ரசிகர்களுக்காக கார் ரேஸை விட்ட நடிகர் அஜித் – மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றது எப்படி?

ரசிகர்களுக்காக கார் ரேஸிங்கை விட முடிவு செய்த நடிகர் அஜீத்குமார், மீண்டும் அதில் நுழைந்து வெற்றி பெற்றது எப்படி

பட மூலாதாரம், Ajithkumar Racing/X

படக்குறிப்பு, ’24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில், அஜித் குமாருக்கு ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ் விருது வழங்கப்பட்டுள்ளது
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

“உனக்கு கார் ஓட்டத் தெரியாதா?”, ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், கதாநாயகனைப் பார்த்து கேட்கும் கேள்வி. அதற்கு அந்த கதாநாயகன் ‘ஏதோ ஓரளவுக்கு ஓட்டுவேன்’ என்று பதில் கூறுகிறார். இந்த ஒரு காட்சிக்கு, அஜித் குமார் ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.

பொதுவாக முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்களில், ரசிகர்களின் கைதட்டல்கள் அல்லது ஆரவாரத்தைப் பெற, அதற்கென திரைக்கதையில் சில மாஸ் சீன்களும் ‘பன்ச்’ வசனங்களும் சேர்க்கப்படும்.

ஆனால் நடிகர் அஜித்தின் திரைப்படங்களைப் பொருத்தவரை, திரையில் அவர் கார் அல்லது பைக் ஓட்டுவது போன்ற காட்சி இருந்தால் போதும். அது ரசிகர்களின் கைத்தட்டலை பெற ஒருபோதும் தவறாது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரபுதேவா திரைப்படங்கள் என்றால் அதில் நடனத்தை எதிர்பார்த்துச் செல்வது போல, நடிகர் அஜித்தின் திரைப்படம் என்றாலே அதில் நிச்சயம் அவர் கார் அல்லது பைக் ஓட்டுவது போல காட்சிகள் இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அவரும் அதைத் திரைப்படங்களில் விரும்பிச் செய்வார்.

பில்லா, ஆரம்பம், மங்காத்தா, என்னை அறிந்தால், விஸ்வாசம், விவேகம், விடாமுயற்சி என இந்தப் பட்டியல் தொடர்கிறது.

காரணம், நிஜ வாழ்வில் பைக் மற்றும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் காட்டும் ஆர்வம் மற்றும் அதில் விபத்துகளைச் சந்தித்த பிறகும் கூட தொடர்ந்து ஈடுபடுவது, திரைப்படங்களைக் கடந்த ஒரு அடையாளத்தை அவருக்கு கொடுத்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அறிவித்ததால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், இப்போது துபையில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்ததையும், அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டதையும் கொண்டாடி வருகிறார்கள்.

அஜீத்

பட மூலாதாரம், Ajithkumar Racing/X

படக்குறிப்பு, கார் ரேஸிங்கில் தனக்கு கிடைக்கும் மனநிறைவுக்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் அஜித் கூறியிருந்தார்

பைக் ரேஸிங்கை அஜித் கைவிட்டது ஏன்?

“அமராவதி படத்திற்கு பிறகு பைக் ரேஸிங் செய்து ஏற்பட்ட விபத்தால், பல சினிமா வாய்ப்புகளை இழந்தேன். பிறகு சினிமாவில் கவனம் செலுத்தியதால் பைக் ரேஸிங் பக்கம் செல்ல முடியவில்லை. ஏதேனும் ஒன்றை மட்டுமே பார்க்கமுடியும் என்பதால் பைக் ரேஸிங் வேண்டாம் என முடிவு செய்தேன்” 2007-ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியானபிறகு, ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித் கூறிய பதில் இது.

பைக் ரேஸிங் வேண்டாம் என நினைத்த நடிகர் அஜித், பிறகு 2003இல் கார் ரேஸிங் பக்கம் சென்றதற்கான காரணத்தையும் அந்தப் பேட்டியில் சொல்லியிருப்பார்.

“ஒரு கட்டத்தில் எனது திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனக்கு பிடித்த ஒன்றை செய்ய வேண்டுமென தோன்றியது. இம்முறை கார் ரேஸிங்கில் கலந்து கொண்டேன். மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன்.” என்று கூறியிருப்பார்.

கார் ரேஸிங்கில் தனக்கு கிடைக்கும் மனநிறைவுக்கு நிகர் வேறு ஏதும் இல்லை எனவும், ஆனால் தனது ரசிகர்களுக்காக அதை விட்டுவிட்டு இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் அப்போது கூறியிருப்பார்.

2002-ஆம் ஆண்டு, ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித், அதில் நான்காம் இடம் பிடித்தார்.

நடிகர் அஜித்

பட மூலாதாரம், FMSCI

படக்குறிப்பு, தனது பயிற்சியாளர் அக்பர் இப்ராஹிமுடன் நடிகர் அஜித் (கோப்புப் படம்)

பிறகு 2003-ஆம் ஆண்டு நடந்த ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்பில் (Formula BMW Asia) கலந்துகொண்ட அவர், அதில் 12-ஆம் இடத்தைப் பிடித்தார். பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் ஃபார்முலா 3 நேஷனல் கிளாஸ் (British Formula 3 – National Class) பந்தயத்தில் கலந்துகொண்டு 7வது இடம் பிடித்தார்.

