by sakana1

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சிங்கப்பூர் ராஜாராம் ராமசுப்பன் (கல்வி), ச.கமலக்கண்ணன் சண்முகம் (சமூக மேம்பாடு), ஐக்கிய அரபு அமீரக டாக்டர் ஸ்ரீதேவி சிவானந்தம் (மகளிர் பிரிவு), லட்சுமணன் சோமசுந்தரம் (வணிக பிரிவு), தென்கொரியா செ.ஆரோக்கியராஜ் (அறிவியல், தொழில்நுட்பம்), சிங்கப்பூர் டாக்டர் கங்காதர சுந்தர் (மருத்துவர் பிரிவு), இலங்கை கிருஷ்ணகாந்தன் சந்தீப் (சிறந்த பண்பாட்டு தூதர் – வேர்களை தேடி திட்டம்) ஆகியோருக்கு ‘கணியன் பூங்குன்றனார்’ விருதுகளையும், அமெரிக்க டாக்டர் விஜய் ஜானகிராமனுக்கு ‘தமிழ்மாமணி’ விருதையும் முதல்வர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

‘எத்திசையும் தமிழணங்கே’ என்று, தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகளை தேர்ந்தெடுத்து இந்த விழாவின் கருப்பொருளாக வைத்துள்ளோம். நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மை பிரித்தாலும், தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. உங்களை உறவாக அரவணைக்க தமிழகம் இருக்கிறது. நான் இருக்கிறேன். எதை பற்றியும் கவலை வேண்டாம். நம்பிக்கையோடு வாழுங்கள்.

அயலக மண்ணிலும் தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களின் வழித்தோன்றல்கள் மற்றும் சமீபகாலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. 4-வது ஆண்டாக இந்த விழா நடைபெறுகிறது. ஏதோ ஒன்று கூடினோம். பழம்பெருமைகளை பேசினோம் என்று நாம் கலைந்து போகவில்லை. கடந்த காலங்களில் தீட்டிய திட்டங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, நிகழ்கால வளர்ச்சிப் போக்கை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் அயலக தமிழர்கள் மேலும் சிறப்பாக வாழ்வதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகிறோம்.

இங்கு வழங்கப்பட்ட விருதுகள் மூலம், பண்பாட்டு தூதுவர்களை உருவாக்கி, உலகெங்கும் உள்ள தமிழ் சொந்தங்களோடு உறவு பாலம் அமைப்போம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை, தமிழகத்துக்கு அழைத்து வந்து, அவர்களது வேர்கள் பரவியிருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டுவதே ‘வேர்களை தேடி’ திட்டத்தின் நோக்கம். என் அரசியல் வாழ்க்கையில் இத்திட்டம் ஒரு மைல்கல். இத்திட்டத்தில் இதுவரை 2 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, 157 இளைஞர்கள் தாய் மண்ணுக்கு வந்துள்ளனர். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் நிறைவு நாளான இன்று வந்துள்ளனர். இந்த பயணமும், உறவும் என்றென்றும் தொடர வேண்டும்.

அயலக தமிழர் நல வாரியத்தில் இதுவரை 26,700-க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு காப்பீடு, அவர்களது குடும்பத்தினருக்கு திருமண உதவி, கல்வி உதவி, ஓய்வூதியம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 2021 மே 7 முதல் 2024 நவ.28 வரை அயல்நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 2,414 தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகளில் உயிரிழந்த 864 தமிழர்களின் உடல்களை சொந்த மண்ணுக்கு கொண்டு வந்துள்ளோம்.

நம் தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 100 ஆசிரியர்கள், தமிழ் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அனுப்ப புதிதாக ஒரு திட்டம் உருவாக்கப்படும். இவர்கள் அப்பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பயிற்றுவிப்பார்கள். இதற்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்கும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வேர்கள், மொழி, உறவுகள், இந்த மண், இந்த மக்களை மறக்காதீர்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவுக்கு தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலை வகித்தார். இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நியூ பப்புவா கினி நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், மலேசிய எம்.பி. டத்தோ ஸ்ரீ சரவணன், ரீ-யூனியன் தீவின் மேயர் ஜோ பெடியர், டர்பன் முன்னாள் அமைச்சர் ரவி பிள்ளை, தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்