2022ல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சிக் கால புதிய அரசியலமைப்பு வரைவைக் கைவிட்டு புதிய ஆலோசனைகளை சகல கட்சிகளிடமும் கேட்டுப் பெற்றார். என்ன நடந்தது? கடந்த வருட தேர்தல் கால உரைகளில் நல்லாட்சிக்கால வரைவை மையப்படுத்தி அனைவரும் ஏற்கும் புதிய அரசியல் வரைவு தயாரிக்கப்படுமென அநுர குமார கூறினார். இதற்கு மூன்று வருடங்கள் தேவையென இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்இ இவரது தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் நிகழ்நிரலில் இது காணப்படவில்லை.
இன்னும் மூன்று வாரங்கள் கழிந்தால் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் அநுர அரசு மூழ்கிவிடும். நாட்டின் படைபலத்தை காட்சிப்படுத்துவதே இந்நாளின் முக்கிய இலக்கு.
சிங்கள இனம் ஆளும் வர்க்கமாகவும்இ தமிழினம் ஆளப்படும் வர்க்கமாகவும் இருப்பதால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்ப் பகுதிகளிலுள்ள அரசாங்க அலுவலகங்களும் பாடசாலைகளும் சுதந்திர தினத்தை அரசாங்க நிகழ்வாக மேற்கொள்வதே வழக்கம்.
ஆனால்இ காலாதிகாலமாக தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இது கரிநாளாகவே இருந்து வருகிறது. கடந்த ஏழு தசாப்தமாக தமிழ் மக்களின் தேசிய கொடியாக கறுப்புக் கொடியே இருந்து வருவதையும்இ நமோ நமோ தாயே என்ற பாடலுக்குப் பதிலாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
2022ம் ஆண்டு கோதபாய கையளித்த ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஓர் அறிவித்தலை விடுத்தார். 2023 சுதந்திர தின விழாவின்போது இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் திட்டத்தை தாம் அறிவிக்கப்போவதாக தெரிவித்த இவர்இ இதற்கான ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் வேண்டினார். 2024 செப்டம்பரில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற்றப்படும்வரை எதுவுமே நடைபெறவில்லை.
மைத்திரி சிறீசேனவுடன் இணைந்து நல்லாட்சி நடத்திய காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல காரியங்கள் இடம்பெற்றன. நூறுக்கும் அதிகமான அமர்வுகள் இடம்பெற்று புதிய அரசியலமைப்புக்கான வரைவு தயாரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் என்ன நடந்தது என்பது தனிவரலாறு. எதிர்காலத்தில் இது மாணவர்களுக்கு சரித்திரப் பாடமாலாம்.
நல்லாட்சிக்கால அரசியல் யாப்பு தயாரிப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி மும்முரமாக ஈடுபட்டிருந்தது. அவர் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் பெரும் எடுப்புகளை இவ்வேளையில் மேற்கொண்டதை அனைவரும் அறிவர். ஆனால் அந்த வரைவுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. எனினும்இ சுமந்திரனின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வகையில் அவரை தங்களின் சட்ட மாஅதிபர் என்று ரணில் ஷமகுடம்| சூட்டியதை வஞ்சகப் புகழ்ச்சி என்று எல்லாரும் கூறுவர்.
இது தொடர்பான மறக்க முடியாத ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அந்த வேளையில் சுமந்திரன் கனடாவுக்கு விஜயம் செய்தபோது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்திருந்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில் பின்வரும் வகையில் அமைந்திருந்தது: ‘நான் அரசியல்வாதியல்ல. சட்டத்தொழில் புரிபவன். இனப்பிரச்சனைத் தீர்வுக்கான புதிய அரசியல் யாப்பை நிறைவு செய்வது எனது பணி. இதனை நிறைவு செய்ததும் அரசியலிலிருந்து விலகி விடுவேன்” என்று பதிலளித்திருந்தார்.
