18 ஆண்டுகளாக சிறையில் உள்ள பின்லேடன் கூட்டாளியை விடுவிக்க மனைவி கோரிக்கை – அமெரிக்கா செவி சாய்க்குமா?

காணொளிக் குறிப்பு, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்… அல்-கயீதா முன்னாள் தளபதியின் மனைவி அமெரிக்காவிடம் கோரிக்கை

18 ஆண்டுகளாக சிறையில் உள்ள பின்லேடன் கூட்டாளியை விடுவிக்க மனைவி கோரிக்கை – அமெரிக்கா செவி சாய்க்குமா?

அல்-கயீதா அமைப்பின் முன்னாள் தளபதியாக செயல்பட்டவர் அப்த் அல்-ஹாதி அல்-இராக்கி. ஒசாமா பின் லேடனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான இவர், குவாண்டானமோ தடுப்பு முகாமில் 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய வயது 63.

போர் குற்றங்கள் புரிந்ததற்காக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. குவாண்டானமோ தடுப்பு முகாமில் தற்போது மிஞ்சியிருக்கும் சில முக்கியமான கைதிகளில் அவரும் ஒருவர். கடந்த ஆண்டு, அமெரிக்கா அவரை அங்கிருந்து இராக்கில் உள்ள சிறைக்கு அனுப்ப முடிவெடுத்தது.

2003, 2004 ஆண்டுகளில் ராணுவ படைகள் மீது தாக்குதல்கள் நடத்த மனிதர்களை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார் இராக்கி. மேலும், பாமியானில் உள்ள பெரிய பெரிய புத்த சிலைகளை தகர்க்க தாலிபானுக்கு உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

இராக்கில் உள்ள சிறைகள் மோசமாக இருக்கும் என்பதால் அவரை அங்கே மாற்ற வேண்டாம் என்றும், தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் இராக்கிற்கு சென்றால் சில காலங்களில் உயிரிழக்க நேரிடம் என்றும் கவலை தெரிவித்துள்ளார் அவருடைய மனைவி சோனியா அமிரி.

முதன்முறையாக ஊடகங்களில் பேசிய அவர், தன்னுடைய கணவர் அல் இராக்கிக்கு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் அந்த சிறையில், போர் குற்றங்களில் ஈடுபட்ட யேமன் கைதிகளை அமெரிக்கா விடுதலை செய்தது. அவர்களுக்கு விடுதலை வழங்கியது போன்று தன்னுடைய கணவருக்கும் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்கொண்டு பேசிய அவர், அப்படியே அவரை வேறொரு சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றால் கத்தார், ஓமன் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைகளுக்கு அனுப்புங்கள் என்றும் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளார் சோனியா அமிரி.

முழு விவரமும் இந்த வீடியோவில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.