ்வளவு காலம் வாழப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகையால் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை,” என்று கூறினார்.

“ஐவாவோ அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் ஹிடெகோ தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.