லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?
- எழுதியவர், இமோஜென் ஜேம்ஸ், இயன் யங்ஸ் மற்றும் ஸ்டீவன் மெக்கின்டோஷ்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன் மற்றும் ஹர்ஸ்டினின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் தீயின் பிடியில் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை கென்னத் காட்டுத்தீ 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஈட்டனில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை கிடைத்த தகவலின்படி 13 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதால், லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளும், லட்சக்கணக்கான வாகனங்களும் எரிந்து போயின. இந்த தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், பொதுமக்கள் என பலரும் அடங்குவர்.
வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்?
- ‘கிரேஸி ஹார்ட்’ (Crazy Heart) திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், ‘தி ஓல்ட் மேன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றியவருமான ஜெஃப் பிரிட்ஜஸின் (Jeff Bridges) இல்லம் எரிந்து நாசமானது.
- ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் மெல் கிப்சன் தனது மாலிபு இல்லம் ‘முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். ஜோ ரோகனின் பாட்காஸ்டுக்காக, வேறொரு இடத்தில் மெல் கிப்சன் ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த போது அவரது வீடு தீப்பிடித்தது.
- ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ மற்றும் ‘தி ஃபாதர்’ ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருதுகளை வென்ற அந்தோணி ஹாகின்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு பசிபிக் பாலிசேட்ஸில் இரண்டு வீடுகள் இருந்தன. ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின்’ கூற்றுப்படி, அந்த இரு வீடுகளும் எரிந்துவிட்டன. அந்தோணி ஹாகின்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் கொண்டு செல்வது, மற்றவர்களுக்கு கொடுக்கும் அன்பு மட்டுமே” என்று கூறியுள்ளார்.
- ஹோட்டல் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நடிகை பாரிஸ் ஹில்டன், இந்த வார தொடக்கத்தில் மாலிபுவில் உள்ள தனது வீடு தீயில் எரிந்துபோனதை உறுதிப்படுத்தினார். வெள்ளிக்கிழமை, அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை வெளியிட்டார், அதில் அவரது வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்திருந்ததைக் காண முடிந்தது. “என் வீடு இருந்த இடத்தில் நான் நிற்கிறேன், என் இதயம் உணரும் வலியை, என்னால் விவரிக்க முடியாது” என்றும் அவர் அதில் கூறினார். தனது குடும்பம் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- ‘வென் ஹாரி மெட் சாலி’ (When Harry Met Sally) படத்தில் பணியாற்றிய அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் பில்லி கிரிஸ்டல், பசிபிக் பாலிசேட்ஸில் இருந்த தனது வீட்டை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 1979 முதல் அவர் இந்த வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இந்த வீட்டில்தான் வளர்ந்தனர். இந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அன்பினால் நிரம்பியிருந்தது. யாராலும் பறிக்க முடியாத அழகான நினைவுகள் அதனுடன் இணைந்திருந்தன.” என்று கூறியுள்ளார்.
- நெட்பிளிக்ஸ் தொடரான ‘நோபடி வான்ட்ஸ் திஸ்’-இல் பணியாற்றிய நடிகர் ஆடம் பிராடி மற்றும் அவரது மனைவி லெய்டன் மீஸ்டர் (‘காசிப் கேர்ள்’ தொடரில் பணியாற்றியவர்) ஆகியோரின் வீடு தீயில் அழிந்துவிட்டது.
- ‘கில்மோர் கேர்ள்ஸ்’ மற்றும் ‘ஹீரோஸ்’ படங்களில் நடித்த மிலோ வென்டிமிக்லியா (Milo Ventimiglia) மற்றும் அவரது மனைவி ஜாரா ஆகியோரின் வீடு தீயில் எரிந்து நாசமானது.
- ‘தி வியூ’ எனும் அமெரிக்க விவாத நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளினி ரோஸி ஓ’டோனல், மாலிபுவில் உள்ள தனது கடற்கரை வீடு தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறியுள்ளார்.
- ஜுராசிக் பார்க்கில் பணிபுரிந்த நடிகை டேனிலா பினேடா, தனது வீடு எரிந்து நாசமாகிவிட்டதாகவும், தீயில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியதாகவும் கூறியுள்ளார். தப்பிச் செல்லும் போது, தன்னுடைய மடிக்கணினி மற்றும் வளர்ப்பு நாயை மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்ததாகவும், இப்போது தன்னிடம் ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
- ‘தி ஹில்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிய ஸ்பென்சர் பிராட் மற்றும் ஹெய்டி மான்டாக் ஆகியோர், தங்கள் வீடும் தீயில் இருந்து தப்பவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தனது சமூக ஊடகப் பதிவில், “என் வீடு அழிவதை நான் பாதுகாப்பு கேமராக்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என ஸ்பென்சர் பிராட் கூறியுள்ளார். அவரது மனைவி ஹெய்டி மான்டாக், “துரதிர்ஷ்டவசமாக, எங்கள் வீடு இப்போது இல்லை. நாங்கள் கடினமாக உழைத்து, சம்பாதித்த அனைத்தையும் இழந்துவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.
