சென்னை: செயற்கையாக கடல் அலைகளை உருவாக்கி ஆய்வு – சுனாமி, புயல் பாதிப்பை தடுக்க எவ்வாறு உதவும்?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை நம்மால் மறக்கவே முடியாது. சுனாமி, புயல் காலங்களில் ஏற்படும் கடல் சீற்றம் ஆகியவை கடற்கரையோரம் வாழும் மக்களின் வாழ்விலும், இந்திய துறைமுகங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது ஐஐடி மெட்ராஸ்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் (Shallow Wave Basin Research Facility) ஆசியாவிலேயே மிகப்பெரியது என ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இங்கு பல்வேறு விதமான கடல் அலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் என்றால் என்ன?
“ஒருபுறம் காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்கிறது என்றால், மறுபுறம் அடிக்கடி புயல்கள் உருவாகின்றன. கடந்த பத்தாண்டுகளில் புயல்கள் உருவாவது அதிகரித்துள்ளது. அப்படியிருக்க அதேமாதிரியான சூழல்களை இங்கே உருவாக்கி, அப்போது கடல் அலைகளின் இயக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்ய முடியும்” என்கிறார் ஐஐடி மெட்ராஸின் பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் ஸ்ரீராம் வெங்கடாசலம்.
ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அலை இயக்கவியல் (கடல் அலைகளின் இயக்கம்), வண்டல் நகர்வு (கடல் நீரால் நகர்த்திச் செல்லப்படும் திடத் துகள்கள்) மற்றும் கடற்கரையோர செயல்முறைகளை ஆய்வு செய்வதற்கும், உருவகப்படுத்துவதற்கும் (Simulate) வடிவமைக்கப்பட்டதே ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் என்கிறார் அவர்.
இந்த திட்டத்திற்கு தேவையான பெரும்பாலான கருவிகள் ஐஐடி மெட்ராஸ் குழுவால் தயாரிக்கப்பட்டவையே எனக் கூறும் பேராசிரியர் ஸ்ரீராம், “சில பொருட்கள் இங்கு கிடைக்காததால் அதை மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இது புதிய துறைமுகங்கள், கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என இந்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்” என்றார்.
துறைமுகங்கள் போன்ற கடற்கரையோர கட்டமைப்புகள், கடலின் நிலப்பரப்பு மற்றும் வண்டல் ஆகியவற்றில் கடல் அலைகளின் தாக்கம் குறித்து நன்கு புரிந்துகொள்ள, ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இத்தகைய ஆராய்ச்சிக் கூடம் உதவும் என்பதையும் பேராசிரியர் ஸ்ரீராம் சுட்டிக்காட்டுகிறார்.
‘ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு’
“இதன் நீளம் 95 மீட்டர், அகலம் 65 மீட்டர். தற்போது 1.25 மீட்டர் வரை உயரம் கொண்ட கடல் அலைகளை எங்களால் உருவாக்க முடியும். அதனால் தான் இது ஆசியாவின் மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம்” என்கிறார் இத்திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீ கணேஷ்.
கடலில் என்ன மாதிரியான அலைகள் உருவாகுமோ, அதேபோன்ற அலைகளை இங்கும் உருவாக்க முடியும் என்றும் கடல் சீற்றத்தின் போது உருவாக்கக்கூடிய அலைகளையும் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
மத்திய அரசின் ‘துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின்’ (National Technology Centre for Ports and Waterways and Coasts- NTCPWC) உதவியுடன் இந்த ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த ‘NTCPWC’ என்பது துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள் மற்றும் மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு மையமாகும்.
“செயற்கை அலைகளை உருவாக்குவதற்காக, 152 கருவிகள் (Wave makers) இந்தக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி, இந்த கூடத்தில் எந்த திசையில் இருந்தும் செயற்கை அலைகளை உருவாக்கலாம். ஒரே நேரத்தில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளலாம்” என்று கூறுகிறார் ஸ்ரீ கணேஷ்.
இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக் கூடத்திற்கு கட்டுப்பாட்டு மையம் என தனியாக ஏதும் கிடையாது என்பது தான் ஆச்சரியமான உண்மை.
“ஒரு மடிக்கணினியில், ‘Wave generation’ எனும் மென்பொருள் மூலம் இந்த 152 செயற்கை அலைகள் உருவாக்கும் கருவிகளை கட்டுப்படுத்தலாம். எந்த மாதிரியான அலைகள், எந்த வேகத்தில், எவ்வளவு உயரத்தில் வேண்டும் என்பதை அந்த மென்பொருளில் உள்ளீடு செய்தால் போதும்” என்கிறார் திட்டப் பொறியாளர் சரவணன்.
இந்த ஆராய்ச்சி கூடத்தில் கடல் அலைகள் மற்றும் கடற்கரையோர கட்டமைப்புகள் தொடர்பான சோதனைகள் மட்டுமல்லாது, உள்ளூர் நீர்வழி அமைப்புகள் குறித்த சோதனைகளையும் மேற்கொள்ள முடியும் என்கிறார் சரவணன்.
