லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: பலத்த காற்று எச்சரிக்கையால் மீண்டும் ஆபத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் இரண்டு பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் இரண்டு சிறிய காட்டுத் தீயை அணைக்கப்போராடி வருகின்றனர். நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயான பாலிசேட்ஸ் விபத்து 23,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி 14 சதவீதம் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று நகரில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பேர் அழிவை எதிர்நோக்கியுள்ளனர்.
காற்று கிட்டத்தட்ட சூறாவளி போல இருக்கும் என்பதால் அவசர ஏற்படுகளும் தயாராக உள்ளன என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், காட்டுத் தீயின் போது நடந்த கொள்ளை சம்பவங்கள் காரணமாக 9 பேரும், தீ வைப்பு சம்பம் தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டூத் தீயின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்நிலையில், தங்களது சொகுசு வீடுகளைப் பாதுகாக்க கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து தனியார் தீயணைப்புப் படையினரை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
லட்சத்தை செலவழிக்கும் பிரபலங்கள்: தங்கள் வீடுகளைப் பாதுகாக்க அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் ரூ.1.7 லட்சம்) செலவழிக்கின்றனர். சொகுசு வீடுகள் மீது தனியார் தீயணைப்பு படையினர் அடிக்கடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ பிடிக்காதவாறு பாதுகாக்கின்றனர்.
இதுகுறித்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ் டுன் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோடீஸ்வரர்கள் தற்போது தங்களது சொத்துகளை பாதுகாக்க தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். தனியார் தீயணைப்புப் படையினர் 24 மணி நேரமும் அங்கு நின்று, கட்டிடங்களை தீப்பிழம்புகள் அணுகும்போது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர்.
இதனால் அந்தக் கட்டிடங்கள் தண்ணீரால் நனைந்து விடுகின்றன. இதனால் அந்த சொகுசு வீடுகள் மீது தீ பரவாமல் தடுக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தற்போது இதுபோன்ற தனியார் தீயணைப்புப் படையினரைத்தான் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவியது. இந்நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் காட்டுத் தீ 4 நாட்களில் மளமளவென பரவி 40,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. தண்ணீர் மற்றும் ரசாயனங்களை எடுத்துச் சென்ற தீயணைப்பு விமானங்களும், சூறாவளி காற்றின் காரணமாக காட்டுத் தீ பரவிய பகுதிக்குள் செல்ல முடியவில்லை.
தீயணைப்புத் துறையின் 7,500 வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் உள்ளூர்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீரை, நீண்ட நேரம் பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்க முயன்றனர். இவர்களால் ஓரளவுக்குத்தான் காட்டுத் தீயை அணைக்க முடிந்தது.