ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சியை மறுசீரமைப்பு செய்து கட்சியின் தலைவர் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரினதும் ஒத்துழைப்பு அவசியமில்லை என அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி – ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில் – ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைய வேண்டும் என ஒரு தரப்பினர் விரும்புகின்றனர்.சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் கட்சியை மறுசீரமைப்பு செய்து கட்சியின் தலைவர் தனது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறில்லையெனில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே இருப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.கட்சியின் தலைவரே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
கேள்வி – கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதாகக்கூறினால் நீங்கள் இணைந்து கொள்வீர்களா?
பதில் – அது பற்றி சிந்திக்க வேண்டும்.அவ்வாறு நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறானது என்பதை என்னை விட எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்கறிவார்.
எனவே சஜித் பிரேமதாச கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அவர் சிறந்த தலைவராக செயற்பட வேண்டும்.
எதிர்க்கட்சிக்கு உள்ள பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்ற வேண்டும்.அவ்வாறு செயற்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்பு எமக்கு அவசியமில்லை.ஐக்கிய மக்கள் சக்தியிலேயே அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அவ்வாறில்லை. இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியமில்லை.இதுவே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.