- பாடகர் மாண்டி மூர் தனது சமூக ஊடகப் பதிவில், “ஆச்சரியம் என்னவென்றால், எங்கள் வீட்டின் பிரதான பகுதி இன்னும் அழியாமல் நிற்கிறது. ஆனால், அல்டேனாவில் உள்ள எங்களது வீடு இனி வாழத் தகுதியற்றது” என்று தெரிவித்துள்ளார்.
- தொலைக்காட்சி தொகுப்பாளர் ரிக்கி லேக் தனது ‘கனவு இல்லம்’ இப்போது முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறியுள்ளார். “இந்த பேரழிவு சம்பவத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் துக்கத்தில் அனுசரிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- நடிகர்கள் ஜான் குட்மேன், அன்னா பெர்ரிஸ் மற்றும் கேரி ஆல்வ்ஸ் ஆகியோரின் வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்துவிட்டன.
- ஹாலிவுட் நடிகை ஜேமி லீ கர்டிஸ், பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் உள்ள தனது வீடு பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் அங்குள்ள சூழ்நிலை ‘ஆபத்தானதாக’ உள்ளது என்றும் கூறியுள்ளார். கர்டிஸ் மற்றும் அவரது கணவரும் நடிகருமான கிறிஸ்டோபர் கெஸ்ட் இருவரும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையாக அறிவித்துள்ளனர்.
- ஜெனரல் ஹாஸ்பிடல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர் கேமரூன் மேட்டிசன், ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது வீடு எரிவதைக் காண முடிகிறது. “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் எங்கள் அழகான வீட்டின் மீதமுள்ள பகுதி இவ்வளவு தான்” என்று கூறியுள்ளார்.
- ‘டாப் கன்: மேவரிக்’ படத்தில் நடித்துள்ள மைல்ஸ் டெல்லர் மற்றும் அவரது மனைவி கெல்லி டெய்லர் ஆகியோரும், பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் உள்ள தங்கள் வீட்டையும் இழந்துள்ளனர்.
- கெல்லி, இன்ஸ்டாகிராமில் தனது வீட்டின் முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படங்களைப் பகிர்ந்து, “குறைந்தபட்சம் எனது திருமண ஆடையையாவது எடுத்திருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- ‘கேசினோ’ மற்றும் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஆகிய படங்களில் பணியாற்றிய நடிகர் ஜேம்ஸ் வூட்ஸ், தான் நினைத்த அளவுக்கு தனது பசிபிக் பாலிசேட்ஸ் வீட்டிற்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறினார். அவர் வெள்ளிக்கிழமையன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு அதிசயம் நடந்தது, நாங்கள் நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று நினைத்த எங்கள் வீட்டைப் பார்த்தோம், அது இன்னும் நிற்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
- பாடகியும் பாடலாசிரியருமான டுவா லிபா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் லாஸ் ஏஞ்சல்லிஸ் நகரத்தை விட்டு வெளியேறி தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். “லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், கடந்த சில நாட்கள் மிகவும் அழிவுகரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தன. எனது நண்பர்கள் மற்றும் நகரத்தில் வாழ்ந்தவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
- பாடகர் மார்க் ஓவன் மற்றும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவரது மனைவி எம்மா பெர்குசன், ‘ஹெலிகாப்டர்களின் சத்தம் கேட்டு தனது குடும்பத்தினர் எழ வேண்டிய நிலை இருந்தது’ என்று கூறியுள்ளார். “எங்கும் கரும்புகை இருந்தது மற்றும் பலத்த காற்று வீசியது, எங்கள் வீடு பிழைப்பது கடினம்.” என்று ஓவன் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸின் பிரண்ட்வுட் பகுதியும் ஆபத்தில் உள்ளது
பாலிசேட்ஸ் பகுதியில் தீ பரவியதால், அருகிலுள்ள ஆடம்பரமான பிரண்ட்வுட் பகுதியும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள சில இடங்களை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பசடேனா உள்ளூர் தீயணைப்புத் துறைத் தலைவர் சாட் அகஸ்டின், மக்கள் வெளியேறுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், கூடைப்பந்து நட்சத்திரம் லெப்ரான் ஜேம்ஸ், நடிகரும் முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், டிஸ்னியின் சிஇஓ பாப் இகர் மற்றும் ராப் பாடகரும் தயாரிப்பாளருமான டாக்டர். டிரே உள்ளிட்ட பிரபலங்களுக்கு இங்கு வீடுகள் உள்ளன.
கெட்டி சென்டர் கலை அருங்காட்சியகமும் இந்த பகுதியில் உள்ளது.
காட்டுத்தீயின் பயங்கரத்தை விவரிக்கும் 6 படங்கள்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.