அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் மகுடம் இழந்த மன்னர் – பிரிட்டிஷ் இந்தியாவில் என்ன நடந்தது?
- எழுதியவர், நேயாஸ் ஃபரூக்கி
- பதவி, பிபிசி செய்திகள், டெல்லி
இது ஒரு சாதாரண கொலை போல தான் இருந்தது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 12, 1925-ஆம் தேதி அன்று, பம்பாயின் புறநகர் (இன்றைய மும்பை) பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த ஒரு ஜோடியை ஒரு கும்பல் தாக்கியது. காரில் இருந்த ஆண் துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த பெண்ணின் முகத்தில் கீறல் விழுந்தது.
அந்த கொலை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. அன்று இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு சவாலை ஏற்படுத்தியது. ஒரு அரசர் தன்னுடைய பதவியில் இருந்து விலக நேரிட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த மிகவும் பரபரப்பான ஒரு குற்றமாக பத்திரிகைகள் இந்த சம்பவத்தை வர்ணித்தன. இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் அப்துல் காதிர் பவ்லா. 25 வயதான அவர் புகழ்பெற்ற ஜவுளி வியாபாரி. அன்று பம்பாய் நகராட்சியில் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். அவருடன் அந்த காரில் பயணம் செய்த பெண் மும்தாஜ் பேகம்.
அவருடைய வயது 22. அவர் ஒரு நடன மங்கை. அரசரின் அந்தப்புரத்தில் வசித்து வந்த அவர் அங்கிருந்து வெளியேறி, பவ்லாவுடன் சில மாதங்களாக தங்கியிருந்தார்.
கொலை நடந்த அன்று, பவ்லாவும் மும்தாஜும், மேலும் மூன்று பேரும் காரில், அரபிக் கடலை ஒட்டியுள்ள மலபார் மலைகளின் வழியே காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த காலத்தில் கார் வைத்திருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. செல்வந்தர்களே கார்களை வைத்திருந்தனர்.
நடந்தது என்ன?
“திடீரென ஒரு கார் அவர்களை உரசிக் கொண்டு சென்றது. பவ்லாவின் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள், முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது பவ்லாவின் கார் மோதியது. அதனைத் தொடர்ந்து பவ்லாவின் கார் நிறுத்தப்பட்டது,” என்று அன்று வெளியான செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
“பவ்லாவை மிகவும் மோசமாக கெட்ட வார்த்தைகளால் திட்டிய அந்த கும்பல், மும்தாஜை காரில் இருந்து வெளியேறுமாறு கத்தினர்,” என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான மும்தாஜ் தெரிவித்தார்.
அக்கும்பல் பவ்லாவை அங்கே வைத்து சுட்டனர். சில மணி நேரத்தில் பவ்லா உயிரிழந்தார்.
கோல்ஃப் விளையாடிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ஆங்கிலேய ராணுவ வீரர்கள் இந்த துப்பாக்கி சத்தத்தைக் கேட்டதும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிடித்தனர். அந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ வீரருக்கு காயம் ஏற்பட்டது.
அடக்குமுறைக்கு ஆளான பேகம்
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்து செல்லும் முன்பு, ஆங்கிலேய வீரர்களின் பிடியில் இருந்த மும்தாஜை இழுத்துச் செல்ல அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
மும்தாஜை கடத்திச் செல்ல வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணமாக இருந்திருக்கக் கூடும். ஏன் என்றால் பம்பாயில் மும்தாஜின் நடன விழாவில் பங்கேற்ற பவ்லா அப்போது தான் அவரை முதன்முறையாக சந்தித்தார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மும்தாஜுக்கு அடைக்கலம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலமுறை அவருக்கு மிரட்டல்கள் விடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்கிலி ஆஃப் இந்தியா இதழ், தன்னுடைய வாசகர்களுக்காக மும்தாஜின் பிரத்யேக புகைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறியிருந்தது.
பம்பாய் காவல்துறை, தினமும் இந்த வழக்கு தொடர்பாக செய்தி நிறுவனங்களுக்கு தகவல்கள் வழங்க திட்டமிட்டதாக மராத்தி செய்தித்தாளான நவக்கல் கூறியது.
இந்த கொலை வழக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த காரணத்தால் சில மாதங்களிலேயே படம் ஒன்றை எடுத்தது பாலிவுட்.
“இந்த கொலை வழக்கில் ஒரு அழகான இளம்பெண், ஒரு வியாபாரி, ஒரு அவமானப்படுத்தப்பட்ட அரசர் என பலரும் சம்பந்தப்பட்டிருந்ததால், இது ஒரு சாதாரண கொலை வழக்கு என்பதையும் தாண்டி சென்றது,” என்று கூறுகிறார் தி பவ்லா மர்டர் கேஸ்: லவ், லஸ்ட் அண்ட் கிரைம் இன் கலோனியல் இந்தியா என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் தவல் குல்கர்னி.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள், இந்தூர் சமஸ்தானத்தோடு தொடர்புடையவர்கள் என்று ஊடகங்கள் சந்தேகம் எழுப்பின. இந்தூர் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்கு கட்டுப்பட்ட சமஸ்தானமாக செயல்பட்டது. முஸ்லிம் நடன மங்கையான மும்தாஜ் பேகம், இந்து அரசர் மூன்றாம் துக்கோஜி ராவ் ஹோல்கர் அரண்மனையின் அந்தப்புரத்தில் வாழ்ந்து வந்தார்.
மும்தாஜ் அவருடைய அழகால் புகழ் அடைந்திருந்தார். “அவரின் அழகுக்கு ஈடே இல்லை” என்று 1945-ஆம் ஆண்டு வெளியான ஃபேமஸ் டிரையல்ஸ் ஃபார் லவ் அண்ட் மர்டர் என்ற புத்தகத்தில் கே.எல். கௌபா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மும்தாஜை கட்டுப்படுத்தும் முயற்சியில் மகாராஜா இறங்கினார். மும்தாஜ் அவருடைய குடும்பத்தினரை பார்க்கவிடாமல் தடுப்பது, தொடர்ந்து கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். அதனால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது என்று குல்கர்னி கூறுகிறார்.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் பேசிய மும்தாஜ், “நான் எப்போதுமே கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டேன். என்னுடைய உறவினர்களை பார்க்க அனுமதி அளித்தனர். ஆனால் என்னுடன் யாராவது ஒருவர் இருந்து கொண்டே இருப்பார்,” என்று கூறினார்.
இந்தூரில் திட்டமிடப்பட்ட சதி
இந்தூரில் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அக்குழந்தை சில மணி நேரத்திலேயே மரணித்துவிட்டது.
“என்னுடைய குழந்தையின் பிறப்புக்குப் பின், என்னால் இந்தூரில் இருக்க முடியவில்லை. ஏன் என்றால் அந்த செவிலியர்கள் என்னுடைய பெண் குழந்தையை கொன்றுவிட்டனர்,” என்று நீதிமன்றத்தில் மும்தாஜ் கூறினார்.
சில மாதங்களிலேயே, அவர் அங்கிருந்து அம்மாவின் பிறந்த ஊரான அமிர்தசரஸிற்கு தப்பித்துச் சென்றார். ஆனால் அங்கும் அவரை பிரச்னைகள் பின் தொடர்ந்தன.
அங்கும் அவர் கண்காணிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய, மும்தாஜின் அப்பா, மும்தாஜிடம் அழுத மகாராஜா, அவரை மீண்டும் இந்தூருக்கு வரும் படி கெஞ்சிக் கேட்டதாக கூறினார். ஆனால் மும்தாஜ் அங்கே செல்லவில்லை. பம்பாய்க்கு சென்றார். அங்கும் அவர் கண்காணிக்கப்பட்டார்.
ஊடகங்கள் எழுப்பிய சந்தேகங்களை நீதிமன்ற விசாரணை உறுதி செய்தது. மும்தாஜுக்கு அடைக்கலம் அளித்தால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பவ்லாவை மகாராஜாவின் பிரதிநிதிகள்தான் மிரட்டியுள்ளனர்.
பிரிட்டிஷ் வீரர்களால் பிடிக்கப்பட்ட ஷாஃபி அகமது கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கோடு தொடர்புடைய மேலும் ஏழு பேரை பம்பாய் காவல்துறை கைது செய்தது.
இந்த கொலை வழக்கில் இந்தூர் அரசருக்கு இருக்கும் தொடர்பை நிராகரிக்க இயலவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தூர் சமஸ்தானத்தில் பணியாற்றியவர்கள். கொலை நடந்த சமயத்தில் அனைவரும் விடுப்பில் சென்றுள்ளனர். பம்பாயில் தான் தங்கியிருந்தனர்.
இது பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக இருந்தது. என்னதான் கொலை பம்பாயில் நடந்திருந்தாலும் கூட, இதற்கான திட்டம் இந்தூரில் போடப்பட்டது. இந்தூர், பிரிட்டிஷாருடன் நெருங்கிய உறவில் இருந்துள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு இது ஒரு மோசமான விவகாரம் என்று தி நியூ ஸ்டேட்மென் குறிப்பிட்டிருந்தது. மேலும், இது ஒரு சிறிய மாகாணமாக இருந்திருந்தால், “இது குறித்து கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இருக்காது” என்று எழுதியது.
