உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க மேலிடம் தயாராகிறதா? பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டின் பின்னணி
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
“அதிகாரிகளை நேரடியாக கேட்டு செய்ய வேண்டிய பல பணிகளுக்கு, நாங்கள் லக்னோவுக்குச் சென்று முதலமைச்சரிடம் கேட்க வேண்டியதாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுக்கு முன் முன் ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர்”.
“முதலமைச்சரிடம் புகார் அளித்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பொருள் முதல்வர் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்பதாகும்”.
“அதிகாரிகளின் அணுகுமுறை மற்றும் பிடிவாதத்தால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது, ஆனால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை.”
“காவல்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இது இவ்வாறே தொடர்ந்தால், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரிக்கும்.”
இவை பிபிசியிடம் பேசிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூற்றுகள்.
சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் லோனியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், மாநில அரசின் அமைச்சரான ஆஷிஷ் படேல், பதேஹியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், லக்கிம்பூர் கேரியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல தலைவர்கள் அம்மாநில அரசின் அதிகாரிகள் மீது வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தங்கள் சொந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே, ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இதற்கான காரணத்தை அறிய பாரதிய ஜனதா கட்சி, உத்தர பிரதேச அரசு மற்றும் அங்கு நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிய பிபிசி முயற்சித்தது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
“இது போன்ற சில கருத்துகள் குறிப்பிட்ட ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதாக இருக்கலாம். உத்தர பிரதேச அரசாங்கத்தின் பணிகளையும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணிகளையும் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் பதற்றம் எதுவும் இல்லை, எல்லாம் நன்றாக இருக்கிறது”, என்று உத்தரபிரதேச மாநில அரசின் பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
“அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கீழ் நேரடியாக பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டியதாக இருக்கின்றது. ஆனால் இதுபோன்ற அதிகாரத்துவத்தின் கீழ் வராத அதிகாரிகள், முற்றிலும் சுதந்திரமாக செயல்படலாம். இதுவே சமூகத்திற்கும், அமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் நல்லது”, என்று பெயர் குறிப்பிட விரும்பாத உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகளை குறிவைக்கும் ஆஷிஷ் படேல்
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) தலைவரும், உத்தரபிரதேச அமைச்சருமான ஆஷிஷ் சிங் படேல், மக்களவைத் தேர்தலின் போது, மிர்சாபூரில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் தனது மனைவி அனு பிரியா படேலை தோற்கடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.
சில அதிகாரிகளின் பெயரை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு உத்தர பிரதேசத்தின் அதிகாரத்துவத்தை சேர்ந்த சில அதிகாரிகள் தனக்கு தீங்கு விளைவிக்க சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
அப்னா தளத்தின் (காமேராவாடி) தலைவரும், சிராத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பல்லவி படேல், தொழில்நுட்பக் கல்வித் துறையில் நடந்த பதவி உயர்வுகளில் ஆஷிஷ் படேல் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஆஷிஷ் படேல், “நான் எந்தவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன், இதை நான் முன்பே பல முறை கூறியுள்ளேன்”, என்று கூறினார்.
இந்த சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து, ஆஷிஷ் படேல் லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்தார்.
தங்களது சொந்த அரசாங்கத்தின் அதிகாரிகளை குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, ஆஷிஷ் படேல், “எங்களுக்கு எதிரான சதி மக்களவைத் தேர்தலின் போதே தொடங்கியது. இந்த அதிகாரிகள் யாருடைய உத்தரவின் பேரில் இதைச் செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
நந்த் கிஷோர் குர்ஜார் குற்றச்சாட்டு
காசியாபாத்தில் உள்ள லோனியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், தனது தொகுதியை சேர்ந்த அதிகாரிகள் ஊழல் மற்றும் பசுவதை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பொதுவெளியில் பகிரங்கமான கருத்துகளை தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய நந்த் கிஷோர் குர்ஜார், “காவல் நிலையங்கள் ஊழல் நடக்கும் கூடமாக இருக்கின்றன. பசுவதை பொதுவெளியில் வெளிப்படையாக நடக்கிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் அமைதியாக இருக்க வேண்டுமா?”, என்று கேள்வி எழுப்பினார்.
“சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சரிடம் கேட்டோம். ஆனால் முதல்வர் எங்களுக்கு வாக்குறுதி அளித்தும் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் முதல்வரிடமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்”, என்று நந்த் கிஷோர் குர்ஜார் கூறினார்.
“மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்காக வேலை செய்ய வேண்டும். நாங்கள் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு இயங்கவில்லை. இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன், பல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறே உணர்கிறார்கள். ஆனால் அவர்களால் இது குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை”, என்று நந்த் கிஷோர் குர்ஜார் கூறுகிறார்.
இருப்பினும், நந்த் கிஷோர் குர்ஜார் தனது கருத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தெரிவிப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். ஆனால் இவ்வளவு வெளிப்படையாக பேசினாலும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
“மக்கள் பிரதிநிதிகளால் சாமானிய மக்களின் குரலை கேட்க முடியவில்லை என்றால், அடுத்த தேர்தலில் தலைவர்கள் பொதுமக்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?”, என்று நந்த் கிஷோர் குர்ஜார் குறிப்பிடுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாயா நடத்தும் யூடியூப் சேனலில் பேசிய பதோஹி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
“லஞ்சம் கொடுக்காததற்காக, லக்னோ அதிகாரிகளின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் மீது குண்டர் நடவடிக்கை எடுத்து அவரை சிறைக்கு அனுப்பினார்கள்” என்று பல உயர் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தீனாநாத் பாஸ்கர் கூறினார்.
ஆளும் ஆட்சியான பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தீனாநாத் பாஸ்கர், காவல்துறையினர் பணம் செலுத்தாவிட்டால் குண்டர் சட்டத்தை அவர்கள் மீது பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இருப்பினும், அவர் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. பிபிசி ஹிந்தி அதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்த அதிகாரிகளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து தீனாநாத் பாஸ்கரிடம் நேரடியாக கேட்டறிய பிபிசி பலமுறை அவரை தொடர்புகொள்ள முயன்றது, ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
தீனாநாத் பாஸ்கரின் குற்றச்சாட்டுகளுக்கு உத்தர பிரதேச காவல்துறையிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியிடமிருந்தோ எந்த பதிலும் இல்லை.
தீனாநாத் பாஸ்கர் ஊழல் குறித்து குற்றச்சாட்டுகளை வாய்மொழியாக மட்டுமே முன்வைத்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அவர் அளிக்கவில்லை.
இந்திய சட்டத்தின் கீழ், ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல வழிகள் உள்ளன.
மேலும் பல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
பிபிசியிடம் பேசிய மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், “இந்த நேரத்தில் கட்சியில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகத்தில் தங்களின் குரல் கேட்கப்படவில்லை என்று உணர்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு அதிகாரிகள் குழுவின் செல்வாக்கின் கீழ் முதல்வர் செயல்படுகிறார் என்ற உணர்வு இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது”, என்று தெரிவித்தார்.
“இது முதல்வரை எங்களால் அணுக முடியவில்லை என்று பொருளல்ல. அது தேவைக்கேற்ப நடக்கிறது. ஆனால் பிரச்னை என்னவென்றால், எங்கள் விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், அது கேட்கப்படுவதில்லை”, என்று மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
“இந்த மாதிரியான வெறுப்பு எப்போதும் இருந்ததில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த உணர்வு அதிகரித்துள்ளது”, என்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு அக்கட்சி எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜகவால் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த செயல்திறனை ஆராய்ந்த போது, மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்ததாகவும், இது பொதுமக்களின் அதிருப்திக்கு வழிவகுத்ததாகவும் பல கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனது தொடர்பை அதிகரித்துள்ளார்.
ஆனால், அதையும் மீறி மீண்டும் மாநில அரசு அதிகாரிகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு, நந்தகிஷோர் குர்ஜார், “நாம் பார்ப்பதற்கு எதிராக நடப்பவை குறித்து பேசக் கூடாதா? நாளை நாங்கள் தேர்தலில் போட்டியிட களத்திற்குச் செல்வோம், அதிகாரிகளுக்கு எதிராக அல்ல” என்று கூறுகிறார்.
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை தனது ஆட்சிக் காலத்தில் மேம்படுத்தியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச காவல்துறை கடந்த சில ஆண்டுகளில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் மீது என்கவுண்டர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த என்கவுண்டர்களில் பல சந்தேக நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
குற்றம் மற்றும் ஊழலில் சமரசம் செய்யாத கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதாகக் கூறுகிறது.
ஆனால் இப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த அரசாங்கத்தின் இந்தக் கூற்று குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
தனிப்பட்ட அதிருப்தியா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியா?
