சந்தர்ப்பத்தினை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அயலக தமிழர் தின விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழகம் சென்றிருக்கின்ற நிலையிலேயே முன்னாள் கடற்றொழில் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘தமிழகத்தில் தற்போது இருக்கின்ற தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் உட்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடி எமது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும்.
அதேபோன்று, தமிழக மக்களுக்கும் உண்மைகளை தெளிவுபடுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.
கடந்த காலங்களில் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு எம்மால் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக தமிழக முதல்வர் உட்பட்ட தமிழக தலைவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை சாத்தியமாகவில்லை.
எனவே, தற்போது கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, எமது வளங்கள் அழிக்கப்படுவதையும், எமது கடற்றொழிலாளர்ளின் வாழ்வாதாரச் சுரண்டல்களை நிறுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.