கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிக்கையை டென்மார்க் பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் நிராகரித்துள்ளார்.
  • எழுதியவர், லோரா கோஸி (கோபன்ஹேகன்), ராபர்ட் கிரீனால் (லண்டன்)
  • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

2019-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தின் போது டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்த வாரம் அதற்கு ஒரு படி மேலே சென்ற அவர், கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா தனது பொருளாதார அல்லது ராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் விருப்பம் குறித்து கருத்து தெரிவித்த டென்மார்க் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும் அது விற்பனைக்கு இல்லை என்றும் கிரீன்லாந்து தன்னாட்சிப் பிரதேச பிரதமர் மூய்ச் பி ஏகா (Múte B. Egede) கடந்த மாதம் தெரிவித்தார்.

அனைத்திற்கும் மேலாக இரண்டு நேட்டோ நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பிரதேசம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு ​​இந்த அசாதாரணமான சூழ்நிலை எவ்வாறு எழுந்தது? 80 சதவிகிதம் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதி ஏராளமான கனிம வளங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஆண்டுகளாக டென்மார்க் ஆளுகையின் கீழ் இருக்கும் கிரீன்லாந்தின் மக்கள் தொகை 56 ஆயிரம். இந்த நடப்பு சூழ்நிலை இவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்?

கிரீன்லாந்தின் வருங்காலம் பற்றிய நான்கு சாத்தியக்கூறுகளை இங்கே நாம் ஆராய்வோம்.

1. கிரீன்லாந்து மீது டிரம்ப் ஆர்வம் இழக்கலாம்

கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் சமீபத்தில் கிரீன்லாந்து சென்றிருந்தார்

டிரம்பின் அறிக்கை வெறும் பாசாங்கு என்று சில ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் ரஷ்யாவும் முயற்சி செய்துவரும் நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பை அதிகரிக்க டென்மார்க்கை ஊக்குவிக்கும் வகையில் இது செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் டென்மார்க் கிரீன்லாந்திற்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ராணுவ உதவித்தொகுப்பை அறிவித்தது. இந்த உதவித் தொகுப்பை வழங்குவது தொடர்பான முடிவுகள் டிரம்பின் அறிக்கைகளுக்கு முன்பே இறுதிசெய்யப்பட்டது. ஆனால் டிரம்பின் அறிக்கை வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சரால் “விதியின் விளையாட்டு” என்று வர்ணிக்கப்பட்டது.

“ஆர்க்டிக்கில் டென்மார்க் தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் அல்லது அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்காவை அனுமதிக்க வேண்டும் என்பதே டிரம்ப் கூறியதில் முக்கியமான விஷயம்,” என்று டென்மார்க்கின் பாலிடிகன் செய்தித்தாளின் தலைமை அரசியல் செய்தியாளர் எலிசபெத் ஸ்வெயின் குறிப்பிட்டார்.

‘அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான டிரம்பின் முயற்சி இது’ என்று ராயல் டேனிஷ் டிஃபென்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியரான மார்க் ஜேக்கப்சன் கருதுகிறார். அதே நேரத்தில் “கிரீன்லாந்து இந்த வாய்ப்பை சுதந்திரத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவும், சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்துகிறது,” என்றார் அவர்.

டிரம்ப் கிரீன்லாந்தின் மீதான ஆர்வத்தை இனி இழந்தாலும் கூட, அவர் (ட்ரம்ப்) இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று ஜேக்கப்சன் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் சுதந்திரம் பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது இந்த விவாதம் எதிர் திசையிலும் செல்லக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

2. சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கு கிரீன்லாந்து விருப்பம்

கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1951-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் மூலம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க் தனது இறையாண்மையை நிறுவியது.

தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற ஒருமித்த கருத்து கிரீன்லாந்தில் நிலவுகிறது. கிரீன்லாந்து இதை ஆதரித்து வாக்களித்தால் அதனை டென்மார்க் ஆதரிக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலப் பணிகளுக்கான மானியங்களை டென்மார்க் தொடர்ந்து அளிக்கும் என்ற உத்தரவாதம் கிரீன்லாந்து மக்களுக்கு கிடைக்கும் வரை இத்தகைய வாக்களிப்பு நடக்கும் சாத்தியக்கூறு இல்லை.

“கிரீன்லாந்தின் பிரதமர் இப்போது கோபமாக இருக்கலாம். ஆனால் அவர் உண்மையில் ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால், கிரீன்லாந்தின் பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களை அவர் எவ்வாறு பாதுகாப்பார் என்பதற்கான ஒரு வலுவான வாதத்தை அவர் முன்வைக்க வேண்டும்” என்று டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான உல்ரிக் கெய்ட் பிபிசியிடம் கூறினார்.

இந்த விவகாரத்தில் சாத்தியமான தீர்வு என்பது, அமெரிக்கா தற்போது பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா மற்றும் பலாவ் நாடுகளுடன் சுதந்திர கூட்டமைப்பாக செயல்படுவது போன்று டென்மார்க்கும் செயல்படுவது.

கிரீன்லாந்து மற்றும் ஃபரோ தீவுகள் இரண்டிற்கும் இதுபோன்ற அந்தஸ்தை டென்மார்க் முன்பு எதிர்த்தது. ஆனால், டென்மார்க்கின் தற்போதைய பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் அதைப் பற்றி அவ்வளவு உறுதியாக இல்லை என்று முனைவர் கெய்ட் கூறுகிறார்.