பாஜக தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. ஆனால் பல சட்டமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவது தற்செயலானதா அல்லது அது நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் பிபிசி செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான ராம் தத் திரிபாதி கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தப் போராட்டம் தனிப்பட்டதா அல்லது ஒரு கூட்டு முயற்சியா அல்லது இதற்குப் பின்னால் யாரோ ஒருவரின் தூண்டுதல் உள்ளதா என்று கூற முடியாது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சருக்கும் அம்மாநில முதலமைச்சருக்கும் இடையே மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் மோதிக்குப் பிறகு பாஜகவில் யார் பொறுப்பேற்பார்கள் என்பதுதான். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பின்னால் ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று சொல்வது மிகவும் கடினம்”, என்றார்.
இருப்பினும், மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான், பின்னணியில் யாருடைய ஆதரவும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு குரல் கொடுப்பது எளிதல்ல என்று கருதுகிறார்.
“சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்கிருந்தோ ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய தலைமையகத்திலிருந்து ஆதரவைப் பெற்றிருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்” என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.
இதற்கிடையில், ஜன் மோர்ச்சா ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சுமன் குப்தா, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சருக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார்.
“சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோபமாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு கிளர்ச்சி செய்யும் அதிகாரம் இல்லை. இவர்களுக்கு மத்தியில் இருந்து ஆதரவு கிடைத்தது என்பதை யோகி ஆதித்யநாத் புரிந்து கொள்ள முடியாது என்று கூற இயலாது. அடுத்த ஒன்றரை வருடத்தில், மோதிக்கு பிறகு பாஜகவில் யார் வருவார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கும். அதை மனதில் கொண்டு, பாஜகவிற்குள் அரசியல் நடந்து வருகிறது. இந்த அதிருப்தி குரல் எழுப்பப்படுவதற்கு ஒரு காரணம், மத்தியில் இருந்து ஆதரவு கிடைத்ததும்கூட”. என்றார் சுமன் குப்தா ஆவார்.
இருப்பினும் பிபிசியிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களுக்கு எங்கிருந்தும் யாருடைய ஆதரவோ அல்லது அறிவுறுத்தலோ கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
“டெல்லியில் இருந்து செய்தி வந்திருந்தால், போராட்டம் நடத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்திருக்கும்” என்று அந்த எம்எல்ஏ கூறினார்.
“கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசியதில் அவர்கள் அரசாங்கத்தில் தங்கள் பேச்சு கேட்கப்படுவதில்லை என்ற ஒரே கருத்தை அனைவரும் கொண்டுள்ளனர்” என்று இந்த
தங்களுக்குள் பேசும் போது, அரசாங்கத்தில் தங்கள் பேச்சு கேட்கப்படுவதில்லை என்ற ஒரே கருத்தை அனைவரும் கொண்டுள்ளனர்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
அதிகாரிகள் பெயரில் முதல்வர் மீது நேரடி குறிவைப்பா?
அப்படியானால், அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரடியாக குறிவைக்கிறார்களா?
“யோகி ஆதித்யநாத்தை அதிகாரிகள் சூழ்ந்திருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் யோகி ஆதித்யநாத்தை நேரடியாக குறிவைக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை. யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கிற்கு வெளியே அல்லது அவரது நோக்கத்திற்கு வெளியே அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் என்று அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு”. என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.
இருப்பினும், சட்டமன்ற உறுப்பினார்களிடையே மற்றும் அமைச்சர்களிடையே அதிகாரத்துவம் குறித்த அதிருப்தி அதிகரித்து வருவதாக ராம் தத் திரிபாதி நம்புகிறார்.
வரவிருக்கும் தேர்தல்களில் பொதுமக்கள் மத்தியில் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதும், அவர்கள் தங்கள் செல்வாக்கை பொதுமக்களுக்குக் காட்ட முடியாவிட்டால், அது எதிர்காலத்தில் அவர்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய கவலை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை விட, சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடையே தங்கள் பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாதது குறித்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
பாஜகவால் யோகி ஆதித்யநாத்தை நீக்க முடியுமா?
இந்தக் கேள்வி பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் பலமுறை ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த கால உதாரணங்களைப் பார்த்தால், இதற்கான பதில் மிகவும் எளிது, இல்லை.
ஆனால் இந்த கேள்வியில் ஆய்வாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமை மாறக்கூடும் என்று ஷரத் பிரதான் நம்புகிறார்.
“லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த மோசமான முடிவுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தில் தலைமை மாற்றம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் இடைத்தேர்தல்களில், யோகி பாஜகவை ஒன்பது இடங்களில் ஏழு இடங்களில் வெற்றி பெறச் செய்தார்” என்று அவர் கூறுகிறார். இப்போது அயோத்தியில் உள்ள மில்கிபூரில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கும்பமேளாவும் நடைபெறுகிறது. அடுத்த சில மாதங்களில், பாஜக தலைமை உத்தர பிரதேசம் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும்.
ஆனால் பாஜக இந்த முடிவை எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. யோகி ஆதித்யநாத் ஒரு வலிமையான இந்துத் தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் அம்மாநிலத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் உள்ளனர். மற்ற மாநிலங்களில் தேர்தல்களில் பாஜக அவரை நட்சத்திர பிரசாரகராகப் பயன்படுத்தி வருகிறது.
“உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு மாற்றாக பாஜகவிடம் வேறு சிறந்த தலைவர் யாரும் இல்லை. பாஜக தலைமை அவரை மாற்ற விரும்பினாலும், அதைச் செய்வது எளிதல்ல. யோகி பிரதமர் பதவிக்கான போட்டியாளராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். அதனை நோக்கி தான் அவர் செயல்பட்டு வருகிறார்.” என்று சுமன் குப்தா கூறுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், யோகியின் இந்த லட்சியம் பாஜகவில் பலரை சங்கடப்படுத்துகிறது. ஆனால், கட்சி அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், மத்திய தலைமை உத்தர பிரதேச தலைமையை மாற்ற முடிவு செய்தால், அது நிச்சயம் நடைபெறலாம் என்று ராம் தத் திரிபாதி நம்புகிறார்.
“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸில், தொண்டர்களின் விசுவாசம் எந்தவொரு தனி நபரை விடவும் அமைப்புடன்தான் அதிகமாக உள்ளது. பாஜகவில், ஒருவரை நீக்க முடிவு எடுக்கப்பட்டால், தொண்டர்கள் அந்த நபருடன் அல்ல, கட்சியுடனே தொடர்ந்து இருப்பார்கள்” என்று ராம் தத் திரிபாதி கூறுகிறார்.
“யோகி ஆதித்யநாத் ஒரு கட்சி சார்ந்த நபர் அல்ல, அது மக்களவை அல்லது சட்டமன்ற தொகுதி பிரிவாக இருந்தாலும் சரி, யோகி ஆதித்யநாத் அதில் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாஜக தலைமை யோகிக்கு வேறு ஏதாவது பதவியை தீர்மானித்தாலும் யோகி ஆதித்யநாத்தால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு எதிராக கட்சியில் பெரிய கிளர்ச்சி எதுவும் இருக்காது” என்று ராம் தத் திரிபாதி கூறுகிறார்.
யோகி ஆதித்யநாத்தை பாதிக்குமா?
சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த வெளிப்படையான பேச்சு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாதிக்குமா?
“யோகி ஆதித்யநாத் பணியாற்றுவதில் தனக்கென ஒரு முறையைக் கொண்டுள்ளார். இதுபோன்ற கருத்துகள் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது எங்கிருந்து, யாருடைய அறிவுறுத்தல்களின் பேரில் நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்வார்” என்று சுமன் குப்தா கூறுகிறார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மேலிடத் தலைவர்களை டெல்லியில் சந்தித்தார்.
பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கும்பமேளாவிற்கு அழைப்பதற்காக யோகி ஆதித்யநாத் டெல்லி சென்றிருந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துகளுக்கு மத்தியில் நடந்த இந்த சந்திப்பின் அர்த்தமும் என்ன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
யோகி ஆதித்யநாத் எப்போதும் தனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்றே பொது வெளியில் காட்டிக்கொள்வதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த கோபம் முதலமைச்சரை பாதிக்குமா?
இந்தக் கேள்விக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பிபிசியிடம், “இது ஒரு போராட்டம் அல்ல, இதனால் எந்த விளைவும் ஏற்படாது. உத்தர பிரதேசத்தில் ஒரு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளா முடிந்ததும், முதல்வரின் கை இன்னும் ஓங்கும்.”
இந்த செய்திக்காக, பிபிசி ஹிந்தி பாஜகவின் உத்தரபிரதேசத் தலைவர் பூபேந்திர சௌத்ரி, சில செய்தித் தொடர்பாளர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற முயற்சித்தது. ஆனால் இதுவரை யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.