லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: ஏற்படக் காரணம் என்ன? மோசமாக தொடர்ந்து எரிவது ஏன்?- முழு விவரம்
- எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் & டாம் மெக்ஆர்தர்
- பதவி, பிபிசி நியூஸ்
லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம் 16 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தையே கலங்கச் செய்துள்ள காட்டுத்தீயின் சமீபத்திய நிலவரம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
காட்டுத்தீயின் தற்போதைய நிலவரம் என்ன?
பாலிசேட்ஸில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ, இப்போது 20,000 ஏக்கருக்கும் அதிகமாகப் பரவியுள்ளது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றனர்.
காட்டுத்தீ கிழக்கு நோக்கி நகர்கிறது. உலகப் புகழ்பெற்ற கலை அருங்காட்சியகமான கெட்டி மையத்தின் தாயகமான பிரெண்ட்வுட்டில் நெருப்பு பரவும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த அபாயத்தைத் தொடர்ந்து கெட்டி மையம் காலி செய்யப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைப்பதற்காகக் காத்திருக்கின்றனர். ஈட்டன் காட்டுத்தீயில் 11 பேரும், பாலிசேட்ஸ் காட்டுத்தீயில் மேலும் ஐந்து பேரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் 153,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். கூடுதலாக, 166,000 பேருக்கு வெளியேற வேண்டிய நிலை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் 12,000க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளன. கட்டமைப்புகள் என்றால் வீடுகள், வெளிப்புற கட்டுமானங்கள், கொட்டகைகள், மொபைல் வீடுகள் மற்றும் கார்களை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்
ஈட்டன் காட்டுத்தீ விபத்தில் 7,000க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. பாலிசேட்ஸ் காட்டுத்தீயில் குறைந்தபட்சம் 426 வீடுகள் உள்பட சுமார் 5,300 கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் கட்டாய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஈட்டன் காட்டுத்தீ விபத்துப் பகுதியில் 19 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இருவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள், திருட்டு, கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அதில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த பரோலில் இருந்த ஒருவரும் அடக்கம்.
சாலைகளை மூடுவது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, அந்தப் பகுதி முழுவதும் சுமார் 400 தேசிய காவல்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அக்குவெதரின் முதல்கட்ட மதிப்பீட்டின்படி, இந்தக் காட்டுத்தீ விபத்து அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரியதாக மாறக்கூடும், இது 135 பில்லியன் முதல் 150 பில்லியன் டாலர் வரை சேதம் ஏற்படுத்தக்கூடும்.
கட்டுமானங்கள், உடைமைகள் போன்ற சொத்துகள் சேதமடைந்ததன் மதிப்பு காரணமாக, காப்பீட்டு இழப்புகள் எட்டு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளை இழந்த பிரபலங்களில் மெல் கிப்சன், லைட்டன் மீஸ்டர் மற்றும் சில நாட்களுக்கு முன்பு கோல்டன் குளோப்ஸில் கலந்துகொண்ட ஆடம் பிராடி, பாரிஸ் ஹில்டன் ஆகியோரும் அடங்குவர்.
காட்டுத்தீ எங்கெல்லாம் பரவியுள்ளது?
கலிஃபோர்னியா தீயணைப்புத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பரவலான பகுதியில் நான்கு காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன
பாலிசேட்ஸ்: செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) முதல் காட்டுத்தீ இங்கு வெடித்தது. மாகாண வரலாற்றிலேயே இது மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாக மாறக்கூடும். இது 23,654 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதிகளில் பரவி எரித்துள்ளது. இதில் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியும் அடக்கம். சனிக்கிழமை மாலை நிலவரப்படி இந்தக் காட்டுத்தீயில் 11% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஈடன்: இது லாஸ் ஏஞ்சலிஸின் வடக்குப் பகுதியைத் தாக்கியது. அல்டடேனா போன்ற பகுதிகள் வழியாகப் பரவியுள்ளது. இது இப்பகுதியில் இரண்டாவது பெரிய காட்டுத்தீயாகக் கருதப்படுகிறது. இதில், சுமார் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதிகள் தீக்கிரையாக்கின. தற்போது 15% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஹர்ஸ்ட்: சான் ஃபெர்னாண்டோவின் வடக்கே அமைந்துள்ள இந்தப் பகுதியில் செவ்வாக்கிழமை இரவு தொடங்கிய காட்டுத்தீ, 799 ஏக்கருக்கு பரவியது. தற்போதைய நிலவரப்படி, 76% கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கென்னத்: இந்தக் காட்டுத்தீ வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் வென்ச்சுரா கவுன்டிகளின் எல்லையில் தொடங்கியது. இதுவரை 1,052 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. அதன் பரவல் நிறுத்தப்பட்டு, 90% நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் எந்தக் கட்டமைப்புகளும் சேதமடையவோ அழிக்கப்படவோ இல்லை.
