பல்லடம் மூவர் கொலை வழக்கில் 40 நாட்கள் கடந்தும் பிடிபடாத குற்றவாளிகள் – காவல்துறை என்ன சொல்கிறது?

பல்லடத்தில் மூவர் கொலையில் 43 நாட்களாகியும் பிடிபடாத குற்றவாளிகள்

படக்குறிப்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில், 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய 9 படைகள் பணியாற்றி வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அலகுமலை –சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவருடைய மனைவி அலமேலு (வயது 75) ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் தோட்டத்தில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் இருந்தனர். ஐடி ஊழியரான செந்தில்குமார், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார். மகள் பத்மாவதி, சென்னிமலையில் தனது கணவர் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று, காலை 6 மணியளவில் இவர்களின் தோட்டத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த வலுவூரான் என்கிற என்ற நபர், தெய்வசிகாமணிக்கு முடித்திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் ஏராளமான ரத்தக் காயங்களுடன் தெய்வசிகாமணி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் அலமேலுவும், செந்தில்குமாரும் படுகாயங்களுடன் இறந்து கிடந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சத்தமிட்டு அருகிலுள்ள தோட்டக்காரர்களை அழைத்து, தெய்வசிகாமணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்துபோன 40 நாட்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக 14 படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் கொலை சம்பவம் நடந்து, 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவுமில்லை.

இந்நிலையில், தமிழக காவல்துறையைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜனவரி 9ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை டிசம்பர் 6ஆம் தேதி, தான் சந்தித்துப் பேசியதாகவும், அன்றைக்கே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியதாகவும் கூறிய அண்ணாமலை, ஒரு மாதமாகியும் பதில் இல்லாததால் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜனவரி 9-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

படக்குறிப்பு, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ”ஒரு சம்பவத்தில் குற்றவாளியை காவல்துறை கைது செய்யாவிட்டால், அந்தக் குற்றவாளிக்கு அச்சம் போய்விடும். கூலிப்படை தொடர்ந்து இயங்கத் துவங்கும்.

காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இப்பகுதியில் வாழும் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி, தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்து இதை வலியுறுத்துவோம்” என்றார்.

அண்ணாமலை நடத்திய இந்தப் போராட்டத்துக்குப் பின், இந்த கொலை வழக்கு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

அண்ணாமலையால் போராட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில், விழிப்புணர்வு பரப்புரையை காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

பண்ணை மற்றும் தோட்டத்து வீடுகளில் சிசிடிவி பொருத்தவும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் தோட்டங்களில் உள்ளவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வருகின்றனர்.

‘ஒரே பாணியில் மூன்று சம்பவங்கள்’

பல்லடம் மூவர் கொலை வழக்கில் 40 நாட்களுக்கு மேலாகியும் பிடிபடாத குற்றவாளிகள் - காவல்துறை என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மூவர் கொலைச் சம்பவத்தில் அரசியல் ரீதியாக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை என்று பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனத் தலைவரும், ஓய்வுபெற்ற கோவை மாநகர காவல் உளவுத்துறை உதவி ஆணையருமான ரத்தினசபாபதி, மூவர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டது குறித்து சில கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

”அதே பகுதியில் இதே பாணியில் தோட்டத்து வீடுகளில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு சம்பவத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

மற்ற இரண்டு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது இந்தக் கோணத்தை வலுவாக்குகிறது” என்று ரத்தினசபாபதி தெரிவித்தார்.

காவல்துறையின் மீது உறவினர்கள் நம்பிக்கை

காவல்துறையின் மீது உறவினர்கள் நம்பிக்கை

படக்குறிப்பு, மூவர் கொலை சம்பவத்தில் அரசியல் ரீதியாக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன

கொல்லப்பட்ட மூவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களைக் கொல்லும் அளவுக்கு யாருக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

சம்பவத்துக்கு முந்தைய நாளில், ஒரு திருமண நிகழ்வுக்காக தோட்டத்து வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தனது சகோதரி பத்மாவதியை சென்னிமலையில் காரில் இறக்கிவிட்டுத் திரும்பியதாகக் கூறிய அவர்கள், அன்று அவர் தோட்டத்தில் தற்செயலாகத் தங்கியதாகக் கூறினர்.

செந்தில்குமாரின் மனைவி கவிதா, யாரிடமும் பேச விரும்பாத நிலையில், பிபிசி தமிழிடம் பேசிய பெயர் கூற விரும்பாத நெருங்கிய உறவினர் ஒருவர், ”எங்களுக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் நாங்கள் சொல்லிவிட்டோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுவது வருத்தமாக இருந்தாலும் எப்படியும் கண்டிப்பாக சரியான குற்றவாளிகளை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவினாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ”சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி விசாரணையைத் தொடர்கிறோம்,” என்று தெரிவித்தார்.

விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”அந்த வழக்கில் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்லும் அளவில் ‘க்ளூ’ எதுவும் இதுவரை கிடைக்கவில்லை,” என்றார்.

மேலும், “மொத்தம் 9 அணிகளாகப் பிரிந்து, பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எந்தவிதமாக விசாரணையைத் தொடர வேண்டுமென்று சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். காவல்துறையினரும் மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். வழக்கு முக்கிய கட்டத்தில் இருப்பதால் வேறெதையும் இப்போதைக்குக் கூற முடியாது” என்று தெரிவித்தார்.