by guasw2

பெயரளவில் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட முகாம்! தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகும். நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கும் இந்த அட்டை முக்கியமானதாகும். இந்நிலையில், குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நடத்தப்படும் முகாம்கள் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறியதாவது: மாவட்ட வழங்கல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், செல்போன் எண் மாற்றுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான சேவைகள் நடைபெறுவதில்லை.

அதாவது, ஒரு விண்ணப்பதாரர் குடும்ப அட்டையில் செல்போன் எண் மாற்றுதல், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் குறித்து மனுக்கள் அளித்தால் அனைத்து கோரிக்கைகளும் செய்யப்படுவதில்லை. செல்போன் எண் மட்டுமே மாற்றித் தரப்படுகிறது. முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்படுவது இல்லை. இதனால் தொடர்புடைய விண்ணப்பதாரர், வெளியே இ-சேவை மையத்தை அணுகி, பணத்தை செலவழி்த்து தனது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதை முகாம்களிலேயே செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பல நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் தங்களது கருத்துகள், புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைப்பது இல்லை. அங்குள்ள பலகையிலோ, கடையின் முகப்பு சுவர்களிலோ மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களின் தொடர்பு எண்களை எழுதி வைப்பது இல்லை. இதுபோன்ற குறைகளை அதிகாரிகள் நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.

விண்ணப்பதாரர் ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் எனது குடும்ப அட்டையில் செல்போன் எண் மாற்றம், மனைவியின் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக வழங்கல் துறையினர் நடத்தும் முகாமில் விண்ணப்பித்தேன். ஆனால், செல்போன் எண் மட்டுமே மாற்றப்பட்டது. பெயர் சேர்க்கப்படவில்லை. விண்ணப்பக் கடிதம், திருமண பத்திரிகை நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவை அளித்தும் சேர்க்கப்படவில்லை.

பதிவுத்துறையில் பதிவு செய்த திருமண சான்றை இணைக்க வலியுறுத்துகின்றனர். புதிதாக திருமணம் செய்தவர்கள் பெயர் சேர்க்க திருமண பத்திரிகை போதும் என்ற ஆதாரத்தை ஏற்க வேண்டும். அனைவரும் பதிவுத்துறையில் சென்று சான்று பெறுவது இல்லை, என்றார்.கோவை மசக்காளிபாளையம் முல்லை நகரில் உள்ள ஒரு நியாய விலைக்கடையில் புகார் பெட்டி, பொருட்களின் இருப்பு குறித்த விவரம் குறிப்பிடப்படாமல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்