ஏவாள் உண்மையில் யார்? ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவர் என்பதற்கு புது விளக்கம்
- எழுதியவர், எடிசன் வீகா
- பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
-
உலகின் முதல் பாவியாகவும் கீழ்ப்படியாமையின் உருவகமாகவும் பார்க்கப்படுபவர், ஏவாள். பாம்பினால் தூண்டப்பட்டு, தடை செய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடத் தேர்வு செய்தவர். அதுமட்டுமின்றி ஆதாமுக்கும் அதையே அவர் வழங்கினார்.
அந்தச் செயலால் அவர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டனர். பின்னர் அதுவே ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
இதுவே, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் தொடக்க நூலிலும் யூதர்களின் புனித நூலான தோராவில் உள்ள பெரேஷித் நூலிலும் உள்ள மையப் புள்ளி.
யூத-கிறிஸ்தவ கலாசாரங்களுக்கான அடிப்படைக் கதையை நாம் கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டு கால ஆணாதிக்கத்தை அதில் இணைத்தால், ஏவாள் பாவத்தின் உருவகமாகிறார்.
ஆணின் வீழ்ச்சிக்கும், தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தின் முடிவுக்கும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொண்டதற்கும் காரணமானானவராகக் கருதப்படுகிறார் ஏவாள்.
ஏவாளின் கதாபாத்திரம் மற்றும் அவரது செயல்கள் குறித்தான நுணுக்கமான புரிதலைத் தெளிவுபடுத்துவதற்காக, பல சமகால ஆய்வுகள் உலகின் உருவாக்கம் பற்றிச் சொல்லப்படும் கதைகளை மறுவிளக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முன்னதாக, 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கன்னியாஸ்திரி ஜோனா சௌத்காட் (1750-1814) என்பவர் ஏவாள் உலக மீட்பில் கொண்டுள்ள பங்கைக் குறிப்பிட்டார்.
இந்தக் கதைக்கு அவர் அளித்துள்ள மறுவிளக்கத்தில், “ஏவாள் மனித குலத்திற்கு அறிவைக் கொண்டு வந்தார். அதனால் சொர்க்கமாகக் கருதப்படும் ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று, இப்போது சாத்தானை தோற்கடித்து மனித குலத்தை விடுவிக்கும் பொறுப்பைக் கொண்டவராகவும் ஏவாள் பார்க்கப்படுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது விளக்கத்தில், சாத்தானைக் குறிக்கும் பாம்புதான் எல்லா தீமைகளின் உண்மையான தோற்றம். மாறாக ஏவாள் அல்ல என்றும் கன்னியாஸ்திரி ஜோனா கூறுகிறார்.
கடந்த 1869ஆம் ஆண்டில், முக்கிய பிரிட்டிஷ் ஆர்வலரும் சிந்தனையாளருமான ஹாரியட் லா, ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் கதாபாத்திரத்தை மறுஆய்வு செய்வதைச் சுற்றியுள்ள சர்ச்சையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.
அடக்குமுறையைக் கையாளும் ஆணாதிக்க அமைப்புகளுக்கு எதிரான பெண்ணிய செயல்பாட்டின் அடையாளமாக ஏவாளை ஹாரியட் லா வகைப்படுத்தினார்.
மேலும் “சொர்க்கமாகக் கருதப்பட்ட ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டதற்காக” ஏவாளை ‘சபிப்பதற்கு’ பதிலாக அவருக்கு ‘மரியாதை’ செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு சர்வாதிகார கடவுளின் விருப்பத்திற்கு எதிராக உலகுக்கு அறிவைக் கொண்டு வந்தார்’ என ஹாரியட் லா குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் பெண்களுக்கு எதிராக நிலவிய மரியாதையற்ற சூழலுக்கு எதிராகப் போராடி, வரலாற்றில் முதல் பெண்ணியவாதியாக ஏவாள் நிலைபெற்றார். இதனால் உலகெங்கிலும் உள்ள பல பெண்களால் ஏவாள் எனும் விவிலிய கதாபாத்திரம் மதிக்கப்படுகிறது.
மறுவரையறை செய்யப்படும் ஏவாள்
பல பெண்ணிய இறையியலாளர்கள், புனித நூல்களின் மொழிபெயர்ப்பாளர்கள், சமகால கல்வியாளர்கள் முதல் பெண்ணான ஏவாளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
“இன்று, ஏவாள் ஒரு புதிய வழியில் பார்க்கப்படுகிறார். ஆணாதிக்க கடவுளை எதிர்த்த ஒருவராகப் பார்க்கப்படுவதாக மட்டுமல்ல, மாறாக உயிர்களின் தாயாகவும் தற்போது பார்க்கப்படுகிறார்” என்று ரியோ டி ஜெனிரோவின் பொன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் (PUC) பேராசிரியர் மரியா கிளாரா பிங்கெமர் விளக்குகிறார்.
“அனைத்து வகையான உயிர்களும் உருவாகக் காரணமாகவுள்ள பூமியைப் போன்றவர்” என்றும் அவர் ஏவாளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அகஸ்தீனிய கன்னியாஸ்திரி மற்றும் பெண்ணிய தத்துவவாதியான ஐவோன் கெபரா, “நாம் எங்கிருந்து வந்தோம்’, ‘நம்மை உருவாக்கியது யார்’ என்பதை விளக்குவதற்கு, தொடக்க நூலில் கூறப்படும் கதை உள்பட, பழங்காலத்தில் ‘வெளிவந்த அனைத்து அறிக்கைகளும் புராணங்களாகக் கருதப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
“மனிதன் உருவான விதத்தைக் கூறும் இந்தக் கதைகளில், ஏவாளை பலவீனமாகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவராகவும் கருதுவதில் இருந்து, தடை செய்யப்பட்ட பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், தெய்வீக கட்டளைகளுக்கு எதிரான மீறல் சக்தியாக மாறுவதற்கு ஏவாள் ஆசைப்படுவது வரை,” ஏவாள் குறித்த விளக்கங்கள் வெவ்வேறாக உள்ளன என்றும் அவர் கருதுகிறார்.
“ஏவாள் மற்றும் பிற பெண் கதாபாத்திரங்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துவது இலக்கியத்திற்கும், குறிப்பாக விவிலிய இறையியலுக்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும்” என்று இத்தாலியின் ரோமில் உள்ள பொன்டிஃபிகல் அர்பானியானா பல்கலைக்கழகத்தின் இறையியலாளர், தத்துவவாதி மற்றும் பேராசிரியரான ஸ்காலப்ரினிய கன்னியாஸ்திரி எலிசாங்கேலா சாவ்ஸ் டயஸ் கூறுகிறார்.
சமூகவியலாளரும் மானுடவியலாளருமான ஃபேபியோலா ரோடன், ரியோ டி ஜெனிரோவின் பெடரல் பல்கலைக்கழகத்தில் 1995ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட “புனிதத்தின் பெண்ணியம்” என்ற தனது முதுகலை ஆய்வறிக்கையில், இயேசுவின் தாயான மேரியை போலவே, பெண்ணிய இறையியலுக்கு ஏவாளும் முக்கியமானவர் என்று வாதிட்டார்.
“அனைத்து பெண்களின் மீதும் சுமத்தப்படும் உண்மையான பாவத்திற்கு’ ஏவாள் பொறுப்பாளியாகக் கருதப்படுவதாலேயே இந்த முக்கியத்துவம் உள்ளது என்பதை ரோடன் எடுத்துக்காட்டுகிறார்.
இருப்பினும், “ஆதாமிய புராணத்தின்” விளக்கத்தை மறுபரிசீலனை செய்வது ஒரு சிக்கலான மற்றும் சவாலான பணி என்பதை ரோடன் ஒப்புக்கொள்கிறார்.
“பெண்கள் இன்றுவரை அனுபவிக்கும் ‘சமூகவியல் தாழ்வுநிலையை’ அடையாளம் காண கிறிஸ்தவத்தின் வேர்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட அகஸ்தீனிய கன்னியாஸ்திரி மற்றும் பெண்ணிய தத்துவவாதியான ஐவோன் கெபராவை போன்றே இறையியலின் அவசியத்தை இந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்டுகிறார்.
ஏவாளும் மனித பலவீனமும்
ரோடன் தனது முதுகலைப் பட்டத்தில், கெபராவின் நூல்களைப் படித்தார். காலப்போக்கில், ஏவாளுக்கும் மேரிக்கும் இடையே ஒரு மாறுபாடு உருவாக்கப்பட்டு, அவர்களை “பெண்மையின் இரண்டு சின்னங்களாக” முன்வைப்பதாக ஐவோன் கெபரா நம்புகிறார்.
