by wp_shnn

முந்தல் எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளி கொலை! புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விஜயகட்டுப்பொத பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் இந்திங்க என்ற 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு குறித்த தேங்காய் எண்ணை தயாரிக்கும் ஆலையின் மதில் ஊடாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கு இரவு நேர பாதுகாப்பு கடமையில் இருந்த காவலாளியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்து விட்டு,  அங்குள்ள அலுவலகத்தில் இருந்த பணப் பெட்டகத்தையும் உடைத்து சுமார் 13 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்தச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படவிருந்த சம்பளப் பணமே இவ்வாறு கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், இத்தாக்குதலில் மரணமானவரின் சடலம் அவர் இருந்த பாதுகாப்பு அறையில் இருந்து சுமார் 50 மீற்றருக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும் , புத்தளம் பிராந்திய தடவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்