ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?

தாலிபன், ஆப்கானிஸ்தான், ஐசிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான்
  • எழுதியவர், நதீம் அஷ்ரஃப்
  • பதவி, பிபிசி ஆப்கானிஸ்தான்

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அடுத்த பிப்ரவரியில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB), ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை என்ற தங்கள் நிலைப்பாடு தொடரும், ஆனால் ஆப்கானிஸ்தான் சம்பந்தப்பட்ட ஐசிசி நிகழ்வுகளில் பங்கேற்போம் என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிச்சர்ட் கோல்ட், “தனிப்பட்ட உறுப்பினர்களின் ஒருதலைப்பட்சமான செயல்களைக் காட்டிலும் ஐசிசி மட்டத்திலான அணுகுமுறை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நசிம் டேனிஷ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தடை செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

தாலிபன், ஆப்கானிஸ்தான், ஐசிசி

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்திய அவர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டிகளில் விளையாடுவதை படிப்படியாக நிறுத்தக்கூடும் என்றும் பிபிசியிடம் கூறினார்.

“ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒன்று நடந்தால், தேசத்தின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் கடைசி ஆதாரத்தையும் இழக்கக் கூடும். கல்வி, வேலை மற்றும் பிற உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட பெண்களின் உரிமைகள் தொடர்பான தற்போதைய நிலைமை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் நிரந்தரத் தடையை எதிர்கொள்ளும் என்று அஞ்சுகிறேன்.” என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஆப்கானிஸ்தானிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆப்கானியர்களுக்கு கிரிக்கெட் “நம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணங்களின் ஆதாரமாக” உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பெண்களின் உரிமைகளில் தாலிபன் கடுமையான போக்கை கையாளக் கூடாது. இல்லையெனில் பாதிப்பு ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டை மட்டுமல்லாது மற்ற துறைகளையும் பாதிக்கும் என்று நசிம் டேனிஷ் வலியுறுத்துகிறார்.

“ஆப்கானிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டால், ஐசிசி நிதியளிப்பது நின்றுவிடும். ஸ்பான்சர்களை இழக்கக்கூடும். உள்நாட்டு கிரிக்கெட் மறைந்துவிடும். யாரும் விளையாட மாட்டார்கள். ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் முற்றிலும் அழிந்துவிடும்” என்றார் அவர்.

ஆப்கனை இடைநீக்கம் செய்ய கோரிக்கை

தாலிபன், ஆப்கானிஸ்தான், ஐசிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டால், ஐசிசி நிதியளிப்பது நின்றுவிடும். ஸ்பான்சர்களை இழக்கக்கூடும்.

சமீபத்தில், வடக்கு அயர்லாந்தின் முன்னாள் அமைச்சர் பரோனஸ் ஃபோஸ்டர், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக, பிரிட்டனின் பெண்ணுரிமை ஆர்வலர்கள் மற்றும் பியர்ஸ் மோர்கன் போன்ற முக்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் தெளிவாக உள்ளன. தாலிபன் அரசாங்கத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் “நசுக்கப்பட்டுள்ளன” என அவர்கள் கருதுகின்றனர். பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பெண்கள் விளையாடுவதற்கான தடை என அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் தெளிவாக உள்ளன.

பிரிட்டனின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான பியர்ஸ் மோர்கன் தனது X பக்கத்தில் ” இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஆண்கள் அணி, பிப்ரவரி 26 அன்று ஐசிசி சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது. அந்த ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் தடை செய்வது உட்பட, தாலிபன்களின் அருவருப்பான மற்றும் மோசமான அடக்குமுறை, மனசாட்சிக்கு விரோதமானது. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.

ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?

தாலிபன், ஆப்கானிஸ்தான், ஐசிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூன் 2024இல் வங்கதேச அணியை 8 ரன் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியை தடை செய்வது அல்லது இடைநிறுத்துவது தொடர்பான விவாதத்தை பெரிதுபடுத்தாமல் வேண்டுமென்றே ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.

ஒரு நாட்டை முழு உறுப்பினராக அல்லது டெஸ்ட் விளையாடும் நாடாக அங்கீகரிப்பதற்கான ஐசிசியின் நிபந்தனைகளில் ஒன்று, அந்த நாட்டில் பெண்கள் அணி இருக்க வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்கள் கிரிக்கெட் அணி இல்லை.

ஐசிசி இதை ஒரு முக்கியமான விஷயமாகக் கருதாமல், இந்த நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சமீபத்திய கருத்துகள் இந்த விஷயத்தில் ஐசிசி அமைப்பிற்குள் மேலும் விவாதங்களைத் தூண்டலாம்.

ஐசிசியைப் பொறுத்தவரை, உலகளவில் கிரிக்கெட் விளையாட்டை வளர்த்து விரிவுபடுத்துவதே முதன்மையான நோக்கமாக இருக்கும். ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் கண்டுள்ளது.

