தனிநபர் பாவனை வாகன இறக்குமதிக்கு இன்னும் அனுமதியில்லை சனிக்கிழமை இரவு நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆயத் தீர்வை (Excise Duty) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் (வர்த்தமானி அறிவித்தல் எண்.. GN 2418-43 dated 10/01/25), இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் என்ஜின் கொள்ளளவின் பிரகாரம் வரி அறவிடுவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
சாதாரணமாக இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் மீது நான்கு அம்சங்களில் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அங்கமாக அலகு கட்டண வீதம் என்பது வாகனத்தின் என்ஜின் கொள்ளளவின் பிரகாரம் அறவிடப்படுவது, இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் பெறுமதியில் விசேட இறக்குமதி வரி, வாகன வகுப்பின் பிரகாரம் விசேட சொகுசு வரி மற்றும் மேற்படி சகல வரிகளும் அடங்கலான தொகை மற்றும் வாகனத்தின் CIF பெறுமதியின் மீது பெறுமதி சேர் வரி (VAT) போன்றன அடங்கியிருக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக, வாகனம் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் வருமான வரி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் இலாப பங்கு போன்றன இலங்கையில் வாகனமொன்றை கொள்வனவு செய்யும் நபருக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், “வணிக மற்றும் தனிநபர் பாவனைக்குரிய வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் திகதி தொடர்பில் தெளிவான அறிவித்தல் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சாதகமான பதில்களை வெளியிட்டிருந்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவில்லை.”