on Monday, January 13, 2025
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கண்டி, பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 4,780 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொனவல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஒருவர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 03.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 25,800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.