முன்னதாக, ஆர்ச்சர், சன்செட், லிடியா, உட்லி, ஒலிவாஸ் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காட்டுத்தீயை எதிர்கொள்ள லாஸ் ஏஞ்சலிஸ் தயாராக இருந்ததா?
சில தீயணைப்பு குழாய்களில் நீர்வரத்து தீர்ந்துபோனதைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் தயார்நிலை குறித்த அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
நீரேற்றக் குழாய்கள் நீர் அழுத்தத்தை இழந்தது மற்றும் சான்டா யினெஸ் நீத்தேக்கம் விபத்து ஏற்பட்ட நேரத்தில் மூடப்பட்டு, காலியாக இருந்தது ஏன் என்பது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கலிஃபோர்னியாவின் ஆளுநர் கேவின் நியூசம் கூறியுள்ளார்.
தீயணைப்புக்குப் பயன்படுத்தும் நீரேற்றக் குழாய்களில் நீர் வரத்து இல்லாத காரணத்தால், சில வீடுகளையும் பாதைகளையும் பாதுகாக்கும் முயற்சி கடினமானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்திட்டமிடப்பட்டிருந்த கானா பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய மேயர் கேரென் பாஸ், லாஸ் ஏஞ்சலிஸின் தயார்நிலை, நெருக்கடிக் காலத்தில் அவரது தலைமை மற்றும் தண்ணீர்ப் பிரச்னைகள் குறித்த கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார்.
சனிக்கிழமையன்று, அவசரநிலையைக் கையாள்வது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், ஒரு செய்தியாளர் சந்திப்பில், “இப்போது, லாஸ் ஏஞ்சலிஸ் மக்களுக்கு உதவுவதும், இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதும்தான் இப்போது எங்கள் முதன்மையான, மிக முக்கியமான கடமை” என்று தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்புத் துறையின் தலைவர், பட்ஜெட்டை குறைப்பது அவசரக்காலங்களில் எதிர்செயலாற்றும் திறனைக் குறைப்பதாக எச்சரித்து ஒரு மெமோ அனுப்பியுருந்தார். அதாவது, அவசரநிலைகளைச் சமாளிக்கப் போதுமான நிதி இல்லையெனக் குறிப்பிட்டிருந்தார்.
சனிக்கிழமையன்று, லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட தீயணைப்புத் துறையின் தலைவர் ஆன்டனி மர்ரோன், தனது துறை தயாராக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
முதல் காட்டுத்தீ ஏற்படுவதற்கு முன்பே போதுமான பணியாளர்களும் தேவையான உபகரணங்களும் இருப்பதை உறுதிசெய்வதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அவர் கூறினார்.
மேலும், “இந்தப் பேரிடருக்குக் காரணம் முன்தயாரிப்பு இல்லாமையோ அல்லது முடிவெடுப்பதில் பற்றாக்குறையோ அல்ல. இதுவோர் இயற்கைப் பேரிடர்,” என்றும் மர்ரோன் கூறினார்.
கடந்த வியாழக்கிழமையன்று, லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் தவறுதலாக எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டதால், காட்டுத்தீ அச்சுறுத்தல் குறித்த கவலை அதிகரித்தது. இது, அபாயகரமான நிலையில் இல்லாத லாஸ் ஏஞ்சலிஸ்வாசிகள் சிலரிடையே கோபத்தையும் ஏற்படுத்தியது.
