ஆட்சிகள் மாறினாலும் வடக்கு, கிழக்கில் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை புதிய அரசாங்கத்தின் கீழும் தொடர்கிறது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ரோஹிங்கியாக்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தும் வகையில ஆர்ப்பாட்டமொன்று அண்மையில் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும், அதுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோவிற்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் கடத்தல் விசாரணைப் பிரிவிற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை நாடு கடத்தக் கூடாது என கோரி கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு சென்ற பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.
மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என கோரி சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் 2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு ஜனாதிபதி செயலகத்திடம் கடிதமொன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.