“பொதுவாக ஏவாள் பாவமுள்ள பெண்ணின் அடையாளமாகவும், மேரி புனிதமான பெண்ணின் அடையாளமாகவும் காணப்பட்டாலும், இந்த பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு சவால் விடும் புதிய பார்வையை கெபரா முன்மொழிகிறார்” என்று ரோடன் கூறுகிறார்.
“பெண்ணிய சக்தியின் மீட்பராக ஏவாளை நாங்கள் காண்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
மனிதர்களுக்கு “ஏவாளின் செயல்கள் தொந்தரவாகக் காணப்படுகின்றன. ஏனெனில் அவை மனித பலவீனம், சோதனையை எதிர்க்கும் இயலாமை மற்றும் மனிதர்களுக்கு இருக்கும் மர்மமான சக்தி ஆகியவற்றைக் காட்டுகின்றன” என்று அவர் எடுத்துரைக்கிறார்.
“ஏவாள் குறித்த கட்டுக்கதையுடன் தொடர்புடைய பலவீனமும் மர்மமும் வரலாறு முழுவதும் அனைத்து பெண்களுக்கும் கடத்தப்படுகின்றன” என்று கல்வியாளர் விளக்குகிறார்.
“ஒவ்வொரு பெண்ணும் ஏவாளாகப் பார்க்கப்படுகிறார், மனித குலத்தின் வீழ்ச்சி, பலவீனம், ஆசை, சோதனை, பாவம் ஆகியவற்றிற்குக் காரணமாக ஏவாளைப் போன்றே ஒவ்வொரு பெண்ணும் கருதப்படுகிறார்” எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“மனிதகுலத்தை பாவத்திற்கு இட்டுச் செல்லும் வழியாக” சொல்லப்படுவது ஏவாளுடைய கதையின் ஒரு பகுதி மட்டுமே என்பதை பிங்கெமர் வலியுறுத்துகிறார். இதற்கு அப்பால் அவருடைய குணாதிசயம் குறித்து விவரிக்க இன்னும் நிறைய உள்ளது என்கிறார் பிங்கெமர்.
“பாவம் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதால், பெண்கள் மரணத்துடன் இணைக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.” இருப்பினும், இந்தப் பார்வை பைபிளில் இருந்து வரவில்லை, ஆனால் பிற்கால விளக்கங்களில் இருந்து வந்தது என்று எச்சரிக்கிறார் அவர்.
அதுமட்டுமின்றி “பைபிளும் அந்தக் கருத்துகளுக்கு எதிராகச் சொல்வதாகவும்” அவர் வலியுறுத்துகிறார்.
“அந்த மனிதன் தனது மனைவியை ஏவாள் என்று அழைத்தார், ஏனென்றால் அவர் உயிருள்ள அனைவருக்கும் தாய்.” (தொடக்க நூல் – 3:20)
“ஈவ்’ என்ற பெயருக்கு (ஹீப்ருவில்) ‘வாழும் அவள்’ அல்லது ‘வாழ்க்கையின் ஆதாரம்’ எனப் பொருள்” என்றும் அச்சொல்லுக்கான ஆதாரங்களை அவர் அளிக்கிறார்.
விளக்கங்களின் கலை
“இருபதாம் நூற்றாண்டில் இருந்து, நாங்கள் தீவிரமாக தொன்மங்களைப் படிக்கத் தொடங்கியுள்ளோம். இந்த தொன்மங்கள், மனித இருப்பின் பல மர்மங்களை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்கிறார் கெபரா.
“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆதாமோ அல்லது ஏவாளோ உண்மையான மனிதர்கள் அல்ல. அவர்கள் நமது சொந்த வாழ்வின் நிச்சயமற்ற தன்மைகளையும் மனித இருப்பு குறித்த கேள்விகளையும் பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்ட அடையாள உருவகங்கள்” என்கிறார் கெபரா.
அப்போதுதான் விவிலிய விளக்கவியல் உருவானது. “பைபிளை இன்னும் அறிவியல் முறையில் விளக்கும் கலை” என்று அதை கெபரா வரையறுக்கிறார்.
“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு நபரும் ஆதாம் மற்றும் ஏவாளையும், கவர்ந்திழுக்கும் பாம்பையும் பிரதிபலிக்கிறார்கள். மேலும் அவை சுதந்திரத்தை நோக்கிய மனிதர்களின் தேடலையும், அதற்காக அவர்கள் எல்லைகளை உடைப்பதையும் அடையாளப்படுத்துகின்றன,” என்றும் கன்னியாஸ்திரி விளக்குகிறார்.
“அதாவது, வலிமை மற்றும் பலவீனம், பயம் மற்றும் தந்திரம், எதிர்த்தல் மற்றும் நம்மைப் புரிந்துகொள்வதற்கான நிலையான தேடல் உள்ள கலவைதான் நாம்” என்று கன்னியாஸ்திரி விவரிக்கிறார்.
“மற்றவர்களைப் பற்றி பேசும் கட்டுக்கதை உண்மையில் நம்மைப் பற்றி பேசுகிறது, நம்மை விவரிக்கிறது, நம்மை வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி, வரலாற்றில் நடந்தவற்றில் இருந்து இது மிகவும் வித்தியாசமானது. “துரதிர்ஷ்டவசமாக”, ‘இருவேறு பிரிவுகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. அது ஆணில் இருந்து பெண்மையையும், நன்மை தீமையையும், நீதி அநீதியையும் பிரிக்கிறது. இரண்டு பிரிவுகளும் ஒரே பக்கத்தில் இருக்க முடியாது என்பது போலக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
“வெவ்வேறு குணங்களின் கலவையாக இருக்கிறோம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இன்று ஆதாமும் ஏவாளும் மறுவரையறை செய்யப்படுகிறார்கள்,” என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார்.
“மனிதர்கள் செயல்படும் முறைகளிலும், தங்களை வெளிப்படுத்திக் கொள்வதிலும், தங்களைப் புரிந்துகொள்வதிலும் வெவ்வேறு வகைகளில் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறார்கள்” என்று கெபரா குறிப்பிடுகிறார்.
“கிளர்ச்சி மற்றும் வீரத்திற்கு அப்பால் நம்மைப் பற்றிய ஓர் ஒற்றுமையான புரிதலை” தேடுவதற்காக, மனிதகுலம் இந்த இரட்டை வாதங்களைக் கடக்க வேண்டும் என அவர் வாதிடுகிறார்.
எவ்வாறாயினும், “ஏவாளை ஒரு கதாநாயகியாகவும், ஆதாமை பலவீனமாகவும் வேறுவிதமாகவும் முத்திரை குத்துவது மிகவும் மேலோட்டமானது என்றும், இந்த அணுகுமுறை சிக்கலானது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“நாங்கள் இவற்றையெல்லாம் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று அவர் விருப்பம் தெரிவிக்கிறார்.
மேலும் முன்னேற, உண்மையான அர்த்தத்தை வெளிக்கொணர பாரம்பரிய ஆணாதிக்க விளக்கங்களை அகற்றும் முக்கிய சவாலை நாம் சமாளிக்க வேண்டும் என்று “தி பைபிள் அண்ட் பெமினிசம்” எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார், இறையியலாளர் ஹோலி மோர்ஸ்.
ஏவாள் பற்றிய கதைகள்
“பல நூற்றாண்டுகளாக, கல்வி ஒரு ஆணின் தனிச்சிறப்பாக இருந்தது. இறையியல் மற்றும் விவிலிய ஆய்வு அதில் இன்னும் அதிகமான ஆண்களை உள்ளடக்கியிருந்தது” என்கிறார் சாவ்ஸ் டியாஸ்.
மொழிபெயர்ப்புகளிலும் இதேதான் நடந்துள்ளது. இன்று, சாவ்ஸ் தியாஸ் போன்ற பெண்கள் புனித நூல்களை மொழிபெயர்ப்பதில் பங்களிக்கிறார்கள், இது முந்தைய நூற்றாண்டுகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை.
“விவிலிய உரையின் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம், சொற்பொழிவுகள், மொழிபெயர்ப்புகள், இறையியல் கல்வி மற்றும் விவிலிய வெளியீடுகள் ஆகிய அனைத்தும் அதிகாரத்தில் உள்ளவர்கள், சிறந்த சொற்பொழிவாளர்கள், ஆன்மீக ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் பிறர் மூலம் மக்களைச் சென்றடைந்தது,” என்று அவர் சுருக்கமாக விளக்குகிறார்.
தொடக்க நூலே உலகின் உருவாக்கம் பற்றிய இரண்டு கதைகளைக் கொண்டுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். ஒன்று முதல் அத்தியாயத்திலும் மற்றொன்று இரண்டாவது அத்தியாயத்திலும் உள்ளது.
