ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கு கடந்த அரசாங்கத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் : முன்னாள் ஜனாதிபதி ரணில் ! on Sunday, January 12, 2025
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இது சிறந்த வொரு யோசனையாகும். ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமின்றி எந்தவொரு கட்சிக்கும் இந்த முன்னணியில் இணைவதற்கு அழைப்பு விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தொகுதி அமைப்பாளர் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டனர். இதன் போது கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க. பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கும் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையில் கொழும்பு – பிளவர் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
1991ஆம் ஆண்டு குற்றப்பிரேரணை ஊடாக ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவடையவிருந்தது. அன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கட்சியைப் பாதுகாத்து என்னிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் பொறுப்புக்களை நான் ஏற்றுக் கொண்டேன். தற்போது தலதா அத்துகோரளவிடம் அந்த பொறுப்புக்களை ஒப்படைத்திருக்கின்றேன். அவர் சகல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தனது பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்.
இங்கு நீங்கள் அனைவரும் வருகை தந்துள்ளமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்வியாகவோ ஐக்கிய தேசிய கட்சியின் மாபெரும் வெற்றியாகவோ கருதக் கூடாது.
ஐக்கிய தேசிய முன்னணியின் உருவாக்குவதென்றால் அதில் அனைத்து கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது எமது பிரதான இலக்கு யானையை பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும்.
எனவே எமக்குள் யாருடைய வெற்றி அல்லது யாருடைய தோல்வி என்ற பேதங்களும் கருத்து முரண்பாடுகளும் இருக்கக் கூடாது.
ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கு கடந்த அரசாங்கத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
அதன் பின்னர் இந்த முன்னணியின் பாதுகாத்துச் செல்ல வேண்டியது உங்கள் அனைவரதும் பொறுப்பாகும். ஆனால் யார் இணைந்தாலும் யானை சின்னத்திலேயே போட்டியிடுவோம்.
அடுத்த வாரத்துக்குள் கடுவலை தொகுதியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணியை நிறுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் அதனை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த பயணத்தை வெற்றியடைச் செய்ய வேண்டும் என்றார்.