லாஸ் ஏஞ்சலிஸின் தற்போதைய நிலை என்ன? வரும் இரண்டு நாட்களில் காத்திருக்கும் அதிர்ச்சி?
லாஸ் ஏஞ்சலிஸின் தற்போதைய நிலை என்ன? வரும் இரண்டு நாட்களில் காத்திருக்கும் அதிர்ச்சி?
அமெரிக்காவில் கோரமான காட்டுத்தீயின் 7ஆவது நாள் இன்று. காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 24ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 16 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது 3 இடங்களில் உள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறை போராடிவருகிறது. மற்ற காட்டுத்தீ கட்டுக்குள் வந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், லாஸ் ஏஞ்சலிலிஸில் காட்டுத்தீயை தீவிரப்படுத்திய பலத்த காற்று இந்த வாரம் மீண்டும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நகரின் எதிரெதிர் பகுதிகளில் எரிந்துவந்த இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீயான பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீயை கட்டுப்படுத்துவதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தகவலின்படி, 23 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவரும் மிகப்பெரிய தீயான பாலிசேட்ஸ் 13% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவரும் ஈட்டன் 27% கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ சக மாகாணங்கள், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருட்சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றாக இந்த காட்டுத்தீ இருக்கும்.
தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான அக்குவெதர், காட்டுத்தீயால் ஏற்பட்ட நிதி இழப்புகள் $250 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் $275 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறை முயற்சி செய்து வந்தாலும் எதிர்வரவிருக்கும் தீவிர காற்று சாத்தியமான பேரழிவு நிலைமைகளுக்கு வழிவகுக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி முழுவதும் தீ குறித்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் இதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி ஷெரிஃப் ராபர்ட் லூனா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை தீவிர தீ பரவுவதற்கான எச்சரிக்கையை தேசிய வானிலை சேவை விடுத்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 04:00 மணி முதல் புதன்கிழமை நண்பகல் வரை இது நீடிக்கும்.
இந்த காட்டுத்தீக்கான காரணம் என்ன?
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.