துரிசியை கடக்க முயன்றவர் கீழே விழுந்து உயிரிழப்பு – நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் சம்பவம் ! on Tuesday, January 14, 2025
நிந்தவூர், அட்டப்பள்ளம் வயல் உள்ளாத்து கட்டு துரிசி அணைக்கட்டுக்கு மேலால் மோட்டார் சைக்கிளில் துரிசியை கடக்க முற்பட்ட போது தவறி விழுந்து நீரில் வீழ்ந்து அடித்து செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் , அட்டப்பளம் வயல் உள்ளாத்து கட்டு பகுதி அருகில் உள்ள ஆலயடிக்கட்டு பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிள்ளையுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்து பின்னர் தான் மட்டும் தனியாக மோட்டார் சைக்கிளில் முன் செல்ல பின்னால் மனைவியுடன் பிள்ளையும் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசுடன் இணைந்த பாலத்தில் பயணம் செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் நிந்தவூரைச் சேர்ந்த அப்துல் லத்தீப் இக்ராம்(வயது-32) என்பவரே இறந்தவராவார்.
இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விடுமுறை நிமித்தம் நாடு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீரில் காணாமல் போனவரை தேடுவதற்கு அப்பகுதியில் நீரோட்டத்தை குறைக்கும் முகமாக தற்காலிகமாக துரிசு மூடிகள் சில உரிய தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் மூடப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தேடுதலில் நிந்தவூர் பொலிஸார், கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி, சாய்ந்தமருது ஜனாஸா பேரவை அணி, நிந்தவூர் தன்னார்வ தொண்டர் அணி என்பன கடும் முயற்சி மேற்கொண்டு சடலத்தை மீட்டெடுத்தனர்.
நிந்தவூர் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.