கடந்த பத்து வருடங்களை கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2024ஆம் ஆண்டாகும்போது 228,000ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பத்து வருடங்கள் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்துள்ளது.
2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன் 2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளது.
அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது.
சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது.
குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.