தொடக்க நூல் அதிகாரம் 1இல், “கடவுளால் உருவாக்கப்பட்ட கடைசிப் படைப்பு மனிதனே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “எந்த இடத்திலும் இந்த வசனம், ஆணின் முதன்மைத் தன்மையையோ, மேன்மையையோ அல்லது பெண்களின் பலவீனம் பற்றியோ குறிப்பிடவில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஏவாள் பற்றிச் சொல்லப்பட்ட கதைகளில் இருந்து “முற்றிலும் எதிரான பொருளில் அது உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கடவுள் மனிதர்களை தம் உருவத்திலும் சாயலிலும் படைத்தார், ஆணும் பெண்ணுமாய் அவர்களைப் படைத்தார் ” என்று அந்தப் பகுதி கூறுகிறது.
“ஆதாம் ஆணோ பெண்ணோ அல்ல, ஆனால் கடவுளின் சாயலில் உள்ள முழு மனிதன்” என்று இறையியலாளரும் மொழிபெயர்ப்பாளருமான அவர் வாதிடுகிறார்.
“ஆணும் பெண்ணும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மீண்டும் கூறுகிறார். விவிலிய எழுத்தாளர் இரண்டு முறை இதைத் தெரிவிப்பதன் மூலம் இக்கருத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.
அவரது கூற்றுப்படி, இது “சமத்துவத்தின் இறையியல்” என்று அழைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக கடவுளிடம் இருந்து ஒரே பணி வழங்கப்படுகிறது என்று கற்பிக்கிறது. ஆனால், இதுவொரு புதிய பார்வையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.
இடைக்காலத்தின் பிற்பகுதியில், இத்தாலிய தத்துவவாதியும் கவிஞருமான கிறிஸ்டினா டி பிசானோ (1363-1430) கடவுளுடைய படைப்பின் நன்மை குறித்து விவாதிக்கும் போது பெண்களை ஒதுக்கிவிட முடியாது என்ற உண்மையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார்.
அதனால், ஆண்கள் “சரியானவர்கள்” என்பது போலவே பெண்களும் “சரியானவர்கள்” என்று வாதிட ஏவாளின் கட்டுக்கதையைப் பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, பெண்களை இழிவுபடுத்துவது கடவுளை அவமதிப்பதற்குச் சமம் என்று அவர் இறையியல் ரீதியாக வாதிட்டார்.
பண்டைய மத்திய கிழக்குப் பகுதியில், மன்னர்கள் மட்டுமே “கடவுளின் உருவங்களாக” கருதப்பட்டனர், மற்ற மனிதர்கள் அவர்களுக்கு சேவை செய்வதாகக் கருதப்பட்டனர் என்று சாவ்ஸ் டயஸ் விளக்குகிறார்.
அந்தக் கண்ணோட்டத்தில், அனைத்து மனிதர்களையும் “கடவுளின் உருவம்” என்று விவரிக்கும் ஒரு புரட்சிகர பார்வையை இந்தக் கண்ணோட்டம் விவரிக்கிறது.
“பாபிலோனிய ஆதிக்கத்தின் கீழ், இஸ்ரேல் இருந்தபோது நாடு கடத்தப்பட்ட சூழலில் இந்தக் கருத்தின் உண்மைத் தன்மையை நாம் கற்பனை செய்யலாம்” என்று இறையியலாளர் கூறுகிறார்.
ஆண், பெண் பங்கு பற்றிய சிந்தனை
தொடக்க நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் தோன்றும் மனிதகுலப் படைப்பின் இரண்டாவது அதிகாரத்தில், ஆதாம் முதல் மனிதனாகப் படைக்கப்பட்டார்.
சொற்பிறப்பியல் ரீதியாக, ஆதாம் என்ற பெயருக்கு “பூமியில் இருந்து எடுக்கப்பட்டவர்” என்று பொருள். அது முழுக்க முழுக்க மனிதனைப் பிரதிபலிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.
“மனிதர்கள் தனிமையில் இருப்பதைக் கண்டு, கடவுள் அவர்களுக்கு ஒரு துணையை உருவாக்க முடிவு செய்தார். கடவுள் மனிதனை உறங்கச் செய்து, ஒரு பக்கத்தை எடுத்து (ஹீப்ருவில் ‘ட்சேலா’) பெண்ணைப் படைத்தார்,” என்றும் பிசானோ குறிப்பிடுகிறார்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான உண்மை உள்ளதாகக் கூறி அவர் விளக்குகிறார். அதாவது, பைபிளின் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், ‘ட்சேலா’ என்ற எபிரேய வார்த்தை ‘விலா எலும்பு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக கிறிஸ்டினா டி பிசானோ சுட்டிக்காட்டுகிறார்.