“இந்த கூடத்தை நிரப்ப பல லட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். ஒரு முறை நிரப்பி ஆய்வு செய்துவிட்டு, சில சோதனை கட்டமைப்புகளை மாற்ற தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்காக, அதை வெளியேற்றி, மற்றொரு தொட்டியில் சேமித்து வைத்து, மீண்டும் பயன்படுத்துவோம்.” என்கிறார் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீ கணேஷ்.
இதுபோன்ற செயற்கை அலைகள் உருவாக்கும் அமைப்புகள் சில கேளிக்கை பூங்காக்களில் உள்ளன என்றாலும், இந்த கூடத்தின் தனித்துவத்தையும் ஸ்ரீ கணேஷ் விளக்குகிறார்.
“கேளிக்கை பூங்காக்களில் இருப்பது, மொத்தமாக அலை வடிவத்தில், ஒரே திசையில் நீரை வெளியேற்றும் கட்டமைப்புகள். ஆனால் இந்த கூடத்தில் கடலில் உருவாவது போன்றே வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடைவெளியில், வேகத்தில் அலைகளை உருவாக்க முடியும். கடலில் ஒரே திசையில் இருந்து அலைகள் கரையை நோக்கி வராது, பல்வேறு திசைகளில் இருந்து வரும். அதையும் எங்களால் இங்கு உருவாக்க முடியும்” என்கிறார்.
சுனாமி, புயல் பாதிப்பை தடுக்க எவ்வாறு உதவும்?
ஒரு கப்பல் துறைமுகத்திற்குள் நுழையும் போது, அலைகளின் தாக்கம் இல்லாத பகுதி என்பது இருக்க வேண்டும். அப்போது தான், கப்பல்கள் பாதுகாப்பாக வந்து செல்ல முடியும். அத்தகைய பகுதிகளை கட்டமைக்க, பலப்படுத்த இந்த ஆய்வின் தரவுகள் உதவும் என்கிறார் பெருங்கடல் பொறியியல் துறையின் பேராசிரியர் முரளி.
இந்தியாவின் பொருளாதாரத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்காற்றுவதைக் குறிப்பிடும் முரளி, “புதிய துறைமுகங்களின் திட்டமிடுதல் மற்றும் கட்டமைப்பிற்கு மட்டுமல்லாது, ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களின் பராமரிப்பிற்கும் இந்தத் தரவுகள் அவசியம்” என்கிறார்.
அதேசமயம், கடற்கரையோரம் வாழும் மக்களுக்கும் இந்த ஆய்வுகளின் தரவுகள் உதவியாக இருக்கும் என்று கூறும் பேராசிரியர் முரளி, “சுனாமி போன்ற பேரலைகளை செயற்கையாக உருவாக்கி அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், அத்தகைய அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி கடலில் தடுப்புகளை அமைக்கலாம், கடற்கரையோர கிராமங்களை கட்டமைக்கலாம்” என்று கூறுகிறார்.
கடலில் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்களை செயல்படுத்த, காற்றாலைகளை நிறுவ, கடல் அலைகள் குறித்த தரவுகள் உதவும். அதேபோல, கடற்கரைப் பகுதிகளில் நிகழும் மண் அரிப்பு, கள்ளக்கடல் நிகழ்வு (கடல் நீர் திடீரென வீடுகளுக்குள் புகுவது) போன்றவற்றை தடுப்பதற்கான பணிகளில் இந்தத் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறார் முரளி.
ஆனால், கடலில் நிலவும் சூழல் என்பது கணிக்க முடியாததாக இருக்கும். அப்படியிருக்க இந்த இடத்தில் அதே மாதிரியான சூழலையும், பல்வேறு வகையான அலைகளையும் செயற்கையாக உருவாக்க முடிந்தது எப்படி? என்பதையும் அவர் விளக்கினார்.
“இதை ஸ்கேல் எஃபெக்ட் (Scale effect) என்போம். அதாவது ஒரு மிகப்பெரிய அமைப்பின் சூழலை அப்படியே சிறிய அமைப்பிற்குள் கொண்டுவருவதில் இருக்கும் விசைகளின் வேறுபாடு. உதாரணத்திற்கு, துறைமுகங்கள் அல்லது கடற்கரைப் பகுதிகளில் நிலவும் அதே புவிஈர்ப்பு விசையை, இங்கே கொண்டு வர வேண்டும். அதை செய்வதன் மூலம் கடலில் கிடைக்கும் அளவுக்கு துல்லியமான தரவுகள் இங்கே கிடைக்கும்” என்று விளக்கினார்.
“இதுபோன்ற அமைப்புகளுக்காகவும், தரவுகளுக்காகவும் இதுவரை சில குறிப்பிட்ட நாடுகளைச் சார்ந்து இருந்தோம். இனி அந்த நிலை இருக்காது. இத்திட்டம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும்போது பிற நாடுகளும் துறைமுக வடிவமைப்புகளுக்காக நம்மிடம் வருவார்கள்.” என்கிறார் பேராசிரியர் முரளி.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு