காலனி ஆதிக்கத்தால் குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டது: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி கருத்து இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காகவே தேசிய புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்பில், தென்மண்டல அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு வேலூர் விஐடி பல்கலை.யில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை மாற்றத்துக்காகவே கொண்டுவரப்படுகிறது. மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றை மாற்றியமைக்கிறது. நாட்டை மாற்றியமைக்க இது அவசியமாகும்.
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தால் நமது கற்றல், கற்பித்தல் மாறிவிட்டது. 18-ம் நூற்றாண்டு வரை இந்தியா, உலக பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தது. ரோமானியப் பேரரசு முதல் சீனா வரை நமது சந்தைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் நமது அறிவியல், கணிதம் பற்றி தெரிந்துகொண்டனர். பின்னர், மேற்கத்திய சிந்தனைகளுடன், அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் பாரம்பரிய கல்வி முறையை மாற்றியமைத்தனர்.
ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகும் அந்தக் கல்வி முறையை நாம் பின்பற்றுவது துரதிர்ஷ்டவசமானது. குருகுல கல்வி முறையில் எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை. ஆனால், காலனி ஆதிக்கத்தால் குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டது. அறிவை உற்பத்தி செய்யும் நமது பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். எனவேதான், முந்தைய கல்வி முறைக்குத் திரும்ப முயற்சிக்கிறோம். இது ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களைவிட தரத்தில் பின்தங்கி இருப்பது ஏன்? தொழில்நுட்பத் துறையில் இன்னும் வளர வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை கல்வியின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான மதிப்பீடுகளும் இருக்க வேண்டும்.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் விதியை மாற்றியமைக்கும் நாடாக இந்தியா மாற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியாவில் 55 ஆயிரம் கல்லூரிகளும், 1,200 பல்கலைக்கழகங்களும் இருந்தபோதிலும், ஆராய்ச்சியில் நாம் பின்தங்கி உள்ளோம். கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். கல்விக் கொள்கையில் எந்த அரசின் குறிக்கீடும் இருக்கக் கூடாது. ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.
அகில இந்திய பல்கலைக்கழக சங்கத் தலைவர் வினய்குமார் பதக், பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல், துணைத் தலைவர் வி.என்.ராஜசேகரன் பிள்ளை, விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.