சனிக்கிழமையன்று காலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நகர அதிகாரிகள் ஒரு மென்பொருள் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று விளக்கமளித்தனர். இது “ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதோடு, இப்படி மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக, கலிஃபோர்னிய மாகாண அவசர அறிவிப்பு அமைப்புடன் கூட்டு சேர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காட்டுத்தீ ஏற்படக் காரணம் என்ன?
புலனாய்வாளர்கள் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறுகிறார், லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியின் ஷெரிஃப் (காவல்துறை அதிகாரி) ராபர்ட் லூனா.
அனைத்து சாத்தியக்கூறுகளும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பொதுவாக, காட்டுத்தீ ஏற்படுவதற்கு மின்னல் காரணமாக இருக்கும். ஆனால், பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீ விபத்துகளுக்குக் காரணம் அதுவல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோக, காட்டுத்தீக்கு பொதுவான காரணங்களாக அறியப்படும், வேண்டுமென்றே தீ வைப்பது அல்லது மின் இணைப்புகளில் உள்ள சிக்கல்களால் தீ பரவுவது போன்றவை குறித்து அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை அல்லது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2022-23ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் மழைக்காலத்தில் தாவரங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. அவை கடந்த ஆண்டு வறட்சியில் காய்ந்து, நன்கு எரிவதற்கு ஏதுவான நிலையை அடைந்தன.
கடந்த அக்டோபர் முதல் நிலவும் வறண்ட பருவநிலையும், 0.4 செ.மீ. என்ற அளவிலான மிகக் குறைந்த மழைப்பொழிவும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் பதிவானது. அதோடு, சான்டா ஆனா காற்று என அழைக்கப்படும் சக்திவாய்ந்த கடலோரக் காற்றும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
பிபிசியின் வானிலை அறிவிப்பாளர் சாரா கீத்-லூகாஸ், அடுத்த வாரம் வரை இந்தப் பகுதியில் மழை பெய்வதற்கான எந்த முன்னறிவிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காற்றின் வேகம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஞாயிறு முதல் திங்கள் வரை காற்று மீண்டும் அதிகரிக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்திருந்தனர்.
காலநிலை மாற்றத்தின் பங்கு என்ன?
பலத்த காற்றும் மழையின்மையும் காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தாலும், காலநிலை மாற்றம் நிலைமைகளை மாற்றி, இத்தகைய தீ விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கலிஃபோர்னியா உள்பட மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதி பல்லாண்டுக் காலமாக அனுபவித்த வறட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனால், இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாறியது.
சமீபத்திய ஆண்டுகளில் வறண்ட மற்றும் ஈரமான காலங்களுக்கு இடையிலான ஊசலாட்டங்கள் எரிவதற்குத் தயாராக இருந்த பெரிய அளவிலான வறண்ட தாவரங்கள் உருவாக வழிவகுத்தது.
மேற்கு அமெரிக்காவில் பெரிய மற்றும் கடுமையான காட்டுத்தீயில் காலநிலை மாற்றத்தின் பங்கு இருப்பதாக அமெரிக்க அரசின் ஆராய்ச்சி தெளிவாகக் கூறுகிறது.
உயரும் வெப்பநிலை, நீடித்த வறட்சி, தாகம் நிறைந்த வளிமண்டலம் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள், மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயின் அபாயத்தையும் அளவையும் அதிகரிப்பதில் முக்கிய உந்துதலாக உள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது.
பொதுவாக, மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டம் தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் மாதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இப்போது இத்தகைய தீ விபத்துகள் ஒரு நிரந்தரப் பிரச்னையாக மாறிவிட்டதாக ஆளுநர் முன்னர் சுட்டிக்காட்டினார்.
அதுகுறித்துக் கூறியபோது அவர், “இங்கு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலம் காட்டுத்தீ பருவகாலமாக இல்லை, ஆண்டு முழுவதுமே காட்டுத்தீ பருவமாகத்தான் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.