“ஆனால் இந்தூர் பிரிட்டிஷ் அரசின் சக்தி வாய்ந்த நிலப்பிரபுத்துவ பகுதியாக இருக்கிறது,” என்று அது கூறியது.
ஆரம்பத்தில் இக்கொலையில் இந்தூர் தொடர்பு குறித்து அமைதியாக இருக்க முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் தனிப்பட்ட முறையில், மிகவும் எச்சரிக்கையுடன் இதனை விசாரித்தது பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதை இந்தூர் அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
பம்பாய் காவல்துறை ஆணையராக செயல்பட்ட பேட்ரிக் கெல்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், விசாரணையில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் “இந்தூரில் தீட்டப்பட்ட சதித் திட்டத்தையோ அல்லது இந்தூரில் மும்தாஜை கடத்த கூலிப்படை ஏவியதையோ” தான் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
பிரிட்டிஷ் அரசுக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தம் ஏற்பட்டது. இன்றைய குஜராத்தை பூர்வீகமாக கொண்ட, இஸ்லாமிய சமூகமான மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர் பவ்லா. செல்வாக்கு கொண்ட செழிப்பான மேமன் சமூகத்தினர் அழுத்தம் கொடுத்தனர். பவ்லாவுடன் நகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.”நிச்சயமாக இந்த கொலைக்குப் பின்னால் ஏதோ இருக்க வேண்டும்” என்று கூறினர்கள்.
பிரிட்டிஷ் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையில், இந்திய உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்கள். இந்த வழக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் கூட விவாதிக்கப்பட்டது.
பதவி விலகிய மன்னர்
முன்னாள் காவல்துறை அதிகாரி, ரோஹிதாஸ் நாராயண் துஷர் அவருடைய புத்தகத்தில், இந்த வழக்கின் விசாரணையை மெதுவாக நடத்துமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் தரப்பட்டது என்றும், ஆனால் ஆணையர் கெல்லி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தை அடைந்த போது இரு தரப்பில் இருந்தும் தலைசிறந்த வழக்கறிஞர்கள் வாதிட வந்தனர்.
அதில் ஒருவர் தான் முகமது அலி ஜின்னா. அவர் 1947-ஆம் ஆண்டு இந்திய பிரிவினைக்குப் பிறகு உருவான பாகிஸ்தானின் தேசிய தந்தையானார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்தராவ் கங்காராம் பான்சேக்காக ஜின்னா ஆஜரானார். பான்சே இந்தூர் ராணுவத்தின் தலைமை ஜெனரலாக பணியாற்றினார். பான்சேவை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றினார் ஜின்னா.
கொலையில் ஈடுபட்டவர்களில் மூன்று பேருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் மகாராஜாவை இந்த கொலைக்கு பொறுப்பேற்க வைக்க இயலவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி எல்.சி. க்ரம்ப், “இவர்களுக்கு பின்னால் சிலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்று துல்லியமாக கூற இயலவில்லை,” என்று கூறினார்.
இந்தூர் மகாராஜாவின் அந்தப்புரத்தில் 10 ஆண்டுகளாக இருந்த ஒரு பெண்ணை கடத்த முயற்சி நடந்திருக்கும் போது, அதற்கான திட்டம் இந்தூரில் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே என்றும் அவர் கூறினார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி பிரிட்டிஷ் அரசு அந்த மகாராஜாவுக்கு எதிராக விரைந்து செயல்பட நேரிட்டது. விசாரணை ஆணையத்தை எதிர்கொள்ளுங்கள் அல்லது பதவியிலிருந்து விலகுங்கள் என பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் முன்பு ஏதேனும் ஒரு முடிவை எடுக்க கூறியுள்ளது என்று இந்திய நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மகாராஜா, பதவியில் இருந்து விலகினார்.
மலபார் மலைகளில் நடந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது மேற்கொண்டு விசாரணை நடத்தக்கூடாது என்பதை உணர்ந்து, நான் என்னுடைய மகனுக்காக அரியணையை துறக்கிறேன் என்று மகாராஜா, பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
பதவியில் இருந்து விலகிய பிறகு, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அமெரிக்கப் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி மேலும் புதிய பிரச்னைகளை எழுப்பினார் மகாராஜா. இறுதியில் அந்த அமெரிக்கப் பெண் இந்து மதத்தைத் தழுவி, மகாராஜாவை திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகிறது பிரிட்டிஷ் உள்துறை அறிக்கை ஒன்று.
ஹாலிவுட்டில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றார் மும்தாஜ். தன்னுடைய வாழ்க்கையை கட்டமைக்க அமெரிக்காவுக்கு சென்றார் அவர். பிறகு அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.