அம்பாறை சேனாநாயக்க நீர்த்தேக்க வான்கதவு திறப்பு ! on Tuesday, January 14, 2025
அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு செவ்வாய்க்கிழமை (14) மாலை 5 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளா் சகோ. எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே நீரோடும் பகுதிகளில் நீர் நிரம்பி வழிவதால் பெருமளவு நீரைத் திறந்து விட்டால் வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனக் கருதி, நீர் மின் உற்பத்தி நிலையத்தை நோக்கியே நீரை (வெளிப்பாய்ய்ச்சல் அளவு – 800 கியு செக்கன்) திறந்து விட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்;.
எவ்வாறாயினும், இந்த நீரும் கல்லோயா நீருடன் கலந்தே கடலை நோக்கிச் செல்லும் என்பதாலும் மழை தொடர்ந்து பெய்வதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஆகக் கூடிய நீர்மட்டம் 110 அடிகளாக காணப்படுகின்ற நிலையில், நிலையியற் கட்டளையின் படி அம்பாறை அரச அதிபர், நீர்ப்பாசன திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.