கலந்துரையாட எம்மையும் அழையுங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான சட்டமூலம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல திருத்தங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ஆயிரமாக காணப்படுகிறது.இந்த எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்தில் இருந்து 5ஆயிரமாக குறைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க இருக்கிறோம். ஏனெனில் இந்த 8ஆயிரம் உறுப்பினர்களை பராமரிப்பதற்கு பாரிய நிதி செலவிடப்பட வேண்டி இருக்கிறது. இது போன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் என இன்னும் 10க்கும் அதிகமான யோசனைகள் எம்மிடம் இருக்கின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களை இன்னும் சில தினங்களில் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை அவசரத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைமையாகும்.
அதனால் இந்த தேர்தல் முறைமையில் பல தருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் அரசாங்கம் உள்ளூராட்ச் மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ள திட்டம் ஒன்றை அமைத்து, அதுதொடர்பில் கலந்துரையாட எங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்கிறோம் என்றார்.