by wp_fhdn

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் காயங்களுடன் சடலமாக மீட்பு – தொழிற்சாலை ஊழியர் கைது ! on Sunday, January 12, 2025

முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துலுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் 45 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தலையில் காயங்களுடன் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

ஹலாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் விஜயகடுபொத என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், சம்பவம் இடம்பெற்ற போது இரவு கடமையில் ஈடுபட்டிருந்துள்ளார்.

தொழிற்சாலை ஊழியர்கள் சடலத்தைக் கண்டுபிடித்ததுடன், சுமார் 1.4 மில்லியன் ரூபாய் பெட்டகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் முந்தலம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அன்றைய தினம் மாலை, பத்துலுஓயா பகுதியில் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியரான கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ரூ. 141,000 பணம் மீட்கப்பட்டதுடன் அது திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதி என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. முந்தலம பொலிஸாரும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்