“கிரீன்லாந்தின் வரலாற்று அனுபவத்தைப் பற்றிய டென்மார்க்கின் புரிதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளது. டென்மார்க் இப்போது தன் காலனித்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய விவாதங்கள், “டென்மார்க் ஆர்க்டிக்கில் நீடித்திருப்பது நல்லது. கிரீன்லாந்துடனான உறவு பலவீனமாக இருந்தாலும் கூட அதனுடன் ஏதோ ஒருவித உறவைப் பேண வேண்டும் என்று சொல்ல ஃபெட்ரிக்சனை வற்புறுத்தக் கூடும்,” என அவர் மேலும் கூறினார்.

ஆனால் டென்மார்க்கின் பிடியில் இருந்து விடுபடுவதில் கிரீன்லாந்து வெற்றி பெற்றாலும் அமெரிக்காவிடமிருந்து விடுபட முடியாது என்பது சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு அமெரிக்கா, அதன் பிறகு உண்மையில் தீவை விட்டு முழுமையாக வெளியேறவில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்பிற்கு இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறது.

1951ஆம் ஆண்டின் ஒப்பந்தம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க்கின் இறையாண்மையை நிறுவியது. ஆயினும் அமெரிக்கா விரும்பிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டன.

கிரீன்லாந்தின் அதிகாரிகள் கடந்த இரண்டு அமெரிக்க அதிபர்களின் நிர்வாகங்களுடன் தொடர்பில் இருந்ததாக டாக்டர் கெய்ட் கூறினார்.

“அமெரிக்கா அங்கிருந்து ஒருபோதும் வெளியேறாது என்பதை இப்போது கிரீன்லாந்து மக்கள் அறிவார்கள்” என்று அவர் கூறினார்.

3. டிரம்ப் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்தால் என்ன நடக்கும்?

கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினால் அது பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

பொருளாதாரம் குறித்த டிரம்பின் அறிக்கைகள் டென்மார்க்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். ஏனெனில் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக கிரீன்லாந்து விஷயத்தில் சில சலுகைகளை வழங்க டென்மார்க் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

டென்மார்க் அரசு இதற்கு தயாராகி வருகிறது. இது ஆர்க்டிக் பகுதி என்பதால் மட்டுமே நடக்கவில்லை என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறினார்.

அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 10% நேரடி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்துகிறார். இது ஐரோப்பிய நாடுகளுக்கு நிறைய சிரமங்களை உருவாக்கக் கூடும். அதனால் தான் சில டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து சிந்தித்து வருகின்றன.

வரிகளை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளில் 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர கால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) செயல்படுத்துவதும் அடங்கும் என்று சர்வதேச சட்ட நிறுவனமான பில்ஸ்பரியை சேர்ந்த பெஞ்சமின் கோடே, ‘மார்க்கெட்வாட்ச்’ வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

டென்மார்க்கின் முக்கிய தொழில்களில் ஒன்றான மருந்துத் துறையை இது பாதிக்கக்கூடும். அமெரிக்கா, காது கேட்கும் கருவிகள் (Hearing aid) மற்றும் இன்சுலின் போன்ற பெரும்பாலான தயாரிப்புகளை டென்மார்க்கிலிருந்து வாங்குகிறது. ‘ஓசெம்பிக்’ என்ற நீரிழிவு மருந்தை டேனிஷ் நிறுவனமான ‘நோவோ நோர்டிஸ்க்’ தயாரிக்கிறது.

அவற்றின் விலை அதிகரிப்பதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

4. கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா?

கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்கா, டேனிஷ் அரசுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இருப்பு உள்ளது. அங்கு ஏராளமான அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.

அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் சாத்தியக்கூறு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ராணுவ நடவடிக்கையை டிரம்ப் நிராகரிக்காதது, அது ஒரு தெரிவாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்காது. ஏனெனில் அங்கு ஏற்கனவே அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வீரர்களும் உள்ளனர்.

“கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஏற்கனவே உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. டிரம்பின் அறிக்கைகள் அவருக்குப் புரியாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது” என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறுகிறார்.

கிரீன்லாந்தில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது சர்வதேச பிரச்னையாக மாறும்.

“டிரம்ப் கிரீன்லாந்தை தாக்கினால் நேட்டோவின் பிரிவு 5-இன் படி அவர் நேட்டோவைத் தாக்குவதாக பொருள்படும். ஆனால் ஒரு நேட்டோ நாடு மற்றொரு நேட்டோ உறுப்பு நாட்டைத் தாக்கினால், அங்கு ‘நேட்டோ’ இருக்காது.” என்று ஸ்வெயின் கூறுகிறார்.

“சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவான் பற்றிப் பேசுவது போலவோ அல்லது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேன் பற்றிப் பேசுவது போலவோ டிரம்பின் பேச்சு இருக்கிறது,” என்று கெய்ட் தெரிவித்தார்.

“இந்த நிலத்தை எடுத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். நாம் உண்மையில் அவரது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டால், இது மேற்கத்திய நாடுகளின் முழு கூட்டணிக்கும் ஒரு மோசமான சமிக்ஞையாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

காணொளிக் குறிப்பு, டிரம்ப்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.