சில ஆசிய நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க முனைகின்றன. ஆனால் தற்போதைய முக்கியமான பிரச்னைகளால் ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் வாரியங்கள் ஏற்கனவே தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

சமீபத்தில், இந்தியரான ஜெய் ஷா ஐசிசி தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் ஐசிசி அமைப்புக்குள் ஆப்கானிஸ்தானின் நிலையை பலப்படுத்துவார் என்று பலர் நம்புகிறார்கள்.

இந்த விவாதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்க வேண்டும் என்னும் கருத்தை பலமுறை வலியுறுத்தியுள்ளது. அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக இதுபோன்ற பிரச்னைகளில் விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நாடுகளை வலியுறுத்துகிறது.

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணி 1970 ஆம் ஆண்டில் இனவெறி (Apartheid) காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீதான அழுத்தம்

தாலிபன், ஆப்கானிஸ்தான், ஐசிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணியின் சின்னம், மூவர்ணக் கொடி மற்றும் முந்தைய அரசாங்கத்தின் தேசிய கீதம் என எதுவும் மாற்றப்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியை மட்டுமே தாலிபனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அணியை மாற்றவோ அல்லது அதன் மீது செல்வாக்கு செலுத்தவோ முடியவில்லை;

ஆப்கானிஸ்தான் அணியின் சின்னம், மூவர்ணக் கொடி மற்றும் முந்தைய அரசாங்கத்தின் தேசிய கீதம் என எதுவும் மாற்றப்படவில்லை. இன்னமும் சர்வதேச மைதானங்களில் ஆப்கானிஸ்தான் அணியால் அவை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

தாலிபன் அரசாங்கத்தின் கொடியை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

ரஷீத் கான் மற்றும் முகமது நபி உட்பட பல கிரிக்கெட் வீரர்கள், ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றி பலமுறை பேசியுள்ளனர். அவை குறித்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தாலிபன் அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை ஆஸ்திரேலியா ரத்து செய்ததை தொடர்ந்து, சில வீரர்கள் `பிக் பாஷ் லீக்’ போன்ற ஆஸ்திரேலியாவின் வணிக ஆட்டங்களை விட்டு வெளியேறினர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான சர்ச்சைக்குரிய விவாதங்கள், அணி வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறார் நசிம் டேனிஷ்.

அணியை சுற்றியிருக்கும் அழுத்தங்களை பற்றி வீரர்கள் பெரிதுப்படுத்தவில்லை என்ற போதிலும், ஆப்கானிஸ்தானின் தேசிய அணிக்காக விளையாடி உயர்மட்ட கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களை இது பாதிக்கும்.

வர்த்தக ரீதியான லீக்குகளில் விளையாடும் பல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஆனால் தேசிய அணிக்காக மட்டுமே விளையாடுபவர்கள் அல்லது உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்துபவர்கள் அழுத்தங்கள் மட்டுமின்றி, ஒருவேளை தடையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

“ஆப்கானிஸ்தானின் அணி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டால், பல உள்நாட்டு வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை கைவிடுவார்கள். இளம் வீரர்கள் விளையாட்டில் ஈடுபட மாட்டார்கள். குடும்பங்கள் இனி தங்கள் குழந்தைகளை கிரிக்கெட் அகாடமிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்” என்று டேனிஷ் கூறுகிறார்.

பெண்ணுரிமை ஆர்வலர்களின் கருத்துகளில் முரண்பாடு

பெண்ணுரிமை ஆர்வலர்கள் மத்தியில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மீதான தடை குறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

தாலிபன் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர்கள் போதுமான குரல் எழுப்பவில்லை என்று கூறி, ஒரு குழு, ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை விதிக்க வேண்டும் என வாதிடுகிறது.

இருப்பினும், மற்றொரு குழு, தடை விதிப்பது நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும் என்று வாதிடுகிறது.

இந்த ஆர்வலர்களில் பலர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்து வருகின்றனர். பெண்கள் உரிமைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து குரல் எழுப்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தடை செய்யப்பட்டால், “தாலிபன்கள் தான் அதிகம் பயனடைவார்கள்” என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளில் தாலிபன் நேரடியாக தலையிடவில்லை என்றாலும், அவர்களுக்கு கிரிக்கெட் மீது குறிப்பாக காந்தஹாரில் உள்ள அவர்களின் தலைவருக்கு அதிக ஆர்வம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இருப்பினும், தாலிபன் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் சகோதரர், அனஸ் ஹக்கானி கிரிக்கெட் விஷயங்களில் தீவிர ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது.

அனஸ் ஹக்கானி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அடிக்கடி புகழ்ந்து பேசுவதுடன் சில சமயங்களில் வீரர்களை சந்தித்தும் பேசுவார்.

தாலிபன் அரசு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது பற்றி குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் மீதான அவர்களின் பொதுவான நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு