பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த ‘கேதன் பரேக்’ சிக்கியது எப்படி?

செபி, பங்குச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தினேஷ் உப்ரீதி
  • பதவி, பிபிசி நிருபர்

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான `செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா’ (செபி) சமீபத்தில் கேதன் பரேக் உட்பட மூன்று பேர் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் பங்கேற்க தடை விதித்தது.

இவர்கள் மூவர் மீதும் ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ (front running) மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் மூலமாக அவர்கள் ரூ.65.77 கோடி சட்டவிரோதமாக ஈட்டியதாக செபி கூறுகிறது.

கேதன் பரேக் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டறிய செபி புதிய முறைகளைப் பயன்படுத்தியது. கேதன் பரேக் தனது அடையாளத்தை மறைக்க வெவ்வேறு தொலைபேசி எண்களையும் பெயர்களையும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், செபி அவரின் முறைகேடுகளை கண்டுபிடித்துவிட்டது.

சில முக்கிய தொடர்புகளை வைத்து இந்த மோசடியை செபி அடையாளம் கண்டுள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது? பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த கேதன் பரேக் சிக்கியது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இந்தியாவில் இயங்கும் மற்றும் செயல்படும் ஒரு முகவர் (facilitator) தேவை. அவர்கள் முதலீட்டாளர்களுக்கு உதவியாளர்கள் போன்று செயல்படுவர்.

இந்த பங்கு சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை அதிக வருமானம் ஈட்டும் வழிகளில் முதலீடு செய்ய உள்ளூர் முகவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ரோஹித் சல்கோன்கர் ஒரு உதவியாளர் (facilitator). அவர் அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகிறார்.

கேதன் பரேக், ரோஹித் சல்கோன்கருடன் இணைந்து இந்த ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ முறைகேட்டைத் திட்டமிட்டதாக செபி தெரிவித்துள்ளது.

செபி, பங்குச் சந்தை, முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேதன் பரேக், ரோஹித் சல்கோன்கருடன் இணைந்து இந்த ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ முறைகேட்டைத் திட்டமிட்டதாக செபி தெரிவித்துள்ளது

‘ஃப்ரண்ட் ரன்னிங்’ (front running) மோசடி என்றால் என்ன?

பங்குச் சந்தையில் நடக்கும் பல மோசடிகளில் ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ (front running) மோசடியும் ஒன்று. அதாவது, பங்குச் சந்தையில் ஒரு பெரிய வர்த்தகம் நடப்பதற்கு முன்னரே அதை பற்றி தகவல் தெரிந்து கொண்டு அந்த வர்த்தகத்தில் `முன்னணியில் இயங்குவதற்காக’ செய்யப்படும் மோசடி.

இந்த மோசடியில் தனது வாடிக்கையாளர் வழங்கிய தகவல்களை பயன்படுத்தி லாபம் ஈட்டுவார்கள். சமீபத்தில் நடந்துள்ள இந்த ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ மோசடி, இது எப்படி நடக்கும் என்பதைக் காட்டுகிறது.

இதில், ஒரு பங்குத் தரகர் அல்லது வர்த்தகர் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்க விரும்பும் பங்குகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்கிறார். இதனையடுத்து அவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்.

`டைகர் குளோபல்’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது என்று வைத்துக் கொள்வோம். எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்பதை அந்நிறுவனம் முடிவு செய்யும் நிலையில், இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் உதவியாளராக (facilitator) இருக்கும் ரோஹித் சல்கோன்கருக்கு தகவல் சென்றடையும்.

அமெரிக்க நிறுவனம் எந்த நிறுவனத்தின் பங்குகளை எந்த விலையில், எப்போது வாங்கும் அல்லது விற்கும் என்ற விவரங்கள் அவருக்குத் தெரியும்.

தனது அமெரிக்க வாடிக்கையாளரைப் பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய ரோஹித், அதற்கு மாறாக கேதன் பரேக்கிற்கு தகவலை அனுப்புகிறார். பின்னர் கேதன் பரேக்கும் அவரது கூட்டாளிகளும் தங்கள் ‘மோசடி விளையாட்டை’ தொடங்குகின்றனர்.

உதாரணமாக, ஒரு அமெரிக்க நிறுவனம் ஒரு நிறுவனத்தின் ஒரு லட்சம் பங்குகளை ஒவ்வொன்றும் நூறு ரூபாய் விலையில் வாங்க முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். கேதன் பரேக் இந்த தகவலை அறிந்ததும், அமெரிக்க நிறுவனம் வாங்க நினைக்கும் நிறுவனத்தின் பங்குகளை நூறு ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் அவரது சகாக்கள் வாங்குகிறார்கள்.

ஒரு அமெரிக்க நிறுவனம் ரோஹித்திடம் தங்களுக்கு ஒரு லட்சம் பங்குகள் வேண்டும் என்று சொன்னதும், கேதன் பரேக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து 100 ரூபாய்க்கு மேல் செலுத்தி வாங்குகிறது.

கேதன் பரேக்கும் அவரது குழுவும் ரூ.100 பங்குகளை ரூ.106க்கு விற்றால், ஒரு பங்கிற்கு ரூ.6 லாபம் கிடைக்கும். ஒவ்வொரு லட்சம் பங்குகளுக்கும் 6 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம், ஆபத்து இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.

இதை பங்குச் சந்தையில் ‘ ஃப்ரண்ட் ரன்னிங் ‘ என்பர். இந்தியாவில் இது குற்றமாக கருதப்படுகிறது.

