ரணிலால்தான் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

by adminDev

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைப்பாடுகளே இதற்கு பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் புதன்கிழமை பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தவிசாளர் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு ஒருநாளுக்கு தேவையான அரிசியின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எனவே அதனை பணம் கொடுத்தோ அல்லது இலவசமாக வழங்கினாலுமோ தட்டுப்பாடு ஏற்படாது. இதனை நாம் அனுபவம் அற்ற தன்மை எனக் கூறுகிறோம்.

 2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விவசாயிகள் விவசாய நிலங்களில் இருக்கவில்லை. பயிர்ச்செய்கை மேற்கொள்ளாமல் உரமின்றி மண்வெட்டிகளுடன் வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அப்போது விவசாய நிலங்கள் வெறுமையாகவே இருந்தன.

அந்த இக்கட்டான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி போதுமான உரத்தையும் பெற்றுக்கொடுத்து அவர்களை விவசாய நிலங்களுக்கு அனுப்பி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து எம்மால் 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்ய முடிந்தது.அதேபோன்று எம்மால் 61 ஆயிரத்து 600 மெற்றிக்தொன் நெல்லையும் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு கிட்டியது.

மேலும் 2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் பெரும்போகத்தில் 3.2 மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்தது. கடந்த வருடம் மே ஆகஸ்ட் வரையிலான சிறுபோகத்தில் 2.6 மில்லியன் மெற்றிக்தொன் நெல்லை எம்மால் உற்பத்தி செய்ய முடிந்தது.

இதற்கமைய பல வருடங்களுக்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில்  இலங்கை அரிசி உற்பத்தியில் திருப்தி அடைந்தது. இதன்காரணமாகவே 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் காலப்பகுதியில் 20 இலட்சத்து 85 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசியை எம்மால் வழங்க முடிந்தது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு அவர்களது சுகாதார நிலைமை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் இவ்வாறு அரிசியை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனாலேயே ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஆட்சி செய்வதற்கு அனுபவம் முக்கியம் என்றார்.

முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைபாடு இதற்கு பிரதான காரணமாகும். தற்போது நாட்டில் அனுபவம், திறமையின்மையே அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்றார்..

தொடர்புடைய செய்திகள்