12 ஆண்டுக்கு பிறகு வெளியான மத கஜ ராஜா கவனத்தை ஈர்த்ததா – இன்றைய சூழலில் கதை ஒத்துப்போகிறதா?

மதகஜ ராஜா

பட மூலாதாரம், @GeminiFilmOffl

நீண்ட காத்திருப்புக்கு பிறகு விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஜனவரி 12 -ஆம் தேதி அன்று வெளியானது.

2013-ஆம் ஆண்டே இந்த திரைப்படம் வெளியாக வேண்டியது, ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பணச் சிக்கலால் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி, சோனு சூட் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பிறகும் இந்த படம் இன்னும் சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி இருக்கின்றதா? இதுகுறித்து பல்வேறு ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தின் கதை என்ன?

தன்னை சுற்றியிருப்பவர்களின் மீது மிகவும் அக்கறை கொண்டவராகவும் அவர்களுக்காக எதையும் செய்பவராக இருக்கிறார் MGR என்னும் மதகஜராஜா (விஷால்). கேபிள் டிவி ஒன்றை நடத்தும் அவர் தன்னுடைய சிறுவயது நண்பர்களை ஒரு திருமணத்தில் சந்திக்கிறார்.

அப்போது அவர்களது வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை பற்றி அறிந்த விஷால் அதனை தீர்க்க நினைக்கிறார். அது என்ன பிரச்னை? தனது நண்பர்களுக்காக விஷால் அந்த பிரச்னையை எவ்வாறு சரி செய்தார்? என்பதே படத்தின் கதை.

மதகஜ ராஜா

பட மூலாதாரம், @GeminiFilmOffl

‘டெம்ப்ளேட் படம்’

“சுந்தர் சி தனது தனது வழக்கமான டெம்ப்ளேட் கதைகளை கொண்டு ஒரு முழு கமர்ஷியல் படமாக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருக்க வேண்டிய ஒன்று என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பது அவசியம். அப்போது வெளியான படங்களில் இருந்த சிறுபிள்ளைத்தனமான காமெடி, இரண்டு ஹீரோயின்கள், ‘கவர்ச்சி’ பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அனைத்தும் இதிலும் உள்ளன”, என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

“விஷாலின் அறிமுகக்காட்சி ‘சீரியல் மாதிரி இருக்கிறது’ என்று தோன்றலாம். முதல் பாதியில் சில இடங்களை பொறுமையாகக் கடந்துவிட்டால்போதும் இரண்டாம் பாதி முழுக்க திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் இருக்கலாம். தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர்கள் எனப் பெயரெடுத்த பலரும் தோல்வி படங்களை கொடுக்கும் சூழலில் சுந்தர் சி இந்த படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்”, என்று தினமணி தெரிவித்துள்ளது.

மதகஜ ராஜா

பட மூலாதாரம், @GeminiFilmOffl

‘சந்தானம் ஒரு பலம்’

“இந்த படம் சந்தானத்தை ஒரு நகைச்சுவை நடிகராக மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. தனது சிறப்பு மிக்க நகைச்சுவை உணர்வால் படத்தில் உள்ள விரிசல்களை மறைத்து ரசிகர்களை மெய்மறந்து சிரிக்கவைக்கிறார். தனது ஒன்-லைனர் நகைச்சுவை மூலமாக அவர் வலு சேர்த்துள்ளார்”, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

“எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கலகலப்பான காட்சிகளுடன் செல்லும் படத்துக்கு சந்தானத்தின் ‘வின்டேஜ்’ நையாண்டிகள், ஒன்லைன் கவுன்டர்கள் பெரிய பலம். பழைய சந்தானத்தை ஆடியன்ஸ் எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் எழும் ஆர்ப்பரிப்புகளே சாட்சி”, என்று இந்து தமிழ் திசை குறிபிட்டுள்ளது.

“நகைச்சுவை என்ற பெயரில் பெண்களின் உடல் குறித்து கிண்டலடிக்கும் வசங்களை படத்தில் சுந்தர் சி குறைததிருக்கலாம். படத்தில் இடம்பெற்ற, அப்பா – மகள் இடையேயான 18+ வயதினருக்கான நகைச்சுவை வசனங்கள் பார்வையாளர்களுக்கு சிறிய நெருடலைத் தருகிறது”, என்று தினமணி இந்த படத்தின் முக்கிய குறையாக தெரிவித்துள்ளது.

மதகஜ ராஜா

பட மூலாதாரம், @GeminiFilmOffl

‘காமெடி சரவெடி’

“மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வாக இருந்தது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. விஷால் குரலில் ஏற்கெனவே ஹிட் ஆன ‘மை டியர் லவ்வரு’ பாடல் வரும் இடத்தில் திரையரங்கு அதிர்கின்றது”, என்று இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.

“அனைத்து தரப்பு ரசிகர்களையும் மையமாக வைத்து என்டர்டெயின்மென்ட் படங்களை இயக்குவதில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர், நகைச்சுவை, காதல் மற்றும் ஆக்‌ஷன் போன்ற அனைத்து அம்சங்களையும் இந்த படத்தில் வைத்து உருவாக்கியுள்ளார்” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

“இந்த படத்தில் எந்த விஷயத்தையும் தீவிரமாக அணுகுவது தவிர்க்கப்பட்டிருப்பதால், விஷால் மற்றும் சோனு சூட் கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய அரசியலின் பார்வையில் இருந்து பார்க்கும்போது படம் மிகவும் மோசமாக தோல்வியாக இருக்கிறது” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

“இது 12 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான படம் என்பதை மட்டும் மனதில் கொண்டு வேறு எந்த முன்முடிவுகளும் இல்லாமல் இந்த படத்தை சென்று பார்த்தால் இது ஒரு ரகளையான ‘காமெடி சரவெடி’ படம் என்ற உத்தரவாதம் இருக்கும்”, என்று இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.