இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 14) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8½ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான ‘என்.ஆர்’. மற்றும் ‘ஆர்.சி.சி.எல்’. என்ற பெயர்களில் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு குடிநீர், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 7ஆம் தேதி கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஈரோடு சென்று இந்த கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் ராமலிங்கம், அவருடைய மகன்கள் வீடுகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அதேநேரம் இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஈரோடு மற்றும் பெங்களூருவில் உள்ள 26 இடங்களிலும் 5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் கடந்த 11ஆம் தேதி இரவு முடிவடைந்தன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கத்தின் மகன் ஆர்.சந்திரகாந்த் ஆகியோர் சகோதரிகளை திருமணம் செய்த வகையில் இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.
கட்டுமான நிறுவனத்தில் நடத்திய சோதனையின் போது சிமெண்ட் மற்றும் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்களை வாங்கியதாகக் கூறி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.420 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாயை அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
அத்துடன் கணக்கில் காட்டப்படாத ரூ.8½ கோடி மற்றும் பல நிதி மற்றும் சொத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன என்றும் தினத்தந்தி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூபாய் 86.62 என்ற நிலையை எட்டியது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 58 காசு வீழ்ச்சியடைந்தது என்றும் அந்த செய்தி கூறுகிறது.
திங்கள் கிழமை அந்நியச் செலவாணி சந்தை தொடங்கிய போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூபாய் 86.12 ஆக இருந்தது. அதிலிருந்து ஒரு காசு மட்டுமே உயர்ந்து பின்னர், 58 காசு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது.
இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் பங்குச் சந்தையில் இருந்து ரூ.2,254.68 கோடியை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை ரூ.22,194 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் எதிர்பார்த்ததை விட வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வட்டி விகித மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்புகள், அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் குறித்து அந்நாட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது ஆகியவை டாலரை ஸ்திரப்படுத்தி வருகின்றன என்றும் தினமணி செய்தி கூறுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்தில் மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் இளைஞர் சதீஷ்குமாரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், கைது செய்யப்பட்ட நபருக்கு விரைந்து தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன.
‘தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் வட,கிழக்கில் விரைவில் மீள்குடியேற்றம்’
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர்களை ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது அவர்களுக்கான அடிப்படைய வசதிகள் உள்ளிட்ட இதர விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகள் உள்ளமையால் முன்னோடித்திட்டமொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கருதுவதாக அதில், சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு குறித்த அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்திய நிலையில், வடக்கு, அல்லது கிழக்கு மாகாணத்தின் குறித்த பகுதியொன்றில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் தாயகத்துக்கு வரவழைத்து மீள்குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனைக்கும் சம்மதத்தினை வெளியிட்டனர்.
இவ்வாறான நிலையில் விரைவில் முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து ஒருதொகுதி குடும்பங்கள் அழைத்துவரப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் குறித்த ஜூக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அமைச்சர் மறுப்பு
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், 2024 இந்தியத் தேர்தல்கள் குறித்து கூறிய கருத்துக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, ‘கடந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
2024 தேர்தலில் மூன்றாவது முறையாக மோதியின் அரசு அமைந்ததை சுட்டிக்காட்டி, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர். பிரதமர் மோதி தலைமையிலான என்.டி.ஏ (NDA) மீதான தங்களது நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
2024 தேர்தல்களில், இந்தியா உட்பட பெரும்பாலான அரசுகள் கொரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் தோல்வியடைந்தன என்ற ஜுக்கர்பெர்க்கின் கருத்து உண்மையில் தவறானது என்றும் அவரிடமிருந்து தவறான தகவல்கள் வருவது ஏமாற்றமளிக்கிறது, உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், “80 கோடி பேருக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கொரோனா காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்துவது வரை, பிரதமர் மோதியின் 3-வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.