அந்தக் காலகட்டத்தில் அவருக்கு பயிற்சியாளராக இருந்தவர் முன்னாள் ஃபார்முலா கார் ரேஸிங் வீரர் அக்பர் இப்ராஹிம். தற்போது இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பின் (Federation of Motor Sports Clubs of India- எப்எம்எஸ்சிஐ) தலைவராக உள்ளார்.

இதற்கு பிறகு ஆறு வருடங்களுக்கு மேல் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகியே இருந்தார்.

‘கார் ரேஸிங்கில் இருந்தபோது யாருமே ஊக்குவிக்கவில்லை’

நடிகர் அஜித்

பட மூலாதாரம், Ajithkumar Racing/X

அதற்கு நடுவே 2007இல் அளித்த பேட்டியில், “நான் கார் ரேஸிங்கில் இருந்தபோது அதை யாருமே கேட்கவில்லை அல்லது என்னை ஊக்குவிக்கவில்லை. அதை விட்டபிறகு ஏன் விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள். எனது ரசிகர்கள் என்னிடமிருந்து நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து ரேஸிங்கில் ஈடுபடுவதை விட்டேன்” என்று கூறியிருப்பார்.

பிறகு 2010-ஆம் ஆண்டு, எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் (FIA Formula Two Championship) சீசனில் பங்கேற்றார் அஜித். ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 19 வரை ஐரோப்பாவில் இந்தத் சாம்பியன்ஷிப் சீசன் நடைபெற்றது.

அதற்கு முன்பாக பிப்ரவரி 2010இல் சென்னையில் நடந்த எம்ஆர்எஃப் பந்தயத் தொடரின் (MRF racing series) இறுதிச் சுற்றில் போட்டியிட்டார், ஆனால் இயந்திரக் கோளாறுகள் காரணமாக பந்தயத்தை முடிக்கத் தவறிவிட்டார்.

அதிலிருந்து கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து 2024இல் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்த நடிகர் அஜித், சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியைத் தொடங்கினார்.

துபையில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற ’24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான இந்த ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ் என்ற பிரிவில் பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தொடரில், போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸ் என்ற பிரிவில் கலந்துகொண்ட அஜித்குமாருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ என்ற விருது வழங்கப்பட்டது.

சேத்தன்

பட மூலாதாரம், Chetan

படக்குறிப்பு, 53 வயதில் கார் ரேஸிங் துறையில் நடிகர் அஜித் சாதித்துள்ளது, தன்னைப் போன்ற ரேஸர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்கிறார் சேத்தன்

“இந்த ’24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸ் என்பது மற்ற கார் ரேஸ் போல அல்ல. ஒருவரின் உச்சபட்ச ஆற்றலை சோதிக்கும் ஒரு ரேஸ். காரணம் இதில் 24 மணிநேரத்தில் எந்த அணி சிறந்த தூரத்தைக் கடக்கிறது என்பதைப் பொறுத்துதான் வெற்றி தீர்மானிக்கப்படும்” என்கிறார் ஃபார்முலா 4 கார் பந்தய வீரரும், 18 ஆண்டுகளாக செயற்கைக் கால்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருபவருமான சேத்தன் கொரடா.

இதில் போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ் பிரிவில் ஒரு அணியை வழிநடத்த மிகச்சிறந்த அனுபவம் இருந்தால் மட்டுமே முடியும் என்று கூறும் சேத்தன், ”பல வருடங்களாக நேரடி கார் ரேஸிங்கை விட்டு விலகியிருந்தாலும் கூட நடிகர் அஜித் அதை உன்னிப்பாக கவனித்தும் கற்றும் வந்திருக்கிறார்” என்கிறார்.

நடிகர் அஜித் மேற்கொண்ட நெடுந்தூர மோட்டார் பைக் பயணங்களும் இந்த 24 மணிநேர ரேஸிற்கு தயாராக உதவியிருக்கும் என்று சேத்தன் கூறுகிறார்.

“இந்திய அணி ஒன்று 24 மணிநேர சர்வதேச ரேஸில் 3-வது இடத்தைப் பிடிப்பது பெரிய விஷயம். காரணம், ஒரு அணியை 24 மணிநேரம் ரேஸ் கார் ஓட்ட வழிநடத்த வேண்டும். அது மட்டுமின்றி அவரும் கூட போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸில் கலந்துகொண்டு ஓட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் அவர் பெற்ற தோல்விகள், காயங்கள்தான், அவருக்கு தேவையான அனுபவத்தை வழங்கியுள்ளன.” என்கிறார்.

53 வயதில் கூட தனக்கு பிடித்த துறையில் நுழைந்து சாதித்துள்ள நடிகர் அஜித் தன்னைப் போன்ற கார் ரேஸர்களுக்கு ஒரு முன்னுதாரணம் எனக் கூறுகிறார் சேத்தன்.

“கார் ரேஸிங்கில், அதுவும் வழக்கமான பந்தயம் போல அல்லாமல் அதிக நேரம் ஓட்டுவது தொழில்முறை கார் பந்தய வீரர்கள் மட்டுமே முடியும். அப்படியிருக்க ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, ஒரு நல்ல கார் ரேஸர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்” என்கிறார் சேத்தன் கொரடா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு