டங்ஸ்டன் திட்டத்தை கைவிட ஆளுநரிடம் பிரேமலதா மனு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கஞ்சா, போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல் துறை பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே 4 மணி நேரம் கழித்துதான் பதிவு செய்திருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். கைதான ஞானசேகரன் திமுக அனுதாபி என்று முதல்வரே ஒப்புக்கொள்ளும்போது, அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 சேர்த்து கொடுக்ககூட திமுக அரசால் முடியவில்லை. ‘தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சட்டப்பேரவையில் வாய் கூசாமல் சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது ரூ.1,000 கொடுத்து ஓட்டு வாங்கி வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுகவினர் மனக்கோட்டை கட்டுகின்றனர். அவர்களது எண்ணம் பலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா இடைத் தேர்தல்களையும் சந்தித்த ஒரே கட்சி தேமுதிக. ஆனால் தற்போது இடைத் தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடப்பதில்லை. திமுக ஆட்சியில் நடப்பவை அராஜக இடைத் தேர்தலாகத்தான் இருக்கும். எனவே, இதில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.