செபி, மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு பங்குத் தரகர் அல்லது வர்த்தகர் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்க விரும்பும் பங்குகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்து அவற்றை வாங்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபடுவது ஃப்ரண்ட் ரன்னிங் எனப்படுகிறது

கேதன் பரேக் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியது எப்படி?

கேதன் பரேக்கின் நெட்வொர்க் மிகவும் பெரியளவில் உள்ளது என்று செபி கூறுகிறது. இதில் அசோக் போத்தார் மற்றும் பலர் இயங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஜிஆர்டி (GRD) செக்யூரிட்டீஸ் மற்றும் சலாசர் பங்கு தரகுகளில் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘ ஃப்ரண்ட் ரன்னிங் ‘ மோசடியில் ஈடுபட்டவர்கள்.

அமெரிக்காவில் உள்ள டைகர் குளோபல் நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளை அவர்கள் ஏற்கனவே வாங்கியுள்ளனர்.

இந்த முழு விவகாரமும் வெவ்வேறு மொபைல் எண்கள் மூலம் செய்யப்பட்டது. இவை அனைத்தும் கேதன் பரேக் மற்றும் அவரது கூட்டாளிகளால் நடத்தப்பட்டது. இதன் மூலம் கேதன் பரேக் ரூ. 65 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

செபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேதன் பரேக்கின் நெட்வொர்க் மிகவும் பெரியளவில் உள்ளது என்று செபி கூறுகிறது.

கேதன் பரேக் சிக்கியது எப்படி ?

கேதன் பரேக் நெட்வொர்க்கை அடையாளம் காண செபியிடம் என்னென்ன தகவல் இருந்தது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், கேதன் பரேக் நெட்வொர்க்கைக் கண்டுபிடிப்பது என்பது எளிதல்ல. பங்குச்சந்தையில் நடந்த ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகள் மற்றும் அவை நடந்த விதத்தை ஆய்வு செய்த பின்னரே இந்த நெட்வொர்க்கை செபியால் அடையாளம் காண முடிந்தது. இதற்காக, பங்கு வாங்கும் முறையை அடையாளம் கண்டு, அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, உறுப்பினர்கள் மொபைல் போன்களில் அனுப்பும் அனைத்து செய்திகளையும் அடையாளம் கண்டு, நெட்வொர்க் உறுப்பினர்களைப் பற்றி அறிந்து கொண்டது.

கேதன் பரேக் தனது நெருங்கிய நண்பர்களுடன் 10 மொபைல் போன்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக செபி தெரிவித்துள்ளது. இந்த பத்து மொபைல் போன் எண்கள் எதுவும் அவர் பெயரில் இல்லை. கேதன் பரேக்கிடம் பேசியவர்கள் ஜாக், ஜான், பாஸ், பாய், பாபி, கேத்தன் பரேக் என்று அவரது பெயரை சேமித்து வைத்தனர் என்று செபி வாரியம் கூறியது.

அதன் விசாரணையின் ஒரு பகுதியாக, கேதன் பரேக் பயன்படுத்திய பத்து எண்களில் ஒன்று அவரது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதை செபி கண்டறிந்தது. இந்த எண்ணின் மூலம் செயல்படுபவர்கள் யார், எந்தெந்த எண்களுக்கு போன் செய்தார்கள் என பல்வேறு விவரங்களை சேகரித்து, அனைவரையும் ஆய்வு செய்து, அதன் பின்னணியில் இருந்தவர் கேதன் பரேக் என அடையாளம் காணப்பட்டது.

செபி விசாரணையில் இன்னொரு சுவாரஸ்யமான உண்மை தெரிய வந்தது. செபியால் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்பட்ட ஒருவரான சஞ்சய் தபாடியா, பிப்ரவரி 15 அன்று ‘ஜாக் லேட்டஸ்ட்’ என சேமித்த எண்ணுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று செய்தி அனுப்பினார்.

கேதன் பரேக்கின் பான் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியும் இதுதான். இதை கவனித்த செபிக்கு கேதன் பரேக்கின் நெட்வொர்க் மீது சந்தேகம் ஏற்பட்டது.

செபி, பங்குச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேதன் பரேக் நெட்வொர்க்கை அடையாளம் காண செபியிடம் என்னென்ன தகவல் இருந்தது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

கேதன் பரேக் யார்?

`கேதன் பரேக்’.

இந்திய பங்குச் சந்தைகளில் நன்கு அறியப்பட்ட ஒரு பெயர். பங்கு சந்தை முகவர்கள், பயனர்கள் அவருடைய ஒவ்வொரு அசைவையும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

தற்போது கொல்கத்தா பங்குச் சந்தையில் அவர் செல்வாக்கு செலுத்துகிறார். 1999 மற்றும் 2000க்கு இடையில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்த போது, ​​பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் தொடங்கியது. அதே நேரத்தில் கேதன் பரேக் செய்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்தது.

வங்கிகள் மற்றும் விளம்பரதாரர்களின் பணத்தைப் பயன்படுத்தி கேதன் பரேக் சட்டவிரோதமான முறையில் பங்குகளின் விலையை உயர்த்தி, பின்னர் விலை அதிகரித்த பிறகு அவற்றை விற்று முறைகேடுகள் செய்தது செபியின் விசாரணையில் தெரியவந்தது.

2001 மார்ச் மாதத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கேதன் 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.

அதன் பிறகும் பங்குச் சந்தையில் பல முறைகேடுகள் நடந்தன. இதன் விளைவாக, வர்த்தக சுழற்சி ஒரு வாரத்தில் இருந்து ஒரு நாளாக குறைக்கப்பட்டது. `பட்லா’ வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கேதன் பரேக் 14 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.