தற்செயலாக அரசியலமைப்பு நிறைவேறத் தவறின் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோதுஇ அரசியலிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருந்தார். இதன்படிஇ அரசியலமைப்பு வந்தாலும்சரி வராவிட்டாலும்சரி இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறிய சுமந்திரன்இ கடந்த வருட பொதுத்தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும் அரசியலைவிட்டு விலகாது கட்சியில் பதவிகளுக்குப் போட்டியிட்டு தோல்விகளைச் சுமந்து கொண்டிருப்பது தமிழர் அரசியலில் புதுமையான வரலாறு. இவரிடமிருந்து தமிழரசுக் கட்சியை காப்பாற்ற கடவுளாலும் முடியாதென்று இப்போது கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா இருந்தால் கூறியிருக்கக்கூடும்.
ரணிலைத் தோற்கடித்து புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அநுர குமார தேர்தல்கால பரப்புரைகளின்போதுஇ நல்லாட்சிக் கால அரசியல் யாப்பை கையிலெடுத்து சகலரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை மையப்படுத்திய புதிய அரசியமைப்பை உருவாக்கப் போவதாக கூறிவந்தார். இவரது பதவியின் நூறு நாட்கள் முடிவடைந்துவிட்டது. புதிய அரசியல் யாப்பு பற்றி எதுவுமே சொல்லக் காணோம். அடுத்த மாதம் வரவுள்ள சுதந்திர தின வேளையில்இ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி அறிவிக்கப்படுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோன்றுதான் தேர்தல் காலத்தில் தாம் சொன்னதை அநுர குமாரவும் மறந்துவிட்டார்போல் தெரிகிறது. வசதி கருதிய மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு தீராத நோய்.
ஆனால்இ இதனை அவருக்கு நினைவூட்ட வேண்டிய தமிழர் தரப்பு – குறிப்பாக தமிழ்த் தேசிய தரப்பினரும் அதனை செய்வதற்கு மறந்துள்ளனர். புதிய அரசியல் திட்டம் பற்றிய முக்கோணச் சந்திப்புகளும்இ எதிரும் புதிருமானவர்களுடைய கருத்துப் பரிமாற்றங்களும் ஜோராக நடந்து வருகின்றனவாயினும்இ நல்லாட்சிக் காலத்தில் தயாரான யாப்புப் பற்றி பேசுவதை ஒரு துடக்காகவே கருதுவதுபோல் தெரிகிறது. ஆனால்இ தெற்கில் இரண்டு மூத்த அரசியல்வாதிகள் இதுபற்றி கருத்துக் கூறி வருகின்றனர். ஒருவர் தினேஸ் குணவர்த்தன மற்றவர் திஸ்ஸ விதாரண.
இவர்கள் இருவரும் ஆயுட்கால இடதுசாரிகள். தினேஸின் தந்தை பிலிப் குணவர்த்தன லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபகர். இக்கட்சியின் தற்போதைய தலைவர் திஸ்ஸ விதாரண. தினேஸ் குணவர்த்தன இப்போது எம்.ஈ.பி. என அழைக்கப்படும் மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவர். இவர்கள் இருவரும் மகிந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். கோதபாய மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது பிரதமர் பதவி வகித்தவர் தினேஸ் குணவர்த்தன.
தாங்கள் முக்கிய பதவிகள் வகித்த அரசாங்கங்களிடம் தமிழ் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க துணிவான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள்இ மாக்சிச ஜனாதிபதி அநுர குமாரவிடம் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருப்பதை எவ்வாறு பார்க்கலாம். புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பது அல்லது தங்களுடைய எதிர்கால அரசியலுக்கு விதை போடுவது என்றே இதனை நோக்க வேண்டியுள்ளது.