“பல நூற்றாண்டுகளாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக தாழ்வு மனப்பான்மை இருப்பதாக விளக்குவதற்கு அடிப்படையாக, இந்த மொழிபெயர்ப்பு அமைந்தது” எனவும் அவர் விளக்குகிறார்.
மேலும் அதே பகுதியை பின்வருமாறு மொழிபெயர்க்க அவர் பரிந்துரைக்கிறார். “பின்னர் அவர் அதன் பக்கங்களில் ஒன்றை எடுத்து சதையால் மூடினார். அவர் மனிதனிடம் இருந்து எடுத்த பகுதியைப் பயன்படுத்தி, கடவுள் ஒரு பெண்ணை உருவாக்கினார்.”
“எபிரேய உரையின்படி, பெண் ஆணுக்கு ஒரு துணை. மாறாக உதவியாளர் அல்ல” என்று சாவ்ஸ் டயஸ் தெளிவுபடுத்துகிறார். எபிரேய மொழியில் ஹெல்ப்(எஸிர்) என்ற சொல்லின் பொருள் மிகவும் சுவாரஸ்யமானது.
“அது பொதுவாக ஒரு தெய்வீகப் பண்பு, மனிதனுக்கு கடவுள் உதவி செய்பவர், அது இல்லாமல் இருக்கவோ வாழவோ முடியாது என்றும் இது பெண்களின் செயல்பாடு என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.”
எபிரேய சொல்லான “கெனெக்டோ” பயன்படுத்தப்பட்ட மற்றொரு இடத்தை மொழிபெயர்ப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆணுக்கு ஏற்ற துணையாகப் பெண் படைக்கப்பட்டார் என்று அதற்குப் பொருள். அதாவது “எதிராக, முன்னும் பின்னுமாக, அருகில்” என்பது இச்சொல்லுக்கான பொருளாகக் கருதப்படுகிறது.
“அதாவது, உங்களுக்கு முன்னால், உங்களுக்கு சமமாக உள்ள ஒருவராக பெண் இருக்க வேண்டும்” என்று அச்சொல் பொருள்படுவதாக அவர் வலியுறுத்துகிறார்.
மேலும் “எப்போதுமே எபிரேய வாசகம் பெண்களைவிட ஆண்களின் மேன்மையை உறுதிப்படுத்தவோ அல்லது ஆண்களைவிட பெண்களின் தாழ்வு மற்றும் கீழ்ப்படிதலை உறுதிப்படுத்தவோ அனுமதிக்காது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இடைக்கால தத்துவஞானி கிறிஸ்டினா டி பிசானோவை பொருத்தவரை, ஏவாளுக்கு முன் ஆதாம் படைக்கப்பட்டதால், ஆண்களே முக்கியமானவர்கள் என்று சொல்வது தவறு.
அதுமட்டுமின்றி, மனிதனை உருவாக்கிய அனுபவத்தைப் பெற்ற பிறகு பெண்ணைப் படைத்ததால், கடவுளின் படைப்பு சக்தி மேம்பட்டது என்பது அவரது கருத்து.
“பைபிள் ஒரு திறந்த புத்தகம்,” என சாவ்ஸ் டயஸ் வலியுறுத்துகிறார்.
“வாழ்க்கையின் பொருள், தங்களுக்குள், கடவுளுடன், மற்றவர்களுடன் மற்றும் பிரபஞ்சத்துடன் உள்ள ஆண் மற்றும் பெண்ணின் பங்கு பற்றி மக்களைச் சிந்திக்க வைப்பதால் பைபிளும் அதன் பிற நூல்களுக்கும் முக்கியமானவை” என்று அவர் கூறுகிறார்.
“ஏவாள் பல அம்சங்களையும், பல்வேறு அர்த்தங்களையும் கொண்ட ஒரு தொன்மையான கதாபாத்திரம்” என்றும், “வாழ்க்கையின் அடிப்படையான, முக்கியமான கேள்விகளைப் பற்றிச் சிந்திக்க மக்களைத் தூண்டுவதும், சவால் விடுவதும் அவரது கதைக்கு முக்கியமானது” என்கிறார் சாவ்ஸ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.