கலாநிதி பட்டம் விவகாரம் – விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஊழியர்கள்

by sakana1

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாராளுமன்ற பதிவு அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட பலர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் உட்பட பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்குச் சென்று அதிகாரிகள் சிலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

எனினும், சபை முதல்வர் காரியாலயத்தில் இருந்து வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் பதிவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக அமைச்சர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கியதோடு, அது தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்