13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்இ இதுவரை காலமும் நடைமுறைச் சட்டங்களினூடாகவும் தமிழர்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பினூடாக தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்று இந்த இடதுசாரிகள் இருவரும் பொது வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல தடவைகள் புதிய அரசியல் யாப்புப் பற்றி பேசப்பட்டதாயினும் எந்த அரசாங்கமும் இதனை நிறைவேற்றவில்லை என்றும்இ முதலாளித்துவ தரப்பினரான இவர்கள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ள இவர்கள்இ அதே முதலாளித்துவ அரசாங்கங்களில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் என்பதை மறந்துவிட்டனர்.
1972ம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருந்த அரசியல் அதிகாரங்களும் நீக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்குப் பொறுப்பான அமைச்சராகவிருந்தவர் லங்கா சமாசமாஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா. ஷஇரு மொழிகள் என்றால் ஒரு நாடு – ஒரு மொழி என்றால் இரு நாடுகள்| என்று அறைகூவி இலங்கை பிளவுபடாதிருக்க வேண்டுமென்றால் தமிழர்;களின் உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென குரல் கொடுத்து வந்த கொல்வின் ஆர்.டி.சில்வாவே தமிழினத்தின் ஆகக்குறைந்த உரிமைகளைக் கூட புதிய அரசியலமைப்பில் இல்லாமற் செய்த பிதாமகர் என்பதை தினேஸ் குணவர்த்தனவும் திஸ்ஸ விதாரணவும் மறந்திருப்பது விநோதமானது.
இடதுசாரிகளான இவர்கள் புதிய அரசியலமைப்புக்குக் குரல் கொடுக்கும் அதேவேளையில் அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டு வரும் கருத்து முற்றிலும் மாறுபட்டது. வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமாக இல்லை. பொருளாதார பிரச்சனையே உள்ளது என்று கூறியுள்ளதன் ஊடாக இரண்டு காய்களை ஒரே கல்லில் அவர் வீழ்த்த எத்தனிக்கிறார்.
முதலாவது – இனப்பிரச்சனையென்பது வடக்கில வாழும் மக்களுக்கு மட்டுமே உள்ளது என்று பிரித்துக் காட்ட எத்தனிப்பது. இரண்டாவது – ஏற்கனவே நீதிமன்ற வழக்கினூடாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்தது போன்று அரசியல் தீர்விலும் இரு மாகாணங்களையும் பிரித்து வைப்பது. ஆகஇ வடக்கும் கிழக்கும் ஒரு போதுமே தீர்வு விடயத்தில் ஒன்றுபடக்கூடாது என்பதில் ஜே.வி.பி. மிகவும் கூர்மையாகச் செயற்படுவதை இங்கு அவதானிக்க முடிகிறது.
பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்டவில்லையென்ற குரல் அநுர குமாரவின் அந்நாட்டு விஜயத்தின் பின்னர் மேலெழுந்துள்ளது. பிரதமர் மோடி இவ்விடயம் தொடர்பாக அநுர குமாரவுடன் உரையாற்றத் தவறிவிட்டாரென்ற குற்றச்சாட்டும் பல மட்டங்களில் உள்ளது.
கடந்த வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதுஇ இப்போது இருப்பவைகளை சரியாகப் பயன்படுத்துங்கள். இல்லாதவைகளை தொடர்ந்து கேட்பதில் பிரயோசனம் இல்லையென்றவாறு இவர் தெரிவித்த இக்கருத்தே இந்தியாவின் நிலைப்பாடு.
புதிய அரசியலமைப்பில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்படுமென்று அநுர குமார கூறுவதை செயற்படுத்த மூன்று வருடங்களாகுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியென்றால் அடுத்த பொதுத்தேர்தல் காலம்வரை இதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால்இ ஜே.வி.பி.யின் நிகழ்நிரலில் புதிய அரசியலமைப்புத் திட்டம் இல்லையென்பது அநுர குமாரவுக்கும் அவரது தோழர்களுக்கும் நன்கு தெரியும். இதனை எப்போது இவர்கள் பகிரங்கப்படுத்துவார்கள்?