on Monday, January 13, 2025
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டையை நண்பனின் வீட்டில் சூட்சுமமாக திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு இளைஞன் ஒருவர் சென்று தனது நண்பனுடன் கதைத்துவிட்டு நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையினை சூட்சுமமான முறையில் திருடிச் சென்று ஆடைகள், சப்பாத்து, மது என 1,80,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலத்திரனியல் அட்டை உரிமையாளருக்கு குறும்செய்தி தொலைபேசிக்கு வந்துள்ளது.
அதனையடுத்து உரிமையாளர் விரைந்து குறித்த இளைஞன் கொள்வனவு செய்த கடைக்கு சென்று சீசிரி கமராவில் சோதனை செய்தபோது தனது மகனின் நண்பரே திருடியமை தெரியவந்துள்ளது. பின்னர் வங்கிக்கு தகவல் வழங்கப்பட்டு வங்கி கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.