by sakana1

கலிபோர்னியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் சொகுசு வீடுகளை பாதுகாக்க லட்சக்கணக்கில் செலவழிப்பு  கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயிலிருந்த தங்களது சொகுசு வீடுகளை பாதுகாக்க அங்குள்ள கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தீ பரவும் இடங்களில் விமானம் மூலம் வானில் இருந்து தீ தடுப்பு மருந்து வீசப்பட்டும் வருகிறது.

இந்த காட்டூத்தீயின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்நிலையில் தங்களது சொகுசு வீடுகளைப் பாதுகாக்க கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து தனியார் தீயணைப்புப் படையினரை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

தங்கள் வீடுகளைப் பாதுகாக்க அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் ரூ.1.7 லட்சம்) செலவழிக்கின்றனர். சொகுசு வீடுகள் மீது தனியார் தீயணைப்பு படையினர் அடிக்கடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ பிடிக்காதவாறு பாதுகாக்கின்றனர்.

இதுகுறித்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ் டுன் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடீஸ்வரர்கள் தற்போது தங்களது சொத்துகளை பாதுகாக்க தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். தனியார் தீயணைப்புப் படையினர் 24 மணி நேரமும் அங்கு நின்று, கட்டிடங்களை தீப்பிழம்புகள் அணுகும்போது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கின்றனர்.

இதனால் அந்தக் கட்டிடங்கள் தண்ணீரால் நனைந்து விடுகின்றனர். இதனால் அந்த சொகுசு வீடுகள் மீது தீ பரவாமல் தடுக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தற்போது இதுபோன்ற தனியார் தீயணைப்புப் படையினரைத்தான் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்